Header Ads



கற்பிட்டியில் திமிங்கிலங்கள் கரையொதுங்க காரணம் என்ன..? பிரேதப் பரிசோதனையும் தொடருகிறது


இந்தியப் பெருங்கடலில் அண்மைக்காலமாக நில அதிர்வு நடவடிக்கையின் காரணமாகவே கற்பிட்டியில் 14 பைலட் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியிருக்கலாம் என கடல்சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


இலங்கையின் வடமேற்கு முனையின் கற்பிட்டியவில் உள்ள கந்தகுலியவில் அண்மையில் திமிங்கிலங்கள் கரையொதுங்கின.


இந்த பாலூட்டிகளை மீண்டும் கடலுக்குள் அனுப்ப அதிகாரிகள் சுமார் 15 மணி நேரம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். இதன்போது, 11 திமிங்கிலங்களை பாதுகாப்பாக கடலுக்குள் திருப்பி அனுப்பிய நிலையில், 3 திமிங்கிலங்கள் உயிரிழந்தன. இறந்த திமிங்கிலங்களின் பிரேதப் பரிசோதனையை முடித்த பின்னர், அது தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்தநிலையில் உள்ளூர் பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமான பல்லுயிர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கும், கடல் உயிரியலாளர் ரணில் நாணயக்கார, திமிங்கிலங்கள் இலங்கைக் கரையை அடைவதற்கு இரண்டு முக்கிய காரணங்களை குறிப்பிட்டுள்ளார்.


பைலட் திமிங்கிலங்கள், பெரும்பாலும் தங்கள் தலைவரைப் பின்தொடர்கின்றன. தலைவர் நோய்வாய்ப்பட்டால் கரையை அடைகிறார். அண்மையில் உயிழந்த 3 திமிங்கிலங்களில் ஒன்று தலைவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அத்துடன் இந்தியப் பெருங்கடலில் சமீபத்திய நில அதிர்வு நடவடிக்கைகளும் இந்த திமிங்கிலங்கள் கரையை அடையக் காரணமாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இதற்கு முன்னர் நிகழ்ந்துள்ளன, 2020 ஆம் ஆண்டில், 120 பைலட் திமிங்கிலங்கள் பாணந்துறையின் மேற்கு கடற்கரையில் கடற்கரையில் கரையொதுங்கின. கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தால் வெளியிடப்பட்ட ஸ்போலியா ஜெய்லானிகா என்ற சஞ்சிகையின் படி, இலங்கையின் கரையோரங்களில்திமிங்கிலங்கள் கரையொதுங்குவது தொடர்பான சம்பவங்கள் 1889 ஆம் ஆண்டுக்கு முந்திய காலப்பகுதியில் இருந்து இடம்பெறுவது பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதேவேளை அண்மையில் கரையொதுங்கிய திமிங்கிலங்களின் மீது சில சிறுவர்கள் ஏறியிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதனை கண்டித்துள்ள அதிகாரிகள், மிருகத்தை துன்புறுத்துதல் மற்றும் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்கள். திமிங்கிலங்கள் தண்ணீருக்கு வெளியே இருக்கும்போது, சுவாசிக்க கடினமாக இருக்கும். எனவே, மக்கள் அவற்றின் மீது ஏறினால், அது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.