Header Ads



தேர்தலில் எமக்கு அமோக வெற்றி கிடைக்கும், அடுத்த தேர்தலையும் குறி வைத்தே போட்டி - மைத்திரிபால


எந்த சவாலையும் எந்த சக்தியையும் பலமாக எதிர்கொண்டு முழு நாடும் வெற்றி பெறும் எனவும் வடக்கு, கிழக்கு உட்பட 326 உள்ளூராட்சி சபைகளுக்கு கை சின்னத்தில் போட்டியிட்டு நாட்டு மக்களை வெற்றி பெற செய்ய போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக பொலன்நறுவை மாவட்டத்திற்கான வேட்புமனுக்களை இன்று -21- தாக்கல் செய்யும் நிகழ்வில் அவர் இதனை கூறியுள்ளார்.


இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கை சின்னத்தில் போட்டியிடுகிறது. பொலன்நறுவை மாவட்டத்தில் 8 உள்ளூராட்சி சபைகள் இருக்கின்றன.


அனைத்து சபைகளுக்காகவும் நாங்கள் போட்டியிடுகிறோம். பொலன்நறுவையில் அமோக வெற்றியை பெறுவோம். கடந்த காலங்களில் நான் பொலன்நறுவையின் விவசாயிகளுக்காக குரல் கொடுத்தேன்.


வீதியில் பேரணி சென்றேன். வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினேன். கூட்டங்களை நடத்தினேன். நாடாளுமன்றத்தில் ஆற்றிய அனைத்து உரைகளிலும் தீர்க்கப்படாத விவசாயிகளின் பிரச்சினைகள் சுட்டிக்காட்டினேன்.


நாட்டுக்கு என்ன நடந்துள்ளது என்பதை தற்போது முழு நாடும் அறியும். நாங்கள் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 326 உள்ளூராட்சி சபைகளுக்காக போட்டியிடுகிறோம்.


உள்ளூராட்சி சபைகளில் தூய்மையான நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்காக நாங்கள் வெற்றி பெறுவோம். கட்சி என்ற வகையில் நாங்கள் சட்டத்திட்டங்களை உருவாக்குவோம்.


அந்த சட்டத்திட்டங்களுக்கு அமைய வேலை செய்ய வேண்டும். அடுத்த தேர்தலையும் குறி வைத்தே நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம். தேர்தல் ஒத்திவைக்கப்படுவது குறித்து எமக்கு எதனையும் கூற முடியாது.


நாங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளோம். தற்போதே நாங்கள் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கின்றோம். பொலன்நறுவையிலும் இலங்கை சகல மாவட்டங்களிலும் எங்களால் வெற்றி பெற முடியும்.


பட்டினியில் இருக்கும் மக்கள், மருந்துகள் இன்றி வைத்தியசாலையில் இறக்கின்றனர். இந்த தேர்தலிலேயே நாட்டில் நிலவும் ஏனைய பொருளாதார, அரசியல், கலாசார நெருக்கடிகள் என அனைத்தையும் மாற்றி நாட்டை சிறப்பான இடத்திற்கு கொண்டு வரும் அடித்தளம் இடப்படும்.


இதற்காக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எமக்கு அமோக வெற்றி கிடைக்கும் என எதிர்பாரக்கின்றோம் எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.