குவைத்தில் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வு - அர்ப்பணிப்பை மெச்சினார் தூதுவர் (படங்கள்)
இந்நிகழ்வில் குவைத் நாட்டின் பொது வேலைகள் மற்றும் நீர், மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சருமான கலாநிதி அமானி சுலைமான் பூ கமஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். குவைத் வெளிவிகார அமைச்சின் ஆசிய விவகாரங்களுக்கான பிரிவின் ஆலோசகர்கள் மற்றும் குவைத்திலுள்ள 100 க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தூதுவர்கள், உள்துறை மற்றும் தொழில் அமைச்சு அதிகாரிகள், சர்வதேச பெண்கள் அமையத்தின் (IWG) உறுப்பினர்கள், முன்னணி இலங்கை பிரஜைகள் மற்றும் குவைத் அரச மற்றும் தனியார் ஊடக பிரதானிகள் அடங்கலாக சுமார் 400 க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்திருந்தனர்.
பிரதம அதிதிகளால் மங்கள விளக்கேற்றப்பட்டு குவைத் மற்றும் இலங்கை தேசிய இசைக்கப்பட்டதை அடுத்து குவைத்துக்கான இலங்கை தூதுவர் மேதகு காண்டீபன் பாலசுப்ரமணியம் சபையோரை விளித்து உரையாற்றுகையில்,
இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து ஆட்சிக்கு வந்த அரசுகளின் தூர நோக்குடனான முன்னெடுப்புகளின் பலனாக இலங்கை இன்று பிராந்தியத்தில் உயர் எழுத்தறிவு வீதத்தை கொண்டுள்ளதோடு, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத்தர குறிகாட்டிகளில் ஒரு குறிப்பிடத்தக்க நிலையை அடைந்துள்ளது என குறிப்பிட்ட தூதுவர், இலங்கை சர்வதேச அளவில் வெளிநாடுகளுடன் கொண்டுள்ள நெருக்கமான இராஜதந்திர உறவு மற்றும் பிராந்திய, சர்வதேச அமைப்புக்களுக்கு இலங்கை வழங்கி வரும் ஆக்கபூர்வமான பங்களிப்பு தொடர்பிலும் கருத்துத் தெரிவித்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு 50 வருட கால ராஜதந்திர உறவினை குவைத் இலங்கை நாடுகள் பூர்த்தி செய்தனை தூதுவர் மகிழ்வுடன் நினைவுகூர்ந்தார்.
குவைத்தில் வாழும் 100 ,000 க்கும் மேற்படட இலங்கையர்களின் நாட்டுக்கான அர்ப்பணிப்பை மெச்சிய தூதுவர் இரு நாடுகளுக்கு இடையிலான பல்தரப்பு உறவுகளின் உந்துசக்தியாக இவர்கள் இருந்து வருவதனை பாராட்டிப் பேசியதோடு , அண்மைக்காலமாக குவைத் தொழில் சந்தைக்கு இலங்கையிலிருந்து துறைசார் மற்றும் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் உள்வாங்கப்படுவதனையும் குறிப்பிட்டார்.
குவைத் அரச மற்றும் தனியார் தொழில் வழங்குனர்கள் இலங்கை மனித வளத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை நன்றியுணர்வுடன் மீட்டிய தூதுவர், அரச மற்றும் தனியார் தொழில் வழங்குனர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
இரு தரப்பு பொருளாதார , வணிக, அரசியல் மற்றும் கலாச்சாரம் அடங்கலான ஒட்டுமொத்த இரு தரப்பு செயற்பாடுகளில் கால்கோளாக இருக்கும் இருநாட்டு உறவுகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தினை வலியுறுத்திய காண்டீபன் அவர்கள், கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் இரு தரப்பு வணிக, அரசியல் செயற்பாடுகள் மீண்டும் புத்துணர்ச்ச்சியுடன் இடம் பெருவதனையும் குறிப்பிட்டார். .
புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ அவர்களின் தலையிலான புதிய அரசாங்கம் மிக அவசியமான அரசியல் ஸ்திரநிலையை இலங்கையினுள் உறுதி செய்துள்ளது என குறிப்பிட்ட தூதுவர் அவர்கள், நல்லிணக்கம் மற்றும் நிலையான ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் என்பவற்றை உருவாக்க புதிய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை பாராட்டினார்.
வர்த்தக ராஜதந்திரத்தில் ஒரு முனைப்பான மென் சக்தியாக கலாச்சாரம் திகழ்வதன் முக்கியத்துவத்தைக் கோடிட்டு காட்டிய குவைத்துக்கான இலங்கை தூதுவர் இலங்கையிலிருந்து வந்து கலந்து கொண்டிருந்த ரசிக்க – நிஷா கொத்தலாவல கலைக் கல்லூரியின் கலாசார குழுவினரின் கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்வுறுமாறு கேட்டுக் கொண்டார்.
சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் முக்கிய அங்கமாக இலங்கையிலிருந்து வந்து கலந்துகொண்டிருந்த ரசிக்க – நிஷா கலைக் கல்லூரியின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, செவ்விளநீர் பானத்துடன் வரவேற்கப்பட்ட பிரமுகர்கள் இலங்கைக்கே உரித்தான இராப்போசனத்துடன் உபசரிக்கப்பட்டனர்.
Post a Comment