Header Ads



11 வயது சிறுவன் வபாத், உயிரிழப்புகளின் பின்னர் கண்விழிக்கும் சம்மாந்துறை பிரதேச சபை



- பாறுக் ஷிஹான் -

செந்நெல் கிராமம் அறபா பள்ளிவாசல் பிரதேசத்தில்  கல்குவாரியினால் உருவான ஆழமான குட்டையில் நீர் காணப்பட்டதினால் அப்பிரதேசத்தினை  சிறுவர்   குளிப்பதற்காக குதித்து உயிரிழந்துள்ள சம்பவத்தை அடுத்து குட்டையை  மூடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 இச்சம்பவம் இப்பிரதேசத்தில் இனியும் இடம்பெறக் கூடாது என்பதற்காக சம்மாந்துறை பிரதேச சபையின்  தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர்  தலைமையில் சம்மாந்துறை  பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாஇ சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.கபீர்இ சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட்இ பிரதேச சபை உறுப்பினர்களான பீ.எம்.றியாழ்இ எஸ்.நளீம்இ முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம்.சஹீல்இ மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஐ.எல். றாசீக் கிராமசேவை உத்தியோகத்தர் உள்ளிட்ட குழுவினருடன் குறித்த இடத்திற்கு இன்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.


அப்பிரதேசத்தில் வாழும் மக்களிடம் சென்று இக்குட்டை தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன்  சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பற்ற வகையில்  மூடிதந்தால் எதிர்காலத்தில்  இவ்வாறான சம்பவம் இடம்பெறாமல் பாதுகாக்க முடியும் என்று  பொதுமக்கள்  தவிசாளரிடம் குறிப்பிட்டனர்.


இதனை மூடுவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுவதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் உடணடியாக விசேட கலந்துரையாடலை ஏற்பாடு செய்யுமாறு பிரதேச சபை செயலாளருக்கு பணிப்புரை வழங்கியதுடன்இ முடியுமான வரை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தவிசாளர் உறுதியளித்தார்.


இவ்வனர்த்தத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரபா பள்ளிவாசல் வீதி செந்நெல் கிராமம்-1 பிரிவினை சேர்ந்த 11 வயதுடைய அமீர் அன்சீப்  என்ற சிறுவனே  உயிரிழந்தவர். ஆவார்.சம்மாந்துறை செந்நெல் சாஹிரா வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்ற இம்மாணவன் குடும்பத்தில் 10 பிள்ளையாவார்.இம்மாணவரின் வீட்டின் அருகில் கல்குவாரி குட்டை ஒன்று காணப்படுகின்றது.


இக்கல்குவாரி குட்டையில் 11 அடி ஆழத்தில் மழை நீர் உட்சென்று நிரம்பி இருந்துள்ளது.மேலும் இந்த நீர்மட்டத்தில் இருந்து 11 அடி உயரத்தில் மலை ஒன்றும் உள்ளது.வழமையாக இம்மலையில் இறங்கியே குளிப்பது வழமையாகும்.ஆனால் தற்போது நீர்மட்டம் அதிகரித்து காணப்பட்டதனால் எவரும் குளிப்பதற்கு அவ்விடத்திற்கு செல்வதில்லை.சம்பவ தினமன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை(26) மாலை 5.30 குறித்த மரணமடைந்த மாணவன் வீதியில் நின்றுள்ளார்.இம்மாணவனின் வயதினை ஒத்த இரு நண்பர்கள் அவ்வீதியினூடாக  அருகில் உள்ள கடைக்கு சுவிங்கியம் வாங்க சென்றுள்ளனர்.


அவ்வாறு செல்லும் போது மரணமடைந்த மாணவனுக்கும் சுவிங்கியம் வாங்கி கொடுத்துள்ளனர்.அந்நேரம் மரணமடைந்த மாணவன் தனது இரு நண்பர்களிடமும் தான் குவாரி குட்டையில் இறங்கி குளிக்க போவதாக கூறியுள்ளார்.எனினும் நண்பர்கள் மரணமடைந்த மாணவனிடம் இங்கு பேய் உள்ளது குளிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.ஆனால் அம்மாணவன் தனது ஆடைகளை களைந்து நண்பர்களின் சொல் கேளாது குட்டையில் குளிப்பதற்காக பாய்ந்துள்ளார்.இவ்வாறு பாய்ந்தவருக்கு மூச்சு திணறி நீர்மட்டத்தில் மேலே வந்து அபயக்குரல் எழுப்பியுள்ளார்.இதன் போது அம்மாணவனின் நண்பன் ஒருவனுக்கு நன்கு நீச்சல் தெரியும் என்ற காரணத்தினால் குறித்த குட்டையில் நண்பனை காப்பாற்றும் நோக்கில் குதித்துள்ளார்.இவ்வாறு குதித்த நண்பன் குட்டை சகதியில் சிக்கிய அம்மாணவனை மீட்க போராடிய நிலையில் மீண்டும் அருகில் உள்ள அம்மாணவனின் வீட்டிற்கு சென்று உறவினர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.


அங்கு வந்த உறவினர்கள் உடனடியாக குட்டையில் இறங்கி குட்டை சதுப்பு நிலத்தில் 20 நிமிடங்களுக்கு மேலாக தேடுதல் மேற்கொண்டு ஆழமான பகுதியில் சிக்கி  உணர்வற்று காணப்பட்ட அம்மாணவனை மீட்டு  முதலுதவி சிகிச்சைகளை வழங்கிய பின்னர்  சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு உடனடியாக  எடுத்து சென்றுள்ளனர்.


இருந்த போதிலும் குறித்த மாணவனது உயிர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இடைநடுவில் பிரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


இவ்வாறு   வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட சிறுவன் மரணமடைந்த நிலையில் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம்  மரண விசாரணை நடாத்திய பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் இச்சிறுவன் நீரில் மூழ்கியதனால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளதாக மரணவிசாரணை தீர்ப்பு வழங்கப்பட்டு திங்கட்கிழமை(27) மதியம்  உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


சம்பவ இடத்திற்கு சென்று சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுகுற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான ஏ.எம் நௌபர் மற்றும் சார்ஜன்டுகளான ஏ.எம் மஜீட் எம்.ஹனீபா   ஆகிய பொலிஸ்குழு  இச்சம்பவம் தொடர்பில்   மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள இந்த கல்குவாரி குட்டை சுமார் 20 வருடங்களாக உபயோகிக்கப்படாமல்  காணப்படுவதாகவும் சுமார் கிட்டத்தட்ட 30 அடி ஆழமாக உள்ளதாகவும்  அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.