Header Ads



வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என எந்த அரசியலமைப்பில் இருக்கின்றது..?


"வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்று எந்த அரசமைப்பில் இருக்கின்றது? தமிழர்களுக்கென ஒரு தாயகம் இந்த நாட்டில் இல்லை. தமிழர்களுக்கு தாயகம் வேண்டும் என்று போராடிய விடுதலைப் புலிகள் போரில் ஒழிக்கப்பட்ட பின்னர் என்ன நோக்கத்தோடு வடக்கிலும் கிழக்கிலும் போராட்டம் நடத்தப்படுகின்றது? இந்தப் போராட்டத்தின் பின்னால் உள்ள சர்வதேச நாடுகள் எவை?"


இவ்வாறு ஆக்ரோஷமாக சிங்களக் கடும்போக்குவாதி நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்சவும் சரத் வீரசேகரவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


'ஆக்கிரமிப்புக்களை நிறுத்து!' என்ற கோஷத்துடன் வடக்கிலிருந்து கிழக்கை நோக்கிய பேரணி முன்னெடுக்கப்படுகின்றது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர்கள் இருவரும் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.


சரத் வீரசேகர


"தனிநாட்டைக் கோரும் புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்த படையினரை அவமதிக்கும் வகையிலும் கோஷங்களை எழுப்பியவாறு வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிப் புறப்படும் தமிழர் பேரணிக்கு அனுமதி வழங்கியது யார்? நாடு இருக்கும் தற்போதைய நிலைமையில் இப்படியான பேரணி ஒன்று தேவையா?


இந்த விடயத்தில் பாதுகாப்பு அமைச்சு மௌனம் காத்தது ஏன்? வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்று எந்த அரசமைப்பில் இருக்கின்றது? தமிழர்களுக்கென ஒரு தாயகம் இந்த நாட்டில் இல்லை.


இது ஒற்றையாட்சிக் கட்டமைப்பைக்கொண்ட நாடு. எனவே, இந்த நாட்டை எந்தத் சந்தர்ப்பத்திலும் பிளவுபடுத்த முடியாது. சமஷ்டி வேண்டும் என்று ஊளையிடுபவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்" - என்றார் சரத் வீரசேகர எம்.பி.


விமல் வீரவன்ச


"இந்தப் பேரணிக்கு புலம்பெயர்நாடுகளில் இருந்து நிதியுதவிகளை வழங்குபவர்கள் யார்? அன்றாட கருமங்களில் இருக்கும் மக்களை வலுக்கட்டாயமாக வீதிக்கு அழைத்து வந்தவர்கள் யார்? என்பது தொடர்பில் அரச புலனாய்வுத்துறையினர் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்.


இப்படியான போராட்டங்களும் பேரணிகளும் நாட்டை வன்முறைக்களமாக்கி மீண்டும் இருண்ட யுகத்துக்கே கொண்டு செல்லும். இந்த விடயம் தொடர்பில் அரசாங்கமும் அதிகாரத்தில் இருப்பவர்களும் அதிக கவனம் எடுக்கவேண்டும்" - என்றார் விமல் வீரவன்ச எம்.பி. Twin

No comments

Powered by Blogger.