விநோதமான முறையில், தவிசாளராக தெரிவான சுபையிர்
- றியாஸ் ஆதம் - -
ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் சுபையிர் செவ்வாய்க்கிழமை (24) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஏறாவூர் நகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதனால், அந்த சபையின் தவிசாளர் பதவியிழந்தார்.
இதனையடுத்து, ஏறாவூர் நகர சபையில் வெற்றிடமாகக் காணப்பட்ட தவிசாளர் பதவிக்கு புதிய தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான கூட்டம் செவ்வாய்க்கிழமை (24) சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தின் போது தவிசாளர் பதவிக்காக எம்.எஸ்.சுபையிர் மற்றும் கே.இஸ்மத் இப்திகார் ஆகியோரின் பெயர்கள் சபையில் முன்மொழியப்பட்டது. அதனையடுத்து நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது குறித்த இரு உறுப்பினர்களுக்கும் சம அளவிலான வாக்குககள் கிடைத்ததனால் உள்ளூராட்சி சட்ட விதிகளின் பிரகாரம் குலுக்கள் முறை சீட்டெடுப்பின் மூலம் தவிசாளர் தெரிவு செய்யப்படுவார் என ஆணையாளர் சபையில் அறிவித்தார்.
இதனையடுத்து இடம்பெற்ற குலுக்கள் முறை சீட்டிலுப்பில் முன்னாள் அமைச்சர் சுபையிர் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து நடைபெறப்போகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகர சபைக்கு பலமான அணியொன்றினை களமிறக்கியுள்ளார்.
சுபையிர் தலைமையிலான அணியினர் ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment