Header Ads



மின்சார அமைச்சரின் கணித அறிவை, பரிசோதிக்குமாறு கோரிக்கை


இலங்கை மின்சார சபையின் இலாபம் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்த கருத்தை நிராகரிப்பதாக, முன்னாள் மின்சக்தி அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 


வருடாந்தம் டிசம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நீர் மின்னுற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மின்சார சபை செயற்பாட்டு  இலாபத்தை ஈட்டிவருவதாக கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 


குறித்த செயற்பாட்டு இலாபம் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின்கட்டணப் பட்டியலை அதிகரித்ததன் மூலம் ஏற்பட்டது அல்லவெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


2017ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டு வரை இலங்கை மின்சார சபை நிதி அறிக்கையினை பெற்றுக்கொண்ட நிலையில்  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் வௌியிடப்பட்ட அறிக்கைகள் தவறானவை என கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


எனினும், 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கட்டணப் பட்டியல் அதிகரிக்கப்படாவிடில் மின்சார சபைக்கு மாதாந்தம் 11 மில்லியன் நஷ்டம் ஏற்படும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி  சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் .


2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நீர் மின்சாரம் 635.5 கிகாவாட்டாகவும் 655 கிகாவாட்டாகவும்  காணப்படுவதுடன் அதன்போது மின்சார சபையின் செலவுகள் குறைவடையும் எனவும் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின்சார சபை, நீர் மின்னுற்பத்தி, மின்கட்டணத் திருத்தத்துடன் 9 பில்லியன் இழப்பினை எதிர்நோக்கியுள்ளதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். 


பொய்யான, தவறாக வழிநடத்தும் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு முன்னர் தற்போதுள்ள மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் தமது கணித அறிவை பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என முன்னாள் மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.