உடுநுவரயை உலுக்கிய 3 உயிரிழப்புகள் - பெற்றோர் மேற்கொண்ட தீர்மானம்
- எம்.எம்.எம். ரம்ஸீன் -
வாழ்க்கையில் மரணம் என்பது தவிர்க்க முடியாத விடயமாயினும் குடும்பத்தினர், நண்பர்கள் மத்தியில் உறவுகளின் இழப்பு தாங்கிக்கொள்ள முடியாத சோகத்தை விட்டுச் செல்வதுண்டு. அதிலும், இளவயது மரணங்கள் குடும்பங்களில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி விடுவதைக் காணலாம். எனினும், இம்மரணங்கள் பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு வாழ்வியலின் பாடத்தைக் கற்றுத்தர தவறுவதில்லை.
கண்டி மாவட்டத்தில் உடுநுவர பகுதியில் கடந்த இரு வாரங்களுக்குள் கோர விபத்துக்களால் இடம்பெற்ற மூன்று வாலிபர்களின் அடுத்தடுத்த இழப்புக்கள் இப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி விட்டது.
உடுநுவர எலமல்தெனிய பகுதியை சேர்ந்த எம்.ஐ.எம். இன்சாப் என்ற வாலிபன் பொலன்னறுவையை அண்டிய புனானை பகுதியில் ஓட்டிச் சென்ற லொறி பஸ் வண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் இடம்பெற்று அடுத்த நாள் பெப்ரவரி 1 ஆம் திகதி இரவு 10 மணியளவில் கம்பளை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் இடம்பெற்ற மற்றொரு கோர விபத்தில் உடுநுவர வெலம்பொடை பகுதியை சேர்ந்த 19 மற்றும் 20 வயது இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
வெலம்பொடை பாடசாலை வீதியை சேர்ந்த எம்.எஸ். சபீக் மற்றும் லியங்கஹவத்தை சேர்ந்த எம்.ஜி.எம். அர்சாட் ஆகியோரே இவ்விபத்தில் சிக்கி பலியாகினர். இச்சம்பவத்தில், எம்.எஸ். சபீக் தனது தந்தை நாவலப்பிட்டியில் பணியாற்றும் தேயிலைத் தொழிற்சாலைக்கு சென்று தந்தையிடம் மடிக்கணனியை கொடுத்து விட்டு நண்பனான எம்.ஜி.எம். அர்சாதுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கம்பளை ஹெட்காலை எனும் இடத்தில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனமொன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது கம்பளையில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி சென்று கொண்டிருந்த காருடன் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.
மேற்படி விபத்துக்களில் உயிரிழந்த எலமல்தெனிய எம்.ஐ.எம். இன்சாபின் ஜனாஸா நல்லடக்கம் வரஹந்தெனிய ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியிலும் எம்.எஸ். சபீக் மற்றும் எம்.ஜி.எம். அர்சாட் ஆகியோரின் ஜனாஸா நல்லடக்கம் வெலம்பொடை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியிலும் பெருந்திரளானோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றன.
முச்சக்கரவண்டி பள்ளிவாசலுக்கு கையளிக்கப்பட்டபோது….
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் எண்ணத்துடன் இருந்த எம்.எஸ். சபீக்கின் முச்சக்கரவண்டியை அவரின் பெற்றோர் மகனின் இழப்புக்குப் பின்னர் வெலம்பொடை ஜும்ஆ பள்ளிவாசலில் இயங்கும் மக்களை வட்டியில் இருந்து பாதுகாக்கும் அழகிய கடன் திட்டத்திற்கு நிலையான தர்மமாக வழங்கியுள்ளனர். இக்கடன்திட்டம் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட வெலம்பொடை பகுதியில் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடைந்து வருவதாகத் தெரிய வருகின்றது.- Vidivelli
Post a Comment