இருமல் மருந்தினால் உயிரிழப்பு: அவசர நடவடிக்கை எடுக்க WHO அழைப்பு
2022ஆம் ஆண்டில் காம்பியா, இந்தோனேசியா மற்றும் உஸ்பகிஸ்தானில் பிரதானமாக 5 வயதுக்குக் குறைந்த 300க்கும் அதிகமான குழந்தைகள் அசுத்தமான மருந்துடன், தொடர்புபட்டு உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு கடந்த திங்கட்கிழமை (23) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. சிறுநீரக பாதிப்பினாலேயே அதிகமான குழந்தைகள் உயிரிழந்தன.
இதில் பயன்படுத்தப்பட்ட இருமல் மருந்துகளில் டைதிலீன் கிளைக்கோல் மற்றும் எத்திலீன் கிளைக்கோல் இரசாயனம் அதிக அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
“இந்த அசுத்தங்கள் தொழில்துறை கரைசல்கள் மற்றும் உறைதலுக்கு எதிரான பொருட்களாக பயன்படுத்தப்படுபவை. இவற்றை சிறிய அளவில் எடுத்தாலும் கூட உயிராபத்துக் கொண்டவை. இவைகளை ஒருபோதும் மருந்துகளில் பயன்படுத்தக் கூடாது” என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.
மேற்குறிப்பிட்ட நாடுகள் தவிர்த்து இந்த மருந்துகள் விற்கப்பட்ட பிலிப்பைன்ஸ், டிமோர் லஸ்டே, செனகல் மற்றும் கம்போடிய நாடுகளும் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது. மேலும் உயிரிழப்புகளை தடுக்க 194 உறுப்பு நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது அழைப்பு விடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு கடந்த ஒக்டோபர் மற்றும் இந்த மாத ஆரம்பத்தில் குறிப்பிட்ட மருந்து உற்பத்திகளின் பயன்பாட்டை கைவிட அறிவுறுத்தி இருந்தது. இதில் இந்தியாவின் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் மரியோன் பயோடெக் மருந்து உற்பத்தி நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளே உயிரிழப்புகளுக்குக் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது.
தவிர உள்நாட்டில் விற்பனை மேற்கொண்ட இந்தோனேசியாவின் நான்கு மருந்து உற்பத்தி நிறுவனங்களின் மருந்துகள் மீதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Post a Comment