தேசிய மக்கள் சக்தியும், முஸ்லிம்களும்
(கலாநிதி அமீரலி - அவுஸ்திரேலியா)
தேர்தல் போதையிலே மக்கள் மயங்கியுள்ளதை தூரத்திலிருந்தே உணரமுடிகிறது. அந்தத் தேர்தல் நடைபெறுவதை எவ்வாறாயினும் தடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சரும் ராஜதந்திரியுமான கலாநிதி ஜெய்ஷங்கர் சுப்பிரமணியம் அவிழ்த்துவிட்ட இலங்கைக்கான பொருளாதார உதவிப் பட்டியலும் உற்சாகமான உறுதிமொழிகளும் பொருளாதார மீட்சிபற்றிய நம்பிக்கைக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது என்றால் அது மிகையாகாது.
இலங்கையின் கடன் இறுப்பு சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் தயக்கம் காட்டிய சீனாவையே விழித்தெழச்செய்து தனக்கு இலங்கை இறுக்கவிருக்கும் கடனை இரண்டு வருடங்களுக்குத் தள்ளிப்போட முன்வந்தமையும் அதனால் சர்வதேச நாணய நிதியின் 2.9 பில்லியன் டொலர் அவசரகால நிதியுதவியும் துரிதப்படுத்தப்படும் என்ற ஒரு நம்பிக்கையும் சுடர்விடத் தோன்றியுள்ளது. இவை யாவும் பொருளாதார மீட்சிக்கு அனுகூலமாக இருப்பதனால் வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்கலாமா என்பதுபோல தேர்தலை நடத்தி ஏன் இந்தச் சூழலைக் குலைக்கவேண்டும் என்ற ஒரு வாதம் வலுவோங்கத் தொடங்கியுள்ளது. இந்த வாதத்தை அன்னியச் சக்திகளும் சரிகாணுமானால் அடுத்த சில வாரங்களுக்குள் ஊராட்சிமன்றத் தேர்தலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். அரசியலில் சில வாரங்களென்ன, சில நாட்களே பல வருடங்களுக்குச் சமன்.
இவற்றையெல்லாம் மீறி தேர்தலொன்று நடைபெறுமானால் அதை முஸ்லிம் சமூகம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், அதிலும் முக்கியமாக அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் இயங்கும் தேசிய மக்கள் சக்தியை எவ்வாறு முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பன பற்றிய சில சிந்தனைகளை இக்கட்டுரை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறது.
எதிர்வரும் தேர்தல் எந்த மட்டத்தில் நடைபெற்றாலும் அதன் தலையாய விவாதக்கருவாக அமையப்போவது நாட்டின் பொருளாதார நிலை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இன்றைய நெருக்கடியைத் தீர்த்து பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல சர்வதேச நாணய நிதி வகுத்துள்ள வழிவகைகளை ஆளும் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன என்பதை யாவரும் உணர்தல் வேண்டும். தேசிய மக்கள் சக்தியும் சர்வதேச நாணய நிதி வகுத்துள்ள மீட்சிப் பாதையை நிராகரிக்கவில்லை என்பதையும் இங்கே குறிப்பிடல் வேண்டும். அண்மையில் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் என்ற பொறுப்பில் ஜனாதிபதி விக்கிரமசிங்ஹ சமர்ப்பித்து பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியின் நியதிகளுக்கமைய தீட்டப்பட்ட ஓர் அறிக்கை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களாக சில வரிகளை உயர்த்தி, வேறு சில வரிகளைப் பரவலாக்கி, அரசாங்கச் செலவினங்களைக் குறைத்து, திறனற்று நட்டத்தில் இயங்கும் அரசாங்கப் பொருளாதார நிறுவனங்களை ஒன்றில் தனியார் துறைக்கு விற்றோ அல்லது அதனுடன் பங்காளியாகச் சேர்த்தோ மாற்றியமைத்து, பொதுத்துறை ஊழியர்களின் தொகையையும் பாதுகாப்புத் துறையினரின் எண்ணிக்கையையும் குறைத்து, உள்நாட்டு நாணயத்தின் பெறுமதியையும் சந்தைச் சக்திகளின் பொறுப்பில் விட்டு இறக்குமதிகளைக் குறைத்து ஏற்றுமதிகளைப் பெருக்கும் தோரணையில் பல நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் அமுலாகும் பட்சத்தில் நடுத்தர, அடித்தர வருமான மட்டங்களில் வாழும் மக்களின் பொருளாதார நிலை மேலும் நெருக்கடிக்குள்ளாகும் என்பதுமட்டும் உறுதி. அவர்களுக்காக வழங்கப்படவிருக்கும் சொற்ப நிவாரணங்கள் அவர்களது அவலத்தை நீக்கப் போதுமானதா என்பதும் கேள்விக்குறி. எனவேதான் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து தொழிற் சங்கங்களும் சாதாரண குடிமக்களும் பட்டதாரி மாணவர்களும் ஏற்கனவே போர்க்கொடி தூக்கியுள்ளனர். எதிர்பார்ப்பதுபோல் ஊராட்சிமன்றத் தேர்தல் நடைபெறுமானால் இந்தக் கிளர்ச்சி கலவரங்களை உண்டாக்கி நாட்டின் அமைதியையும் குலைக்கலாம். ஆனால், அந்தத் தேர்தல் ஜனாதிபதி விக்கிரமசிங்ஹவின் ஆட்சிக்கும் அவரது அரசாங்கத்தின் செல்வாக்குக்கும் பாதகமாக அமையும் என்பதையே கருத்துக் கணிப்புகள் தெளிவுபடுத்துகின்றன.
ஜனாதிபதியின் ஐக்கிய தேசியக் கட்சியும் அது கூட்டணி சேர்ந்துள்ள ராஜபக்சவின் மொட்டுக்கட்சியும் ஊராட்சிமன்றத் தேர்தலில் படுதோல்வி அடையுமானால் அவை நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதை மக்கள் சரிகாணார். ஆகவே விரைவில் பொதுத் தேர்தலும் அதற்கு முன்னரோ பின்னரோ ஜனாதிபதித் தேர்தலும் நடைபெறும் சாத்தியங்கள் அதிகரிக்கும்.
அவ்வாறு பொதுத் தேர்தல் ஒன்று நடைபெறும் பட்சத்தில் வாக்காளர்கள் எந்தக் கட்சிக்கு அல்லது கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதுதான் சிந்திக்கப்பட வேண்டிய ஒரு விடயம். பின்வரும் சிந்தனைகள் முஸ்லிம் சமூகத்தை முன்னிறுத்தி சமர்ப்பிக்கப்படுவனவாகும். இவற்றை முஸ்லிம் புத்திஜீவிகளாவது கரிசனையிற் கொள்ளவேண்டும் என்பதே இக்கட்டுரையாளரின் அவா.
ஏற்கனவே சுட்டிக்காட்டியது போன்று எந்தக்கட்சி அல்லது கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச நாணய நிதியின் பொருளாதாரக் கட்டுப்பாடுகளை மீற முடியாது. அவ்வாறு மீறினால் நிதியுதவிகள் தடைப்படும். எனவே எந்தக்கட்சி அல்லது கூட்டணி நாணய நிதிக் கட்டுப்பாடுகளின் மத்தியிலும் மக்களின் கஷ்டங்களை இலகுவாக்கவும், அதேவேளை நாட்டின் நீண்டகால சுபீட்சத்துக்கு வழிசமைக்கவும், பல்லின மக்களின் ஜனநாயக உரிமைகளுக்குப் பாதுகாப்பளித்து அரசாங்கங்களின் அத்துமீறல்களுக்குத் தடைபோடவும், சந்தைச் சக்திகளை மக்கள் நலன் கருதி இயங்கச் செய்யவும், இன நல்லிணக்கத்துக்கு வழிகோலவும், இவற்றையெல்லாம் உள்ளடக்கியவாறு நாட்டின் அரசியல் யாப்பினை மாற்றியமைக்கவும், எல்லாவற்றுக்கும் மேலாக செயற்றிறனும் கல்வித்தரமும் உள்ள ஒரு செயலணியையும் கொண்டுள்ளதோ அந்தக் கட்சிக்கே அல்லது கூட்டணிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். ஏனெனில் மேலே கூறப்பட்டுள்ள அனைத்தையும் அமுலாக்கினாலன்றி இந்த நாட்டை எழுபத்தைந்து ஆண்டுகளாகச் சீரழித்துவருகின்ற அமைப்பை மாற்ற முடியாது. அந்த அமைப்பு மாறாமல் ஆட்சியாளர்களை மட்டும் மாற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. இது வரலாறு புகட்டும் பாடம்.
இவற்றையெல்லாம் செயற்படுத்தக்கூடிய திட்டங்களும் தகைமைகளும் தேசிய மக்கள் சக்தியிடமே உண்டென்பதை ஒழிவுமறைவின்றி இக்கட்டுரை முன்வைக்கிறது. இதுவும் ஒரு கூட்டணி என்பதையும் மறைக்கவில்லை. ஆனால் அந்தக் கூட்டணி தேர்தலைக்கருதி ஏற்பட்டதொன்றல்ல. மாறாக அரசியல் பொருளாதார சமூகத் தத்துவங்களின் அடிப்படையில் உருவானதொன்று. இன, மத, மொழி பேதங்களுக்கப்பால் நின்று இந்த நாட்டின் இறைமையையும் எதிர்காலச் சந்ததிகளின் நல்வாழ்வையும் நாட்டுக்கே சொந்தமான வளங்களைப் பாதுகாத்து அவற்றை விருத்தி செய்வதையும் மையக்கருத்தாகக் கொண்டு அமைக்கப்பட்ட கூட்டணியே இது.
ஆனாலும் இக்கூட்டணி பற்றிய சில விஷமப்பிரச்சாரங்களும் உண்டு. முக்கியமாக, அதன் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தேசிய விடுதலை முன்னணியின் முன்னை நாள் தலைவர் ரோஹண விஜயவீரவின் அடிவருடி என்றும் அவருடைய கட்சி இனவாதக் கட்சி என்றும் அதன் அங்கத்தவர்கள் வெளிநாட்டு இடது சாரிகளுக்கு இலங்கையில் குடைபிடிக்கும் பிரதிநிதிகள் என்றும் இங்குள்ள பிற்போக்குவாதக் குழுக்களும் அவற்றின் பிரச்சார ஏடுகளும் செய்தி நிறுவனங்களும் ஒப்பாரி வைக்கின்றன. முதலாவதாக, ரோஹண ஆயுதப்போராட்டத்தில் இறங்கியபோது அனுரவுக்கு வயது இரண்டு. அவருடைய கட்சி அங்கத்தவர்களில் பெரும்பாலானோர் பிறந்திருக்கவுமில்லை. இரண்டாவதாக, இப்பிரச்சாரம் இன்று நேற்று ஆரம்பித்த ஒன்றல்ல. 1950களிலிருந்தே அப்போதிருந்த இடதுசாரிக் கட்சிகளுக்கெதிராக அவிழ்த்துவிடப்பட்ட ஒரு புராணம். அந்தப் புராணத்தை நம்பி பிற்போக்குவாதிகளுக்கு வாக்களித்தோருள் முஸ்லிம்களும் அடங்குவர்.
உண்மை என்னவெனின் தேசிய மக்கள் சக்தி உலகளாவிய ரீதியில் வளர்ந்துவரும் ஓர் இளைய தலைமுறையின் இலங்கைக் குடும்பம். இந்தக் குடும்பம் வெளிப்படையாக தமது பெற்றோருக்கும் உறவினருக்கும் நண்பர்களுக்கும் சொல்லத்தவறிய உண்மையைத்தான் கடந்த வருடம் காலிமுகத்திடலிலே குழுமிய அந்த இளவல்கள் “அமைப்பை மாற்று” என்ற கோஷத்தின் மூலம் அறிவித்தனர். அதனை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் அநேகருக்குச் சக்தியுமில்லை விருப்பமுமில்லை என்பதாலேதான் ”225 வேண்டாம்” என்ற இன்னொரு கோஷத்தையும் எழுப்பினர். அதன்பிறகு என்ன நடந்தது என்பதை யாவரும் அறிவர்.
அந்த இளவல்களின் அறைகூவலால் உருவானதே இன்றைய தேசிய மக்கள் சக்திக் கூட்டணி. இந்த நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு ஜனநாயக சுதந்திரங்களுடன் யாவரும் சட்டத்தின் முன் சமம் என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்கப்பட்டு, தேசிய அடையாளத்துடனான இன நல்லிணக்கத்தை உருவாக்கி, நுகர்வோர் நலனை மையமாகக்கொண்டு சந்தைச் சக்திகளை இயங்குமாறு செய்து, பொதுத்துறையின் பொருளாதார நிறுவனங்களை தனியார் துறையுடன் போட்டிபோட்டு வளரக்கூடியவாறு மாற்றியமைத்து, இரு துறைகளும் இணைந்த செழிப்பானதொரு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய வல்லமை இந்தக் கூட்டணியினரிடமே உண்டு. அவ்வாறான ஓர் அமைப்பிலும் ஆட்சியிலுமே முஸ்லிம் சமூகமும் இதர சிறுபான்மை இனங்களும் இந்த நாட்டில் கௌரவத்துடனும் அமைதியுடனும் வாழலாம்.
ஆனால் இந்தச் சக்தி எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிவாகை சூடுமா என்பதே இன்றைய முக்கிய கேள்வி. சுதந்திரம் கிடைத்த பின்னர் இலங்கையின் வாக்காளர்கள் பல முறை அரசாங்கங்களை மாற்றியுள்ளார்களெனினும் அவர்கள் அறிவு ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் வேட்பாளர்களின் கொள்கைகளையும் பிரச்சாரங்களையும் விளங்கி வாக்களித்தார்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். இதற்கு முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல. இன்று கூட பணத்துக்கும் மதுவுக்கும் பதவிக்கும் சலுகைக்கும் தலைவணங்கி, இனவெறிக்கும் மதவெறிக்கும் ஆளாகி வாக்களிக்கும் கூட்டத்தினரையே பெரிதும் காண்கிறோம். அந்தக் கவர்ச்சிகளே மீண்டும் எதிர்வரும் தேர்தலிலும் வாக்காளர்களைக் கவரும் என எதிர்பார்ப்பதிலும் தவறில்லை. முஸ்லிம்களின் தேர்தல் பிரச்சார மேடைகளும் வழமைபோன்று ஹதீஸ் மஜ்லிசுகளாக மாறும் என்பதிலும் ஐயமில்லை. ஆனால் அரகலய இளைஞர் எழுச்சியின் பின்பு ஒரு புதிய சந்ததியின் வாக்காளர்கள் இதற்கோர் விதிவிலக்காய் அமையலாம்.
குடிசனக் கணக்கெடுப்பின்படி வாக்காளர் பட்டியலில் பெரும்பாலானவர்கள் 40 வயதுக்குக் குறைந்தவர்களே. இவர்கள் தமது மூத்த தலைமுறையினரைப் போலன்றி கல்வியிலும், அரசியல் விழிப்புணர்விலும் தேர்ச்சிபெற்று, இலத்திரன் கருவிகளின் பாவனையிலே பரிச்சயமாகி, உலகளாவிய ரீதியில் நட்புகளை வளர்த்து, எதையும் ஏன் எதற்காக என்று யதார்த்தபூர்வமாக ஆராயும் சக்தி உள்ளவர்களாய் வளர்ந்துள்ளனர். இலங்கையின் எல்லாத் தேர்தல் தொகுதிகளிலும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வல்லமை இவ்விளம் தலைமுறையினருக்கு உண்டு. அவர்களின் குழுவே காலிமுகத்திடலிலே திரண்டு பல அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுத்தனர். எனவே எதிர்வரும் தேர்தலில் இவர்களே முடிவினைத் தீர்மானிப்பர் என்பதில் ஐயமில்லை. ஆகவே இந்தச் சந்ததியின் விழிப்பிலேதான் தனது வெற்றியை அடைமானம் வைத்துள்ளது தேசிய மக்கள் சக்தி என்றால் அது மிகையாகாது.
இந்தத் தேசிய அலையுடன் முஸ்லிம் சமூகம் சேர்ந்து நீந்திப் பாதுகாப்புடன் கரைசேர்ந்து சுபீட்சமான ஓர் எதிர்காலத்தை நாட்டுக்காகவும் தமக்காகவும் சமைப்பதா அல்லது வழமைபோன்று ஆஷாடபூதி அரசியல்வாதிகளின் இன மதவாதங்களில் மயங்கி அவர்களின் சன்மானங்களையும் வெறும் உறுதிமொழிகளையும் நம்பி வாக்களித்து ஏமாந்து கைசேதப்படுவதா என்பதே முஸ்லிம் வாக்காளர்களை எதிர்நோக்கும் இன்றைய பிரச்சினை.
முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு உதவவேண்டும், இந்திய முஸ்லிம்களும் அது போன்று உதவவேண்டும் என்று அறிக்கை விடுவதும், இலங்கையின் பொருளாதாரக் கஷ்டங்கள் தீர்வதற்காக துஆப் பிரார்த்தனை செய்வதும், மனத்திருப்திக்காகவும் விளம்பரத்துக்காகவும் செய்யப்படுவன. அவை மட்டும் முஸ்லிம் சமூகத்தை நாட்டின் உயிரோட்டமுள்ள ஒரு சமூகமாக மாற்றுவதற்குப் போதுமானவை அல்ல.
அமைப்பு மாற்றத்தின் அவசியத்தைப்பற்றிய அறிவு சாதாரண முஸ்லிம் வாக்காளர்களுக்குக் கிடையாது. அதனை விளக்கவேண்டியது முஸ்லிம் புத்திஜீவிகளின் தலையாய கடமை. அந்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெறுவதை தூரத்திலிருந்து பார்க்க முடியவில்லை. அந்த அமைப்பை மாற்றக்கூடிய ஒரு திட்டவரைவு இன்றைய அரசியல் கூட்டணிகளுக்குள் தேசிய மக்கள் சக்தியிடமே உண்டு.
இறுதியாக, இந்தச் சிந்தனைகள் தூரத்துப்பார்வையிலே தோன்றியவை என்றும், களத்திலே நின்று பார்த்தால் அவை பொருந்தாதவை என்றும், இவை வெறும் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்றும் குரல்கள் எழுவது நிச்சயம். ஆனால் தூரத்துப்பார்வையிலேதான் நிதர்சனம் உண்டு. களத்திலே நின்று பார்க்கும்போது சூழலின் தாக்கம் சிந்தனையை பாதிக்கக்கூடிய சாத்தியம் உண்டென்பதால் அதிலிருந்து சிந்தனை கும்பலுக்குள் கோவிந்தா என்ற கதையாய் மாறிவிடலாம் என்பதை உணர்தல் நல்லது.- Vidivelli
Post a Comment