AHM பௌசியின் மறுபக்கம் - ஒரு அனுபவப் பகிர்வு
- எம் .எஸ் . அமீர் ஹுசைன் -
ஏ.எச் .எம் . பௌசி மீண்டும் (2023.02.09) பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார் . இலங்கை வாழ் முஸ்லீம் சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் முஸ்லீம் அரசியல்வாதிகளில் இந்த பௌசியும் முக்கியமான ஒருவர் ஆவார் . அவரைப் பற்றி முஸ்லீம் சமூகத்தில் பலவிதமான கண்ணோட்டங்கள் இருந்தாலும் எனது அனுபவத்தில் இருந்து பௌசியின் அரசியல், நிர்வாகம் , பொதுச் சேவை பற்றிய சில விடயங்களை பகிர்ந்துகொள்ள இதனை பதிவிடுகின்றேன் .
அரசியல்வாதிகள் எப்போதும் பெரிய பதவி அந்தஸ்திற்கு முன்னேறிவிட்டால் அவர்கள் அரசியல் புகழின் உச்சிக்கு ஏற உதவும் பொதுமக்களை மறந்து விடுகின்றனர் . அவரை பிடிக்க முடியாது . அதுவும் அமைச்சர் பதவி ஒன்று கிடைத்துவிட்டால் யாருக்கும் நெருங்க முடியாது .
தொலைபேசியில் அழைத்தல் "அமதித்துமா பிசி . பஸ்ஸே கதாகரன்ன ' என்று அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர் அல்லது பிரத்தியேக செயலாளர் என்று கூறிக்கொள்ளும் ஒருவர் தான் பதிலளிப்பார் . இதுதான் யதார்த்தம் .
அதற்கு விதிவிலக்கான முஸ்லீம் அமைச்சர்கள் இரண்டுபேர் என்றால் ஒருவர் காலம் சென்ற அமைச்சராக இருந்த அஸ்செய்யத் அலவி மௌலானா வும் மற்றவர் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர் பௌசியும் என்று சொல்லலாம் . எப்போது தொலைபேசி மூலம் அழைத்தாலும் நேரடியாக மறுமுனையில் இருந்து பேசுபவர்களாக இந்த பௌசியும் அலவி மௌலானாவும் இருந்தனர் .
இப்போது பௌசி பற்றிய விசயத்துக்கு வருகின்றேன் .
1996 ஆம் ஆண்டு பௌசி போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சராக இருந்தபோது எனது நண்பர் ஒருவருக்கு ஒரு வேலை எடுக்க வேண்டி இருந்தது . அது வீதி அபிவிருத்தி அதிகார சபையில் ஆகும் . எனது நண்பர் சொன்னார் நான் இன்டர்வியூவுக்கு போய் வந்தேன் ஆனால் RDA தலைவர் அந்த நியமனத்தை தருவது போல் இல்லை . இருந்தாலும் அமைச்சர் பௌசி ஒரு NOTE போட்டு CHAIRMAN னுக்கு நேரடியாக சொன்னால் தான் வேலை நடக்குமாம் என்றார் .
அப்போது நான் அமைச்சர் பௌசியை சந்தித்து அந்த வேலையை எனது நண்பருக்கு கிடைக்க உதவி செய்ய நினைத்து அமைச்சரை சந்திக்க ஒரு அப்பொய்ன்ட்மென்ட் கேற்க அமைச்சர் பௌசியை அணுகினேன் .
அப்போது நான் வீரகேசரி பத்திரிகையில் பாராளுமன்ற செய்தியாளனாக இருந்ததால் பாராளுமன்றத்துக்குள் இருந்த எம் .பிக்கள் அமைச்சர்கள் அனைவரும் நண்பர்கள் . அதனால் நானே அமைச்சருக்கு தொலைபேசியில் அழைத்து அவரை சந்திக்க நேரம் கேட்டேன் .
அப்போது 2.30 மணிக்கு வாருங்கள் என்கிறார் . நான் கேட்டேன் பகல் 2.30 மணிக்கா என்று . இல்லை இரவு என்று சொல்லிவிட்டு கொஞ்சம் பிசியாக இருப்பதாக போனை வைத்துவிட்டார் . அப்போது எனக்கு பதற்றமாக இருந்தது . என்ன நள்ளிரவு 2.30 மணிக்கு என்று மனுஷன் சொல்றாரே என்று . எதற்கும் மாலையில் மீண்டும் ஒரு முறை எடுத்து "நான் உங்களை சந்திக்க நீங்கள் இரவு 2.30 மணிக்கு அப்பொய்ன்ட்மென்ட் தந்தது சரிதானே என்று கேட்டேன் . சரி என்றார் .
அப்பவும் எனக்கு ஒரு டௌட் இவர் சுய உணர்வில் சொன்னாரா அல்லது வேறு ஏதும் குழப்பமோ என்று . நள்ளிரவு 2.30 மணிக்கு யார் பொது அலுவல் பார்ப்பது . அதுவும் அமைச்சர் ஒருவர் . இப்படியெல்லாம் யோசித்தேன் . பின்னர் மீண்டும் அவரது மெய்ப் பாதுகாவலருக்கு கோல் போட்டு அமைச்சர் நாளை நள்ளிரவு அல்லது அதிகாலை 2.30 மணிக்கு வர சொன்னார் சரியா என்று கேட்டேன் . அவரும் அமைச்சர் வர சொன்னார் என்றால் சரியாக தான் இருக்கும் என்றார் . அப்பவும் எனக்கு டவுட் தான் .
பின்னர் மீண்டும் அவரது மணைவிக்கு அவரது நம்பரை எடுத்து ஒரு கோல் போட்டு நான் அமைச்சரை சந்திக்க கேட்டேன் . அதிகாலை 2.30 க்கு வர சொன்னார் . சரியா என்று கேட்டேன் . அதற்கு அவரும் நீங்கள் 2.00 மணிக்கே வாருங்கள் என்றார் . சரி பார்ப்போம் என்று முடிவு செய்துகொண்டு எனது நண்பரை எனது கொழும்பில் உள்ள அறையில் தங்க வைத்து சரியாக 1.30 மணிக்கே கொழும்பில் உள்ள அவரது வீட்டுக்கு போனோம் . சரியாக அதிகாலை 2.00 மணி.
வீட்டின் முன்னால் ஒரு பெரிய கூடாரம் . கதிரைகள் போடப்பட்டிருந்தன . அங்கே 300 பேருக்கு மேல் அமைச்சரை சந்திக்க அமைதியாக காத்திருக்கின்றனர் . அப்போது நான் எனது நண்பரை அழைத்துக்கொண்டு அங்கிருந்த சனக்கூட்டத்தின் முன்னால் . நின்றேன் . அப்போது என்ன ஆச்சர்யம் ? அமைச்சர் தேநீர் கோப்பையுடன் விடிந்தும் விடியாத நள்ளிரவைக் கடந்த அந்த நேரத்தில் அன்றைய நாளிதழ்களை புரட்டிக்கொண்டிருந்தார் .
நான் சற்று முன்னாள் சென்று எட்டிப்பார்த்தவுடன் கையை அசைத்து என்னை கூப்பிட்டு என்ன விஷயம் என்று கேட்டார் . விஷயத்தை சொன்னவுடன் Note போடவேண்டிய காகிதங்களில் கணமான எழுத்துக்களில் வேண்டியதை எழுதிவிட்டு வேறு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் .
அப்போது நான் சொன்னேன் "நான் நாளை காலை வருகின்றேன் . நீங்கள் சேர்மனுக்கு ஒருமுறை இந்த வேலையை கொடுக்க சொன்னால் சாரி" என்றேன் . என்ன ஆச்சர்யம் அந்த நேரமே அதிகாலை மணி 2.15 CHAIRMAN னுக்கு கோல் அடித்து Note போட்டிருக்கிறேன் வேலையை செய்து கொடு என்று உத்தரவு போட்டார் .
அப்போது நான் கேட்டேன் இந்த நேரம் CHAIRMAN நை டிஸ்டர்ப் பண்ண கூடாதே என்று . அதற்கு அமைச்சர் சொன்ன பதில் "நான் 1.00 மணிக்கு தஹஜ்ஜுத் தொழுகைக்கு எலும்புவேன் . அப்போ எனது எல்லா இலாக்காக்களதும் சேர்மன் மார்களை ரிங் போட்டு எழுப்புவேன்" என்கிறார் .
பௌசி அமைச்சராக இருந்த காலத்தில் மக்களால் மக்களுக்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எந்தளவுக்கு பொறுப்புணர்வோடு சேவை ஆற்றினார் என்பதற்கு இந்த நிகழ்வை நான் ஒருஉதாரணமாகவே இங்கு குறிப்பிடுகின்றேன் .
அவர் வழக்கமாக அதிகாலை 2.00 மணியளவில் எழும்பி நள்ளிரவு வணக்கமான தகஜ்ஜுது தொழுகையை நிறைவேற்றிவிட்டு சில நிமிடங்கள் அன்றைய நாளிதழ்களை படிப்பார் . அதுவும் அவரது இலாக்காக்கள் பற்றிய செய்திகள், குறைகள் , பிரச்சினைகள் பற்றிய செய்திகள் இருந்தால் உடனே நடவடிக்கைக்கு உத்தரவிடுவார் என்று சொன்னார் . காலை 7.00 மணிவரை இவ்வாறு பொதுமக்கள் பிரச்சினைகள் குறை கேற்பதை செய்துவிட்டு சரியாக நேரத்துக்கு தனது அமைச்சு , திணைக்களங்களுக்கு போய் அடுத்த பணியை செய்து வந்த ஒருவராவார் .
ஒருவர் பற்றி தெரியாத பலரும் பலவிதமான விமர்சனங்களை செய்கின்றனர் . ஆனால் அவரின் வாழ்க்கை வரலாறு எப்படிப்பட்டது என்பதை அறிய இவ்வாறான நிகழ்வுகள்தான் ஆதாரங்களாக அமைகின்றன . மற்றவர்கள் இப்படி வேலை செய்யவில்லை என்று நான் சொல்ல வரவில்லை . மக்களுக்காகக தங்களை முழுமையாக அர்ப்பணிதத்தவர்கள் நடைமுறை அரசியலில் இருந்தனர் , இருக்கின்றனர் .
அந்த உணர்வு இல்லாதவர்கள் அமைச்சரோ , சாதாரண அதிகாரிகளோ யாராக இருந்தாலும் இப்படியான நல்லவர்களின் வாழ்க்கையில் இருந்து படிப்பினை பெறுவது அவசியமாகின்றது என்பதற்கே இதனை பதிவிட்டேன் .
Post a Comment