மதுவை தவிர்த்து, பச்சை குத்தாத, தாயின் மீது அதிக பாசம் கொண்ட ரொனால்டோ என்ற மனிதன்
2013ஆம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரின் கோல்டன் ஷூ விருது விழாவில் ரொனால்டோவுடன் சம காலத்தில் கால்பந்து உலகை ஆதிக்கம் செலுத்தும் லியோனல் மெஸ்ஸியின் வார்த்தைகள் இவை.
இப்படியாக, கோல் மிஷின் எனப் பெயரெடுத்த ரொனால்டோவுக்கு இன்று 38வது பிறந்தநாள்.
வறுமையான குடும்பம், சவாலான குழந்தைப் பருவம், மாபெரும் கனவு, அதை நனவாக்க கடுமையான உழைப்பு, வெற்றி, பெயர், புகழ்...
இந்த உலகம் கண்ட பல சாதனையாளர்களின் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கும் அதே வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
ரொனால்டோ என்ற பெயர் வந்தது எப்படி?
விளையாட்டை ஜாலியாக விளையாடுவோர் உண்டு, ஆக்ரோஷத்துடன் விளையாடுவோரும் உண்டு. இரண்டாமவர் வெற்றிக்காக இறுதிவரை போராடுவோர். கிறிஸ்டியானோ ரொனால்டோ, இரண்டாவது வகை!
போர்ச்சுகலுக்கு சொந்தமான மதீரா தீவுகளில் ஃபுஞ்சால் என்ற இடத்தில் பிறந்த ரொனால்டோவுக்கு சிறு வயதிலேயே உலகின் சிறந்த கால்பந்து வீரனாவது லட்சியமாகி விட்டிருந்தது. அவரது தந்தை ஜோஸ் அவெய்ரோ, அங்குள்ள அன்டோரினா என்ற கிளப்பில் உதவியாளராகப் பணிபுரிந்தவர்.
ரொனால்டோவின் தந்தை அமெரிக்க நடிகர், அதிபர் ரொனால்ட் ரீகன் ரசிகர் என்பதால்தான், ரொனால்டோ என்ற இரண்டாம் பெயரை சூட்டினார். ஆனால், ரொனால்டோவின் நாட்டமோ கால்பந்து மீது இருந்தது.
தனது 10 வயதிலேயே அவர் தனித்துவத்துடன் கால்பந்து விளையாட ஆரமித்தார். உலகின் சிறந்த கால்பந்து வீரனாக வேண்டுமெனக் கனவு கண்ட ரொனால்டோ, அதற்காக மிக இளம் வயதிலேயே கடினமாக உழைக்கத் தொடங்கிவிட்டார்.
அந்த வயதில்கூட, "கால்பந்து வீரனாவேன், சர்வதேச போட்டிகளில் ஆடுவேன்" என்றெல்லாம் அவர் கூறியதே கிடையாது. "உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரனாவேன்," என்ற வார்த்தைகள் மட்டுமே ரொனால்டோவிடம் இருந்து உறுதிபட வெளிப்படும்.
சிறுவனாக, நேசினோல் அணிக்காக ஆடிய போதே ரொனால்டோவின் அந்த மனப்பாங்கு வெளிப்பட்டது. தன்னைவிட வயதில் பெரிய வீரர்களைக் கண்டு சிறிதும் அவர் கலங்கியதே இல்லை. களத்தில் பம்பரமாகச் சுழலும் அவர், அப்போதே கோல் அடிப்பதில் குறியாக இருந்தவர். எப்போதும் தன் ஆட்டத்திறனையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பவர். அதைத் தொடர்ந்து மேம்படுத்த எத்தகைய உழைப்பையும் கொடுக்க சித்தமாக இருப்பவர்.
நேசினோல் அணிக்காக ரொனால்டோ ஆடிய விதத்தைக் கண்ட ஸ்போர்ட்டிங் லிஸ்பன் அணி அவரை ஒப்பந்தம் செய்தது. 16 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் 14 வயதிலேயே இடம் பிடித்தார் ரொனால்டோ.
ஆனாலும், வயதில் மூத்த வீரர்களையும்கூட ஆதிக்கம் செய்ய முனையும் மனப்பாங்கு அவரிடம் இருந்தே வந்திருக்கிறது. சிறுவனாக இருந்த போதே ரொனால்டோவை துரத்திய கனவும் லட்சியமும், அவர் எதற்கும் அஞ்சாமல் களத்தில் துணிச்சலாகச் செயல்படத் தூண்டுகோலாக அமைந்தன.
கால்பந்து உலகம் கண்டு கொண்ட தருணம்!
2003ஆம் ஆண்டு இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் புகழ் பெற்ற அணிகளில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஒப்பந்தமான பிறகே, ரொனால்டோவின் திறமையை உலகம் அறிந்து கொண்டது.
அப்போது கால்பந்து உலகில் கொடிகட்டிப் பறந்த ரொனால்டோ, ரொனால்டினோ, ஜிடேன் ஆகிய பெருந்தலைகளுடன் கிறிஸ்டியானோவும் உடனடி சென்சேஷனாக மாறிப் போனார். கால்பந்து உலகின் மிகச் சிறந்த முன்கள வீரர்களில் ஒருவராக அவர் தன்னைத் தகவமைத்துக் கொண்டார்.
2007-08வது சீசன் அவருக்கு மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. பிரீமியர் லீக்கில் அசத்திய ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் அணி சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாகத் திகழ்ந்தார். இதன் காரணமாக, 2008ஆம் ஆண்டு உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பேலோன் டோர் விருதை அவர் முதன்முதலாக வென்றார்.
அடுத்த ஆண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியை சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார் ரொனால்டோ. இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் பார்சிலோனா அணியிடம் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது மான்செஸ்டர் யுனைடெட்.
இதைத் தொடர்ந்து, ஸ்பெயின் உள்நாட்டு கால்பந்து தொடரான லா லிகாவில் ஆடும் புகழ் பெற்ற கிளப்பான ரியல் மாட்ரிட் அணி ரொனால்டோவை வாங்கியது.
அது முதல் கால்பந்து உலகில் இன்று வரை உச்சரிக்கப்படும் ரொனால்டோ - மெஸ்ஸி போட்டி தொடங்கியது. ரியல் மாட்ரிட் அணிக்காக ரொனால்டோ ஆடிய காலம், கால்பந்து வாழ்க்கையில் அவர் உச்சத்தில் இருந்த கால கட்டம்.
உலகம் முழுவதுமே கால்பந்து ரசிகர்கள் ரொனால்டோ - மெஸ்ஸி இருவரில் யார் சிறந்தவர் என்று பிரிந்து விவாதித்துக் கொள்ளும் அளவுக்குப் போட்டி கடுமையாக இருந்தது.
எப்போதுமே கிரிக்கெட் ஜூரத்தில் ஆடிக் கிடக்கும் இந்தியாவும்கூட, இதற்கு விதி விலக்கு அல்ல. ரொனால்டோ - மெஸ்ஸி ரசிகர்களிடையே அடி-தடி அளவுக்குக்கூட மோதல்கள் ஏற்பட்டுள்ளன. அந்த அளவுக்கு ரொனால்டோ - மெஸ்ஸி மோதல் உலகப் பிரசித்தம்.
கால்பந்து உலகமே ரியல் மாட்ரிட் - பார்சிலோனா அணிகள் மோதும் ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த காலம் அது. மைதானம் ரசிகர்களால் நிரம்பி வழிவது மட்டுமல்ல. அந்தப் போட்டியை நேரலையில் காணவும் டி.வி. முன் ரசிகர்கள் தவம் கிடந்தனர்.
தன் கால்களுக்கு பந்து கிடைத்ததும் கோல் கம்பத்தை நோக்கி விரையும் ரொனால்டோவின் மின்னல் வேகம், எதிரணி தற்காப்பு வியூகத்தை உடைக்கும் அவரது ஆட்ட நுணுக்கம், எதிரணி வீரர்களை டிரிபிள் செய்யும் லாகவம், எல்லாவற்றுக்கும் மேலாக 'பைசைக்கிள் கிக்' மூலம் கோல் அடிக்கும் சாகசம் என கால்பந்து ரசிகர்கள் அவரை கொண்டாடித் தீர்ப்பார்கள்.
காற்றில் பறந்து வரும் பந்தை ஹெட் செய்ய அவர் காற்றிலேயே பறப்பதைப் பார்த்து கால்பந்து உலகமே மிரளும். பெனால்டி வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் தன்னிகரற்ற வீரர் இவர்.
2018ஆம் ஆண்டு வரை ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ 292 ஆட்டங்களில் 311 கோல்களை அடித்திருந்தார் என்பதே அவரது சிறப்பான ஆட்டத் திறனுக்குச் சான்று.
2018ஆம் ஆண்டு ஜூலையில் இத்தாலியின் யுவெண்டஸ் அணிக்காக அவர் ஒப்பந்தமானார். அந்த அணிக்காக 3 ஆண்டுகள் ஆடிய ரொனால்டோ, சீரி ஏ கோப்பை, சூப்பர்கோப்பா இட்டாலியானா, கோப்பா இட்டாலியானாவை வெல்ல உதவினார்.
சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக அவர் மீண்டும் ஒப்பந்தமானார். இது ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் ஆகிய இரு தரப்புக்குமே ஏமாற்றமாக அமைந்தது.
உள்ளுக்குள் புகைந்த அதிருப்தி ரொனால்டோவின் பேட்டியால் பகிரங்கமாக வெடிக்க, 2022ஆம் ஆண்டு நவம்பரில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து அவர் வெளியேறினார்.
கால்பந்து உலகம் இதுவரை காணாத அளவில், ஆண்டுக்கு சுமார் 1,775 கோடி ஊதிய ஒப்பந்தத்தில் சௌதி அரேபியாவை சேர்ந்த அல்-நாசர் அணியில் இணைந்தார்.
"ஐரோப்பாவில் மிக முக்கியமான முன்னணி அணிகளுடன் விளையாடிவிட்டேன். அங்கு அனைத்தையும் வென்றுவிட்டேன். ஆசியாவில் இது புதிய சவால்," என்று அவர் குறிப்பிட்டார்.
போர்ச்சுகல் தேசிய அணிக்கும் ஒரு சிறந்த வீரராக, கேப்டனாக அவர் நல்ல பங்களிப்பைத் தந்துள்ளார். 2003ஆம் ஆண்டு தனது 18 வயதில் போர்ச்சுகல் அணிக்காக சர்வதேச அரங்கில் கால் பதித்த ரொனால்டோ, அது முதல் அணியின் தவிர்க்க இயலாத வீரராகிப் போனார்.
2006ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் போர்ச்சுகல் அணி நான்காவது இடத்தைப் பிடித்ததில் ரொனால்டோவின் பங்கு அளப்பரியது. 2008ஆம் ஆண்டு உலகக் கோப்பை முதல் போர்ச்சுகல் அணிக்கு தலைமை தாங்கி அந்த அணியை சர்வதேச அரங்கில் சிறப்பான உயரத்திற்கு அவர் அழைத்துச் சென்றார்.
2012ஆம் ஆண்டு அவரது மகத்தான ஆடடம் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில் போர்ச்சுகல் அணியை அரையிறுதி வரை அழைத்துச் சென்றது.
2016ஆம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கோப்பையை போர்ச்சுகல் அணிக்கு வென்று கொடுத்தார் ரொனால்டோ. 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் அவரது சிறப்பான ஆடடம் தொடர்ந்தது.
கத்தாரில் அண்மையில் நடந்து முடிந்த உலகக் கோப்பை, அவருக்கு ஏமாற்றம் தருவதாக அமைந்தது. இருந்த போதிலும், அந்தத் தொடரிலும் கோல் அடித்த ரொனால்டோ, 5 உலகக்கோப்பை தொடர்களில் கோலடித்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
கால்பந்தில் உலகம் போற்றும் வீரராகத் திகழ்ந்தாலும் ரொனால்டோ அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கியதும் உண்டு. "சுயநலத்துடன் ஆடுகிறார், அடுத்தவருக்கு வாய்ப்பு தராமல் தானே கோலடிக்க முனைகிறார், வரி ஏய்ப்பு செய்தார்" என்பன மட்டுமல்ல, "பாலியல் குற்றச்சாட்டுகளும்" கூட அவர் மீது எழுந்தது உண்டு.
ஆனாலும், அவற்றையெல்லாம் தாண்டி உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அபிமானத்தை அவர் சம்பாதித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில், செய்தியாளர் சந்திப்பின்போது, தன் முன்னே வைக்கப்பட்டிருந்த ஸ்பான்சர்ஷிப் பானமான கொகோகோலா பாட்டில்களை ரொனால்டோ சற்று ஓரமாக தள்ளி வைத்துவிட்டு, தண்ணீர் குடியுங்கள் என்று துணிச்சல் காட்டினார்.
ரொனால்டோவின் இந்த செய்கையால், பங்குச் சந்தையில் கொகோ கோலாவின் மதிப்பு பெரும் வீழ்ச்சி கண்டது என்பது வரலாறு. அந்த அளவுக்கு மனிதருக்கு ரசிகர் பட்டாளம் உண்டு.
சமூக ஊடகங்களில் முடிசூடா மன்னர் ரொனல்டோதான். இன்ஸ்டாகிராமில் 60 கோடி பேரும், ஃபேஸ்புக்கில் 15.5 கோடி பேரும், ட்விட்டர் தளத்தில் 10.5 கோடி பேரும் ரொனால்டோவை பின்தொடர்கின்றனர். இன்றளவும்கூட, விளம்பரங்கள் வாயிலாக அதிக வருவாய் ஈட்டும் கால்பந்து வீரர்களில் அவரே முதலிடம்.
கால்பந்தாட்டத்தில் உடல் தகுதியை எப்போதும் பேணிக் காப்பது அவசியம். அந்த வகையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ எப்போதுமே தன்னை முதலிடத்தில் இருக்குமாறு உழைப்பார்.
நடிகரும், பாடி பில்டருமான அர்னால்ட் கூறுகையில், "ரொனால்டோ போன்ற ஃபிட்டான விளையாட்டு வீரரை நான் பார்த்ததே இல்லை," என்று கூறுகிறார்.
ரொனால்டோ மது அருந்துவது இல்லை. அவருடைய இந்த பிட்னெஸ்க்கு மதுவை தவிர்த்தது முக்கிய காரணம் என்று அடித்துக் கூறுகிறார். அதே போல டாட்டூ குத்துவதும் அவருக்கு அறவே பிடிக்காது.
தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த மனிதராக இருக்கிறார் ரொனால்டோ. இதன் காரணமாகவே அவர் மீது பலருக்கு நன்மதிப்பு உண்டு. தாயின் மீது அதிக பாசம் கொண்டவர், இப்போதும் தாயை கவனித்துக் கொள்கிறார். அவ்வபோது அவர் தனக்காக பட்ட துன்பங்களை எல்லாம் நினைவு கூறுவார்.
5 முறை பேலோன் டோர் விருது, கிளப் போட்டிகளில் அதிக கோல்கள், சமூக ஊடகங்களில் அதிகம் பேரால் பின்தொடரப்படுபவர் என்று பல்வேறு சிறப்புகளை உடையவர் ரொனால்டோ.
கால்பந்தில் அடுத்த சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் கிலியன் எம்பாப்பே, தனது முன்மாதிரியாகக் கருதியது ரொனால்டோவையே.
கால்பந்திலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, உலகின் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்பவர் ரொனால்டோ.
இன்று 38வது பிறந்தநாளை கொண்டாடும் ரொனால்டோவுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் இருக்கிறது. bbc
Post a Comment