ஒரு ஏணிதான் உள்ளது, எவருக்கும் விளையாட அனுமதிக்க மாட்டேன்
இவ்வாறு வீழ்ச்சியடைந்த நாட்டிற்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியத்தை தவிர உலகில் வேறு எந்த நிறுவனமும் இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதாரத் தைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு மாற்று முன்மொழிவுகள் இருப்பின், அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிப்பதற் கான வாய்ப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்ற கண்டி மாவட்ட வர்த்தகர்கள் மற்றும் சட்டத்தரணிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில அரசியல் கட்சிகள் இதற்கான முன்மொழிவுகளை முன்வைக்காமல் மக்களிடம் பொய் சொல்லி அரசியல் நாடகம் ஆடுவதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்துடன் எவருக்கும் விளையாட முடியாது எனவும் வலியுறுத்தினார்.
இந்த சவால்கள் தொடர்பில் தெரியாமல் தான் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்கவில்லை எனவும், தடைகள் வந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நிறுத்தப் போவதில்லை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள்,
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை தெளிவுபடுத்துவதற்கும், இந்நிலையிலிருந்து மீள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெறுவதற்காகவும் இன்று இச்சந்திப்பு இடம்பெறுகின்றது. நாம் இன்று கடினமான காலங்களை கடந்து கொண்டிருக்கிறோம். ஒரு வீட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது வீட்டிலுள்ளவர்கள் அதை உணர்கிறார்கள். ஒரு வணிகம் வீழ்ச்சியடைந்தால், வர்த்தகர்கள் அதை உணர்கிறார்கள். ஆனால் ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் அதை ஒட்டுமொத்த மக்களும் உணருவார்கள்.
பதினொரு மாதங்களுக்கு முன்னர் நாம் இந்த நிலையை எதிர்கொண்டோம். எங்களிடம் எரிபொருள், மின்சாரம், மருந்து எதுவும் இல்லை. ஒரு நாடு என்ற வகையில் நாம் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டோம். நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியது.
நான் ஜனாதிபதியாக பதவியேற்கும் போது இவ்வாறானதொரு பிரச்சினைக்குரிய சூழல் நாட்டில் இருந்தது. ஆனால் முறையான திட்டத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். மேலும், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்கப்பட்டன. சரியான நேரத்தில் உரங்களை வழங்கியதால், இந்த முறை பெரும்போகத்தில் வெற்றிகரமான அறுவடை கிடைத்துள்ளது.
இப்போது எரிபொருள் வரிசைகள் இல்லை. மின்சாரம் உள்ளது. அதன்படி, நாட்டின் பொருளாதாரத்தை முந்தைய நிலையை விட படிப்படியாக சிறந்த நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்று பணவீக்கம் உயர்ந்துள்ளது. வட்டி விகிதம் மிக அதிகம். அதனால், வர்த்தக சமூகம் சிரமங்களை எதிர்நோக்குவதை நாம் அறிவோம். சட்டத்தரணிகளும் தங்கள் பணியை மேற்கொள்வதில் சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. நாட்டின் பல அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியுள்ளோம் என்றே கூற வேண்டும். மேலும் பல பிரச்சினைகள் நமக்கு முன்னால் உள்ளன.
ஒரு நாடு வங்குரோத்தடையும் போது, சர்வதேச நாணய நிதியத்திடம் தான் செல்ல வேண்டும். அதைத் தவிர, ஒரு நாடு வங்குரோத்தடையும் போது உதவி செய்யும் வேறு எந்த அமைப்பும் உலகில் இல்லை. பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியே மீண்டு வந்துள்ளது. சரிந்த பொருளாதாரத்தில் இருந்து கிரீஸ் மீண்டுவர 13 ஆண்டுகள் சென்றது. பதின்மூன்று ஆண்டுகள் ஜனாதிபதி பதவியில் இருக்கும் எதிர்பார்ப்பு எனக்கு இல்லை.
இந்த வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒரே ஒரு ஏணிதான் உள்ளது. அதுதான் சர்வதேச நாணய நிதியம். பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு கதைகளை கூறி வருகின்றன. சரிந்த பொருளாதாரத்தில் இருந்து மீள்வதற்கு வேறு ஏணி இருந்தால் சொல்லுமாறு நான் அவர்களுக்கு கூறுகின்றேன்.
2019 இல் இருந்ததைப் போலவே நமது வரி வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% ஆக இருக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடுகிறது. தற்போது அது 09% ஆக குறைந்துள்ளது. நீங்கள் உங்கள் மக்களுக்கு வரிச்சலுகை வழங்குவீர்களாயின், நாம் எவ்வாறு எங்கள் மக்களிடம் அதிக வரி வசூலித்து உங்களுக்கு நிவாரணம் வழங்குவது என்று அவர்கள் எம்மிடம் கேட்கிறார்கள்.
அதனால், எமது கொள்கைகளை எதிர்ப்பவர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி முன்மொழிவுகளை சமர்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கத் தயாராக உள்ளோம். சர்வதேச நாணய நிதியம் அந்த முன்மொழிவுகளுடன் உடன்படுகிறதா என்பதைப் பார்க்க முடியும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. அதன்படி, செப்டம்பரில் அதிகாரிகள் மட்டத்தில் உடன்பாடு காண முடிந்தது. அவர்கள் எமக்கு நடைமுறைப்படுத்த பதினைந்து விடயங்களைக் முன்வைத்தார்கள். டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அதனை நடைமுறைப்படுத்த சர்வதேச நாணய நிதியம் கால அவகாசம் வழங்கியது. ஆனால் அன்று அதைச் செய்ய முடியவில்லை. பின்னர் ஜனவரி 31ஆம் திகதி வரை அவகாசம் பெற நடவடிக்கை எடுத்தோம். அப்போதும் அந்த 15 விடயங்களை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இறுதியாக பெப்ரவரி 15 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டது. பெப்ரவரி 15 ஆம் திகதி மாலை 06:00 மணிக்குள் அனைத்து விடயங்களையும் நிறைவேற்றி வாஷிங்டனுக்கு அனுப்பினோம்.
இந்தப் பதினைந்து விடயங்களில் ஒரு விடயம் மட்டுமே தாமதமாகி வருகிறது. அது மின்சார சபை கட்டண உயர்வு தொடர்பானது. மின்சார சபைக்கு வருடாந்தம் 230 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகிறது. நிறுவனங்களைப் பராமரிக்க அரசாங்க வரிகளை பயன்படுத்த வேண்டாம் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறு நடந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நாட்டில் ஒருவர் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை எதிர்த்தார். இதன் காரணமாக, சர்வதேச நிதியத்தின் ஆதரவைப் பெறுவது ஆறு வாரங்கள் தாமதமானது. இல்லையென்றால், ஜனவரி இறுதிக்குள் இதனை நிறைவுசெய்திருக்கலாம். தற்போது, எங்களுக்கு வழங்கப்பட்ட 15 விடயங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இப்போது சர்வதேச நாணய நிதியத்திற்கான சந்தர்ப்பமே உள்ளது.
எங்களுக்கு கடன் வழங்கிய பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனா என்பன கடனை மறுசீரமைக்க இணக்கம் தெரிவித்துள்ளன. அதற்குத் தேவையான நிதி உத்தரவாதத்தை வழங்கும் முறைமை பாரிஸ் கிளப்பில் உள்ளது. இந்தியாவிடம் மற்றொரு முறைமை உள்ளது. சீனா மற்றொரு முறையை நடைமுறைப்படுத்துகிறது. பாரிஸ் சமூக நாடுகள் தங்கள் சொந்த முறையைத் தவிர இந்தியாவின் முறையையும் ஏற்றுக்கொண்டன, ஆனால் சீனாவின் முறை குறித்து இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.
இது குறித்து மேலும் கலந்துரையாடப்பட்டு வருகிறது. அனைவரையும் ஒரே மேடைக்கு கொண்டுவந்து கலந்துரையாட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியமும் பரிந்துரைத்தது. ஆனால் சீனா உலக வல்லரசாக இருப்பதால் அவர்களின் முறை வேறு. ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி இந்தியாவின் பெங்களூரில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நாடுகளின் கடனை எவ்வாறு மறுசீரமைப்பது குறித்து அங்கு ஆராயப்பட உள்ளது. அதில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை குறித்து சீன நிதி அமைச்சருடன் கலந்துரையாட எதிர்பார்க் கப்பட்டுள்ளது. அவர்களின் நிலைப்பாட்டின்படி, செயல் படுத்த இரண்டு அல்லது மூன்று மாற்று வழிகள் உள்ளன.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி பெறாவிட்டால், எதிர்காலத்தில், எரிபொருளின்றி 12 மணி நேர மின்வெட்டுடன் வாழ வேண்டிய நிலை ஏற்படும். சிறு போகத்திற்கு உரம் கிடைக்காது. இந்த நிலையில் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.
நாட்டின் அடிப்படைப் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினையாகும். அதை நோக்காகக் கொண்டே நாம் செயற்பட வேண்டும். அது இல்லாமல், இந்த பிரச்சினையை மறைக்க முடியாது.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றல்ல. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும். ஆனால், பிரதம நீதியரசர் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும் ஒன்றாக அமர்ந்தாலும் கூட நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை , நீதிமன்றத்தில் தீர்க்கக்கூடிய ஒன்றல்ல. பொருளாதாரத்தை முன்கொண்டுசெல்லும் பொறுப்பு பாராளுமன்றத்திற்கே இருக்கிறது. எனவே 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாடுபட வேண்டும்.
தேவைப்பட்டால், மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி, இரான் மற்றும் ஹர்ஷ போன்றவர்களின் முன்மொழிவுகளைக் கூட சர்வதேச நாணய நிதியத்தில் சமர்ப்பிக்க முடியும். இதற்கான ஆதரவையும் வழங்க முடியும். சில அரசியல் கட்சிகள் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதில்லை. இது தொடர்பாக மக்களிடம் பொய் சொல்லி அரசியல் நாடகம் ஆடுகின்றனர். நாட்டின் எதிர்காலத்துடன் விளையாட முடியாது. நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு நாங்கள் பொறுப்பு. எனவே, பொருளாதாரத்தைக் கட்டியெ ழுப்பத் தேவை யான அனைத்து நடவடிக்கை களையும் நான் எடுப்பேன்.யாரிடமாவது மாற்று முன்மொழிவுகள் இருந்தால், வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்களுடன் கலந்துரை யாடும் வாய்ப்பை பெற்றுக் கொடுக்க விரும்புகிறேன்.
யாரும் முன்வராத நிலையிலே இந்த நாட்டை நான் பொறுப்பேற்றேன். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகையில் பலவிதமான விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டி வரும் என்பதை அறிந்தே ஜனாதிபதிப் பதவியை ஏற்றேன். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் நான் எடுப்பேன். இந்த வருட இறுதிக்குள் நாட்டு மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பொருளாதார வளர்ச்சிக்கான ஆரம்பத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடின்றி 225 பேர் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே, மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது எப்படி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அதற்கு உங்களின் தலைமைத்துவத்தை எதிர்பார்க்கிறோம்.2024 ஆகும் போது மீண்டும் வளர்ச்சியை நோக்கி பயணிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
21-02-2023
Post a Comment