Header Ads



75 மாணவர்களுக்கு CMT Campus, உயர் கல்விக்கான புலமைப் பரிசில் வழங்கியது


(எம்.எம்.அஸ்லம்)


நாட்டின் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு CMT Campus (சி.எம்.ரி.கெம்பஸ்) 75 மாணவர்களுக்கு உயர் கல்விக்கான புலமைப் பரிசில்களை வழங்கியுள்ளது.


சுதந்திர தின விழா மற்றும் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு என்பன கெம்பஸின் கல்முனை அலுவலகத்தில் அதன் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் றிஸ்டி ஷரீப் தலைமையில் இடம்பெற்றபோது இவர்களுக்கான புலமைப் பரிசில் பத்திரங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.


இதில் கெம்பஸ் தவிசாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், கல்முனை இராணுவ முகாமின் இரண்டாவது கட்டளைத் தளபதி மேஜர் தர்சன தரங்க, பெரிய நீலாவணை விஷேட அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.எஸ். ரத்னாயக்க ஆகியோர் கெளரவ அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.


பல்கலைக்கழக வாய்ப்புக் கிடைக்காத, பொருளாதார வசதி குறைந்த மாணவர்களும் பட்டப்படிப்புகளை மேற்கொள்ளும் பொருட்டு தேசிய பல்கலைக் கழகங்களுக்கு நிகராக கிழக்கு மாகாணத்தில் தனியார் பல்கலைக் கழகம் ஒன்றை அமைப்பதற்கான இலக்கை நோக்கி சீ.எம்.ரி.கெம்பஸ் பயணிப்பதாக அதன் தவிசாளர் ஏ.எம்.ஜெமீல் தனதுரையில் குறிப்பிட்டார்.


கடந்த 20 வருடங்களாக இப்பிராந்தியத்தில் நம்பகத்தன்மையுடன் இயங்கி வருகின்ற இக்கல்வி நிறுவனம் தற்போது மலேசியாவின் மலாக்கா பல்கலைக்கழகத்துடன் கூட்டிணைப்பு செய்யப்பட்டு, தனது கல்விப் பணியை உத்வேகத்துடன் முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்களான எம்.எச்.தௌபீக், ஏ.ஜௌபர்,  போன்றோருடன் மேற்படி உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர்களான எம்.ஏ.நளீர், பி.எம்.நளீம் முகைடீன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.


நிகழ்வின் ஆரம்பத்தில் தேசியக் கொடியேற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்காக உயிர்நீத்த படை வீரர்களுக்காக 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.





No comments

Powered by Blogger.