Header Ads



ஏன் திருமணம் செய்யவில்லை, மோடியை தோற்கடிக்க முடிமா..? ராகுலின் சுவையான பேட்டி



இந்தியாவில் இந்து - முஸ்லிம் பிரிவினை இருப்பது உண்மைதான். ஆனால், அது ஊடகங்கள் சொல்லும் அளவிற்கு இல்லை" என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார். இத்தாலியின் பிரபல பத்திரிகையான ‘கூரியர் டெல்லா செரா’-வுக்கு ராகுல் காந்தி ஒரு விரிவான பேட்டி அளித்துள்ளார். இந்தப் பேட்டியில் அவர் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கிட்டிய அனுபவம், பிரதமர் நரேந்திர மோடியை அடுத்தத் தேர்தலில் தோற்கடிக்க முடியுமா?, தனது பாட்டி இந்திரா காந்தியுடனான இனிய நினைவுகள், 52 வயதாகியும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? - இப்படி பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார்.


அந்தப் பேட்டியில் ராகுல் காந்தி கூறியதில் இருந்து... - “உலகின் பழமையான மொழியான சமஸ்கிருதத்தில் ஒரு வார்த்தை உள்ளது. தபஸ்ய என்பது அந்த வார்த்தை. ஒரு மேற்கத்திய மனதிற்கு இந்த அர்த்தம் விளங்குவது கடினம். சிலர் இதனை தியாகம், பொறுமை என்றெல்லாம் மொழிபெயர்த்துள்ளனர். ஆனால், உண்மையில் இதன் அர்த்தம் வேறு. தபஸ்ய என்பது அனலை உருவாக்குதல். அந்த வகையில் நான் மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரை என்பது ஒருவகை கதகதப்பை என்னுள் ஏற்படுத்தியுள்ளது. அது என்னை நானே ஆழ்ந்து உற்றுநோக்கச் செய்துள்ளது. அது இந்தியர்களின் அசாத்தியமான மீள்தன்மை பற்றி உணர்த்தியுள்ளது.


இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான பிரிவினை இருக்கிறது. ஆனால், ஊடகங்கள் கூறும் அளவிறகு அது மிக மோசமாக இல்லை. நாட்டில் உள்ள உண்மையான பிரச்சினைகளான வறுமை, கல்வியின்மை, பணவீக்கம், கரோனாவுக்குப் பிந்தைய சிறு, குறு தொழில்கள் பாதிப்பு, நிலமற்ற விவசாயிகளின் சிக்கல் ஆகியனவற்றிலிருந்து மக்களை திசை திருப்புவதாகவே அமைந்துள்ளது.


இந்தியாவில் பாசிசம் ஏற்கெனவே நுழைந்துவிட்டது. அது ஜனநாயக அமைப்புகளை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றம் இயங்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னால் நாடாளுமன்றத்தில் பேச முடியவில்லை. ஒவ்வொரு முறை நான் பேச முயற்சிக்கும்போதும் எனது மைக் அணைத்து வைக்கப்படுகிறது. நீதி சுதந்திரமாக இல்லை. எல்லாவற்றையும் மத்திய அதிகாரத்திற்குள் குவிப்பது நடக்கிறது. அதுமட்டுமே நிலையானதாக உள்ளது. ஊடக சுதந்திரம் பறிபோய்விட்டது.


அடுத்த தேர்தலில் நிச்சயமாக பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிக்கலாம். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டால் நிச்சயமாக பாஜகவை வீழ்த்துவது 100 சதவீதம் சாத்தியமாகும். அதற்கு முதலில் வலது, இடது சித்தாந்தத்தை எதிர்ப்பதை அமைதி, ஒற்றுமைக்கு ஊறு விளைவைக்கும் ஒரு சித்தாந்தத்தை எதிர்க்க எதிரணி தயாராக வேண்டும். பாசிசத்தை தோற்கடிக்க ஒரு மாற்று உருவாக வேண்டும். இவ்வாறாக இரண்டு பார்வைகளுக்கு எதிரான போட்டியாக பாஜகவை, பிரதமரை எதிர்கொள்ளும்போது வெற்றி நிச்சயமாகும்.


உக்ரைன் - ரஷ்யப் போரைப் பற்றி நான் எதுவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அது வெளியுறவுக் கொள்கை சார்ந்தது. ஆனால், அமைதியின் வழியில் தீர்வு காண்பது அவசியம். இந்தியா - சீனா உறவைப் பொறுத்தவரையில் மேற்குலக நாடுகளால் சீனாவுடன் தொழில்துறையில் போட்டியிட முடியாது. ஆனால், இந்தியாவால் அது சாத்தியம்.


என் கொள்ளுத் தாத்தா நேருவை நான் பார்த்ததில்லை. ஆனால், என் பாட்டி இந்திரா காந்தியுடன் எனக்கு நிறைய சுவையான நினைவுகள் இருக்கின்றன. எனக்கு சிறுவயதில் கீரை, பச்சைப் பட்டாணி சாப்பிட பிடிக்காது. ஆனால், என் தந்தை அதை நான் சாப்பிட்டு முடிக்காமல் விடமாட்டார். அப்போது எனக்கும் என் பாட்டிக்கும் ஒரு புரிந்துணர்வு இருந்தது. அந்த மாதிரியான நேரத்தில் என் பாட்டி ஒரு செய்தித்தாளை விரித்து இதைப் பார் என்பார். அந்த வேளையில் நான் என் தட்டில் இருப்பதை அவர் தட்டுக்கு மாற்றிவிடுவேன்.


என் பாட்டி இந்திரா காந்தி தனக்கு நேரவிருந்த அகால மரணம் பற்றி அறிந்தே இருந்தார். அதனால், அப்படி ஒரு நாள் வந்தால் நான் அழக் கூடாது. ஏனெனில் எனக்கும் அதுபோன்ற சூழல் ஏற்படலாம் என்று எச்சரித்திருந்தார். என் பாட்டியைப் போலவே என் தந்தையும் தனது மரணம் சமீபமாக இருந்ததை உணர்ந்திருந்தார். அது விடுதலைப் புலிகளால் தான் ஏற்படும் என்று அவர் அறிந்திருந்தாரா என்று தெரியாது. ஆனால், ஏதோ சில சக்திகள் ஒன்றிணைந்துள்ளன. அவை தன் உயிருக்கு உலை வைக்கும் என்று அவர் உணர்ந்திருந்தார். அந்த வரிசையில் நான் என் உயிருக்கு ஏதும் நேருமோ என்று யோசித்ததில்லை. எனக்கு அச்சமில்லை. எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை நான் செய்கிறேன்.


எனக்கு குழந்தைகள் என்றால் பிடிக்கும். ஆனால் 52 வயதாகியும் நான் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன் என்பதை எனக்கே புரிந்து கொள்ள முடியவில்லை” என்று அந்தப் பேட்டியில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.