Header Ads



பெரிய அநியாயங்கள் ரணிலின் காலத்தில் நடைபெறப் போகிறது - சிறீதரன்


கட்சி மற்றும் பதவிகளைத் தக்க வைப்பது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க பல வியூகங்களை வகுத்து வருவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.


நேற்றைய தினம் (18.02.2023) கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, இந்த நாட்டின் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து, ஜனநாயக ஆட்சி முறையை இல்லாது செய்து, ஜனநாயகம் என்பதற்குப் பல விளங்கங்களைக் கூறி, போராட்டங்களை முன்னெடுத்தது நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான்.  இந்த நடவடிக்கை ஓர் துர்ப்பாக்கியம். துரதிர்ஷ்டவசமானது.


அவரை ஒரு லிபரல்வாதி என்றுதான் பலர் வெளி உலகிலே சொல்லுவார்கள். அந்த லிபரல் தன்மை கொண்டவர், இன்று ஜனநாயகத்தை மதிக்காத அல்லது ஜனநாயக முறைகளை ஏற்றுக் கொள்ளாதவராக அவர் இந்த நாட்டிலே காணப்படுகிறார்.


அவருடைய காலத்தில் பெரிய அநியாயங்கள் நடைபெறுவதற்கான கட்டியம்தான் இந்தத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு, தேர்தல் நிறுத்தப்படுவதற்கு அல்லது பின்னுக்குக் கொண்டு செல்வதற்குக் காரணமாக அமைகின்றது. ஒரு நாடு சரியான பலமாக இருக்கின்றது.


அந்த நாட்டினுடைய மக்கள் தங்களுடைய சுயமான பொருளாதார அரசியல் முறைகளைச் சரியாக வழிநடத்துகின்றார்கள் என்றால், அந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றது என்று அர்த்தம். ஆனால் அந்த ஜனநாயகம் இந்த நாட்டிலே இல்லை. அந்த ஜனநாயகத்தை இல்லாது செய்கின்ற பணிகளில் மிகப்பெரிய அளவிலே ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.


அவரோடு சேர்ந்த பலரும் அதற்காக உழைக்கிறார்கள். அவர்கள் மிக ரகசியமான முறையில் தந்திரோபாயமாகத் தங்களுடைய அழிவு நிலையில் இருக்கிற ஐக்கிய தேசியக் கட்சியை நிமிர்த்துவதற்கான வழிமுறைகள்பற்றி யோசிப்பதுடனும், தங்களுடைய அங்கத்தவர்கள், கட்சி மற்றும் பதவிகளைத் தக்க வைப்பது தொடர்பிலே பல வியூகங்களை ரணில் விக்ரமசிங்க தலைமையில் வகுக்கின்றது.


ஆனால் நாடு பற்றிய வியூகங்கள் அவர்களிடம் இருக்கவில்லை. இந்தத் தேர்தலில் கூட அவர்களின் எண்ணங்களைத்தான் இந்த விடயங்கள் பிரதிபலிக்கின்றது.


ஆகவே இந்தச் சவால்களை எதிர்கொண்டு, தேர்தலுக்குத் தயாராகின்றோம் என்ற செய்தியை மக்களுக்குச் சொல்ல வேண்டும். ஏனென்றால், நாங்கள் அடிப்படை உரிமைக்காகவும், வாழ்வியல் உரிமைக்காகவும் இந்தத் தேர்தல் பயணத்தை மேற்கொள்பவர்கள்.


நாங்கள் இதன் மூலம் நாடு பிடிக்கிற விடயத்துக்குரியவர்கள் அல்ல. எங்களுக்கு முன்னால் பல போராட்டங்கள் விரிந்துபோய் கிடக்கின்றது. பல போராட்டங்கள் எங்களை அழைக்கின்றது. நாங்கள் இந்த மண்ணிலே வாழ வேண்டியதற்காகப் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம்.


ஆகவே, போராட வேண்டிய காலத்துக்கான அறிகுறியாக இந்தத் தேர்தலை ஓர் களமாக நாங்கள் பயன்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.