சுடுகாட்டிலேயே தமிழ்த் தேசியம் கிடைக்கும் - அங்கயன் இராமநாதன்
பொருளாதாரம் இல்லாது தேசியத்திற்கு முக்கியத்துவமளித்தால், சுடுகாடுகளில்தான் தமிழ்த் தேசியம் கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது, கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளிற்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எம்மை சிங்கள கட்சி என்கின்றனர். உண்மையில் சிறிலங்கா சுதந்திர கட்சி அனைத்து இனங்கள், மதங்களையும் சமமாக இணைத்து பயணிக்கின்ற தேசிய கட்சி.
அந்த கட்சியின் முக்கிய பதவி ஒன்றில் வடக்கை சேர்ந்த எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நாங்களும் தமிழ்த் தேசியத்துடனேயே பயணிக்கின்றோம்.
இன்று 75வது சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்படுகிறது. அதே நேரம் 70 ஆண்டுகளாக நாம் சுதந்திரத்திற்காக போராடுகின்றோம். இன்றுவரை அது கிடைக்கவில்லை.
ஆனால், தேசிய கட்சி ஒன்றின் ஊடாக தமிழ் மக்களிற்கான விடயங்களை நிறைவேற்ற முடிந்துள்ளது. தமிழ்த் தேசியம் பேசி காலத்தை கடத்தியுள்ளோம். உள்ளுராட்சி மன்ற தேர்தல்களிலும் உரிமைக்காக வாக்களிக்க சொன்னார்கள். நீங்களும் வாக்களித்தீர்கள். ஆனால் எதுவும் நடைபெறவில்லை.
பாராளுமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல்களிலும் உரிமைக்காக வாக்களிக்க சொன்னவர்கள், உள்ளுர் அபிவிருத்திக்கான தேர்தல்களிலும் உரிமைக்காகவே வாக்களிக்க சொன்னார்கள்.
ஆனால், இன்று உரிமைக்காகவும், அபிவிருத்திக்காகவும் வாக்களிக்க கோருகின்றனர். அதில் நாம் வெற்றி கண்டுள்ளோம். மக்களிற்கு தேசியத்துடனான அபிவிருத்திக்கான பயணத்தையே நாம் முன்னெடுத்தோம். அதனை தமிழ்த் தேசியம் பற்றி மாத்திரம் கூறுபவர்கள் இன்று விளங்கிக் கொண்டுள்ளனர்.
தனியே தேசியத்தை மாத்திரம் நாங்கள் பேசிக்கொண்டிருந்தால், சுடுகாட்டிலேயே தமிழ்த் தேசியம் கிடைக்கும். இங்கு மக்கள் எல்லோரும் இறந்து சுடுகாடாக எமது பகுதி இருக்கும்.
சுதந்திர தினத்தை கரிநாள் எனக் கூறுபவர்கள், 5 ஆண்டுகளிற்கு முன்னர் தாமே தேசியக் கொடியை எடுத்து கொடுத்தார்கள். இன்று அரசியலிற்காக மாறி மாறி மக்களை ஏமாற்றுகின்றனர் என மேலும் கருத்து தெரிவித்தார்.
-சப்தன்-
Post a Comment