Header Ads



வித்தியாசமான வியூகங்களை வகுத்து போட்டியிடுகிறோம் - ஹக்கீம்


ஐக்கிய மக்கள் சக்தியோடு சேர்ந்தும், தனித்தும் பல மாவட்டங்களில் வித்தியாசமான வியூகங்களை வகுத்து  போட்டியிடுவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புத்தளத்தில் திங்கட்கிழமை(16) தெரிவித்தார்.

அங்கு புத்தளம்,கற்பிட்டி, வவுனியா,மன்னார் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களைச் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர்  இதனைக் கூறினார்.


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது,


எங்களுடைய நேச கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியோடு சில மாவட்டங்களில் நாம் சேர்ந்து போட்டியிடுகின்றோம். கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களுக்கு மீண்டும் வேட்பாளர் ஆகும் வாய்ப்பை ஐக்கிய மக்கள் சக்தி தருகின்ற போது அவர்களை அங்கே நிறுத்துகின்றோம். அவ்வாறு இல்லாமல் சில இடங்களில் சர்ச்சைகள் ஏற்படுகன்ற போது தவிர்க்க முடியாமல் தனித்து போட்டியிடுகின்ற நிலைபாடுகள் பல இடங்களில் எங்ளுக்கு ஏற்பட்டு இருக்கின்றன. இவற்றை  நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றோம். எங்களை பொறுத்த மட்டில் தனித்து போட்டியிடுவதில் கட்சிக்கு மிகுந்த அனுகூலங்கள் இருக்கின்றன இந்த தேர்தலில்  தனித்தோ,சேர்ந்தோ போட்டியிடுவதில் கட்சிக்கு என்ன அனுகூலம் என்பதை அடிப்படையாக வைத்து சில முடிவுகளுக்கு வந்திருக்கின்றோம்.


 சினேக பூர்வமாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒரு சினேக கட்சி என்ற அடிப்படையில் இயன்றவரை அவர்களுடன் சேர்ந்து போட்டியிடுவதற்கான முயற்சிகளை நாம் செய்திருக்கின்றோம். அந்த முயற்சிகள் நமக்கு திருப்திகரமாக அமையாத சந்தர்ப்பத்தில் மாத்திரம் நாம் தனித்து போட்டியிட முடிவுகளை செய்துள்ளோம்.


 அதன் அடிப்படையில்தான் புத்தளம் மாநகரசபையில் தனித்து போட்டியிடுவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. இன்று கற்பிட்டி பிரதேச சபையிலும் ஐக்கிய மக்கள் சக்தியோடு சேர்ந்து போட்டியிட வேண்டும் என்ற கூட்டான தீர்மானத்தை அந்த பிரதேசங்களை சேர்ந்த எங்களுடைய வேட்பாளர்களும், கட்சி ஆதரவாளர்களும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருக்கின்றோம். புத்தளம் பிரதேச சபை சம்பந்தமான தீர்மானம் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைபாடை தெரிந்து கொண்ட பின்னர் தனித்தோ சேர்ந்தோ போட்டியிட ஏதுவான முடிவு எட்டப்படும். 


முன்னர்,பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் பள்ளிவாசல்கள் சம்மேளனம், உலமாக்கள், சமூக சேவை,சிவில் சேவை அமைப்புகள் அனைத்தும் நீண்ட காலமாக புத்தளம் தொகுதிக்கு என்று ஒரு முஸ்லிம் தெரிவு செய்யப்படாத துர்ப்பாக்கிய நிலையை அடையாளப்படுத்தி முஸ்லிம் தரப்புகளிடம் வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக, குறிப்பாக முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியோடு எமது நிலைப்பாட்டை தெளிவு படுத்தி நாங்கள் தனித்து தராசு சின்னத்தில் போட்டியிட்டோம். அது ஒரு பாராளுமன்ற தேர்தலுக்கான பாராளுமன்ற ஆசனம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு புத்தளம் மாவட்டதின் மக்களின் நீண்ட நாள் அபிலாசையாக இருந்து வந்துள்ள காரணத்தினால் அந்த வித்தியாசமான நிலைபாட்டை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


அதே போன்ற ஒரு நிலைப்பாட்டை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை பலவீனப்படுத்தி விட்டு நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்ற உத்தேசம் எங்களுக்கு இருக்கவில்லை. இருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி எங்களது முக்கியத்துவத்தை உணர்ந்து சில விட்டு கொடுப்புக்களை செய்திருந்தால் நாம் அவர்களுடன் சேர்ந்து போட்டியிட்டு இருப்போம். 


ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளுர் அமைப்பாளர்கள் தங்களது கட்சி ஆதரவாளர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக எடுத்த சில தீர்மானங்கள் கருத்தில் கொண்டு நாம் தனித்து போட்டியிட சினேக பூர்வமாகவே முடிவுகளை மேற்கொண்டோம். இதில் நாம் ஒருபோதும் பலவீனமடைய போவதில்லை என்று பலமாக நம்புகின்றோம். எனவே இந்த விசித்திரமான தேர்தல் முறையில் சிறிய கட்சிகள் தனித்து போட்டியிட்டு ஆதரவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியாத நிலவரம் பெரிய கட்சிகளுக்கு ஏற்படும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் பேரம் பேச வேண்டிய நிலைபாடு வரும். 


அரசாங்கம் தேர்தல் நடத்த வேண்டிய சட்டபூர்வமான நிலவரம் ஒன்று ஏற்பட்ட பிறகு அதனை பிற்போடுவதற்கு, தங்களின் கட்சிகள் வெற்றி பெறுவதற்கு குறைவு என்ற காரணத்தினால் இந்த தேர்தலுக்கான செலவீனங்களுக்கு பணம் செலவழிப்பது வீண் விரயம் என்ற ஒரு நிலைப்பாட்டை உருவாக்கி இருக்கின்றார்கள். அதனை விடவும் வீண் விரயங்கள் அரசாங்கத்தினால் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.


இந்த வருடத்தின் செலவீனங்களில் 1.3 சதவீதம் மாத்திரமே இந்த தேர்தலுக்கான செலவீனமாக இருக்கின்றது. இதனை பெரிய செலவீனமாக காட்டி இந்த நாட்டின் உண்மையாக நிலவரம் என்ன என்பதை உலகமும் இந்த நாடும் தெரிந்து கொள்ளகூடிய வாய்ப்பை வேண்டுமென்றே பிற்போடுவது சாத்தியமானதல்ல. நிச்சயமாக தேர்தல் நடக்க வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.