தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்ட அயாவை, தத்தெடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் முன்வருகை
குழந்தை அயா (அரபு மொழியில் அதிசயம் எனப் பொருள்) மீட்கப்பட்டபோது, தொப்புள் கொடியோடு தாயுடன் இணைந்து இருந்தாள்.
ஜிண்டேரிஸ் நகரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அயாவின் தாய், தந்தை மற்றும் அவளது நான்கு சகோதரர்களும் உயிரிழந்தனர்.
அயா இப்போது மருத்துவமனையில் இருக்கிறார்.
"அவள் திங்கட்கிழமை மிகவும் மோசமான நிலையில் வந்தாள். அவளுக்கு புடைப்புகளும் காயங்களும் இருந்தன. உடல் குளிர்ச்சியாக இருந்தது. சரியாக சுவாசிக்கவில்லை," என்று அவளைப் பராமரித்துக் கொண்டிருக்கும் குழந்தை மருத்துவர் ஹானி மரூஃப் கூறினார்.
ஆனால், இப்போது அவளது உடல்நிலை சீராக உள்ளது.
அயாவை மீட்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ஒரு கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து ஒரு நபர், உடலை தூசுகள் மூடியிருந்த நிலையில் ஒரு குழந்தையை ஏந்திக்கொண்டு ஓடுவதை அந்தக் காட்சிகள் காட்டின.
அயா பாதுகாப்பாக மீட்கப்பட்டபோது உடனிருந்த அவளது தூரத்து உறவினர் கலீல் அல்-சுவாடி, சிரியாவின் அஃப்ரின் நகரத்திலுள்ள மருத்துவர் மரூஃபிடம் புதிதாகப் பிறந்திருந்த குழந்தையைக் கொண்டு வந்தார்.
தற்போது சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கானோர் அயாவை தத்தெடுப்பதற்காக அவளது விவரங்களைக் கேட்டுள்ளனர்.
"நான் அவளைத் தத்தெடுத்து அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையைக் கொடுக்க விரும்புகிறேன்," என்று ஒருவர் கூறினார்.
குவைத் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர், "சட்ட நடைமுறைகள் என்னை அனுமதித்தால், இந்தக் குழந்தையைப் பார்த்துக்கொள்ளவும் தத்தெடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன்," என்றார்.
மருத்துவமனை மேலாளர் காலித் அட்டையா, "குழந்தை அயாவை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்து உலகம் முழுவதிலும் இருந்து தனக்கு டஜன் கணக்கான அழைப்புகள் வந்துள்ளன," என்று கூறினார்.
டாக்டர் அட்டையாவுக்கு, அவளைவிட நான்கு மாதங்களே மூத்த மகள் உண்டு. அவர், "இப்போது அவளைத் தத்தெடுக்க நான் யாரையும் அனுமதிக்கமாட்டேன். அவளது தூரத்து உறவினர் திரும்பும் வரை, நான் அவளை என் சொந்தப் பெண்ணாகப் பார்த்துக்கொள்வேன்," என்றார்.
இப்போது, அவரது மனைவி தனது சொந்த மகளோடு சேர்த்து அயாவுக்கும் தாய்ப்பால் கொடுக்கிறார்.
அயாவின் சொந்த நகரமான ஜிண்டேரிஸில், இடிந்து விழுந்த கட்டடங்களில் அன்புக்குரியவர்களை மக்கள் தேடி வருகின்றனர்.
அங்குள்ள ஒரு செய்தியாளரான முகமது அல்-அட்னான் பிபிசியிடம் பேசியபோது, "நிலைமை மிகவும் மோசமாக, பேரழிவாக உள்ளது. இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியுள்ளனர். இன்னும் மீட்கப்படாமல், வெளியே வர முடியாமல் பலர் உள்ளார்கள்," என்றார்.
நகரத்தின் 90% பகுதி அழிந்துவிட்டதாகவும் பெரும்பாலான உதவிகள் உள்ளூர் மக்களிடமிருந்து வந்ததாகவும் அவர் மதிப்பிடுகிறார்.
சிரியாவின் உள்நாட்டுப் போரில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இடிபாடுகளுக்குள் இருந்து மக்களை மீட்பதில் மிகவும் பழக்கப்பட்ட ஒயிட் ஹெல்மெட்ஸ் அமைப்பின் மீட்புப் பணியாளர்கள் ஜிண்டேய்ரிஸில் உதவி செய்து வருகின்றனர்.
"கட்டடம் எவ்வளவு நிலையற்றதாக இருக்கிறதோ அதைப் பொறுத்து மீட்க முயல்பவர்கள்கூட பலியாகலாம்," என்று முகமது அல்-கமெல் கூறினார்.
"நாங்கள் இந்த இடிபாடுகளில் இருந்து மூன்று உடல்களை வெளியே எடுத்தோம். அதில் ஒரு குடும்பம் இன்னும் உயிருடன் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். தொடர்ந்து செயல்படுவோம்," என்று அவர் கூறினார்.
சிரியாவில் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள்.
இந்த எண்ணிக்கையோடு, உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருக்கும் எதிர் தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை.
Post a Comment