கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகளாக வீட்டைப் பூட்டிக்கொண்டு முடங்கிக் கிடந்த தாய், மகன்
2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், ஒட்டுமொத்த உலகையுமே ஒருசுற்று அச்சுறுத்தியது. கொரோனாவின் தாக்கம் முதலில் இந்தியாவிலும் கடுமையாகவே இருந்தது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டாயமாக்கப்பட்டது. பின்னர் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஊரடங்கு தளர்த்தப்பட்டு முதல் டோஸ், இரண்டாம் டோஸ், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்ட பிறகு மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்பியது.
இப்படி ஒருபக்கம் நாடு இயல்புநிலைக்குத் திரும்பியிருக்கும் நிலையில், ஹரியானாவைச் சேர்ந்த முன்முன் மாஜி (33) என்பவர், கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள மூன்று ஆண்டுகள் தன் 10 வயது மகனுடன் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
2020-ல், முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது, அலுவலகத்துக்கு வேலைக்குச் சென்றுவந்த தன் கணவனையும்கூட, முன்முன் மாஜி வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. பிறகு, அதே பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து மகனுடன் தனியாகத் தங்கத் தொடங்கினார் முன்முன் மாஜி. அதன் பின்னர் அவரின் கணவர் சுஜன், வீட்டுக்கு வாடகை, மின்கட்டணம் செலுத்தி, மளிகை, ரேஷன் பொருள்கள் போன்றவற்றை வீட்டுக்கு வெளியே வைத்துவிட்டு வந்திருக்கிறார். மேலும், வீடியோ கால் மூலமாக மட்டுமே சுஜன் தன்னுடைய மனைவி, மகனைத் தொடர்புகொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 17-ம் தேதியன்று சுஜன், இந்த விஷயத்தை போலீஸிடம் கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், வீட்டின் கதவை உடைத்து தாய், மகன் இருவரையும் மீட்டனர். மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக குருகிராம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தன் மனைவியையும், மகனையும் மீட்டுக்கொடுத்ததற்கு போலீஸுக்கு சுஜன் நன்றி தெரிவித்தார்.
பின்னர் இது குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரி குமார், ``முதலில் சுஜன் கூறியதை நம்பவில்லை. பிறகு அவரின் மனைவி, மகனுடன் வீடியோ காலில் பேசிய பிறகே இந்த விஷயத்துக்குள் நுழைந்தேன். இன்னும் கொஞ்ச நாள்கள் இப்படியே இருந்திருந்தால் ஏதேனும் அசம்பாவிதம்கூட நடந்திருக்கும். அவர்களின் மகன் மூன்று ஆண்டுகளாக சூரியனைக்கூட பார்த்ததில்லை" என்று தெரிவித்தார்.
Post a Comment