Header Ads



சில அமைச்சர்களும், Mp க்களும் தேர்தல் முரண்பாடான, பொய்யான கருத்துக்களை வௌியிட்டனர்


சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறு அரசாங்கம், அரசியல் கட்சிகள், மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனு கோரலுக்கான திகதியை அறிவிப்பதற்கு முன்பிருந்தே சில தரப்பினர் தேர்தல் நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.


சில அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் தொடர்பில் முரண்பாடான கருத்துகளை வௌியிட்டமை, கட்டுப்பணம் பொறுப்பேற்பதை இடைநிறுத்துமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், மாவட்ட செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியமை ஆகிய விடயங்கள் குறித்து பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.


தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபருக்கிடையிலான சந்திப்பு தொடர்பில் சில ஊடகங்கள் போலியான தகவல்களை வௌியிட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் இவற்றில் உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இவ்வாறான கருத்துகள் மற்றும் சிக்கல்களை உருவாக்கும் செயற்பாடுகள் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு இடையூறாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் அவதானம் செலுத்தி தேர்தலை உரிய முறையில் தேர்தலை நடத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

1 comment:

  1. ​தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் எவ்வளவு நேர்மையாக சட்டங்களை மதித்து நடந்து கொண்டாலும், அவரை அச்சுறுத்தவும், பலவந்தப்படுத்தவும் அரச சக்திகள் கண்டிப்பாக முயற்சி செய்துகொண்டே இருக்கும். இறுதியில் பதவியிலிருந்து விலகுவதற்கும் அவர் எத்தனிக்கக்கூடும். ஏனெனில் தனிமனிதனால் சகிப்பதற்கு அளவிருக்கின்றது. எனவே, ஜனநாயகத்தை ஆதரிக்கும் பொதுமக்களும் கற்றவர்களும் மிகவும் முக்கியமாக தேர்தல் ஆணையாளருக்கு எல்லாவகையிலும் உறுதுணையாக இருந்து தேர்தலை வெற்றிகரமாக நடாத்த அவருடன் ஒத்துழைக்க வேண்டும். இது இந்த நாட்டு மக்கள் அனைவரினதும் கடமையாகும். பொதுமக்கள், துறைசார்ந்தவர்களின் ஒத்துழைப்பு இன்றி தேர்தல் ஆணையாளருக்கு நேர்மையாக நடக்கமுடியாது என்பதை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.