அரபுப் பிராந்தியம் உலகை வழிநடத்தமுன் நான் சாக மாட்டேன், ரொனால்டோவின் வருகை மிகப்பெரிய அறிகுறி, அரபுலகம் புதிய ஐரோப்பாவாக மாறும்
கால்பந்து வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரொனால்டோவுக்கு செளதி அரேபியா பணத்தை அள்ளிக் கொடுப்பதற்கான பின்னணியில், விளையாட்டு மட்டும்தான் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கால்பந்து உலகில் கடந்த 20 ஆண்டுகளாக தவிர்க்க முடியாத பெயராக நிலைத்துவிட்ட ரொனால்டோவை செளதி அரேபியாவின் அல்-நாசர் அணி மிகப்பெரிய தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆண்டுக்கு சுமார் 1,800 கோடி ரூபாய் வீதம் 2025-ம் ஆண்டு வரை இரண்டரை ஆண்டுகள் அந்த அணிக்காக ரொனால்டோ விளையாடுவார்.
அல்நாசர் அணியில் அதிகாரபூர்வமாக இணைந்த அறிமுக விழாவில் பேசிய ரொனால்டோ, ஐரோப்பாவில் பல சாதனைகளைப் படைத்துவிட்டதாகவும், செளதி அரேபியாவில் சில சாதனைகளை படைக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
ஆனால், நடந்து முடிந்த உலக கோப்பைத் தொடர் ரொனால்டோவுக்கு அவ்வளவு சிறப்பானதாக இல்லை.
போர்ச்சுகல் ஆடிய கடைசி இரு போட்டிகளிலும் தொடக்கத்திலேயே களமிறங்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை. கிளப் போட்டிகளில் மான்செஸ்டர் அணிக்காக நடப்பு சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி 3 கோல்களை மட்டுமே அவர் அடித்துள்ளார். அதிலும் ஒன்று பெனால்டி மூலம் கிடைத்தது.
ஆயினும், அல்-நாசர் அணியில் ரொனால்டோவின் வரவு ஒட்டுமொத்த அரபு உலகிலும் பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
அல்-நாசர் அணியும் தனது ஜெர்சியில் ரொனால்டோ இருக்கும் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
ஆனால், 37 வயதான ரொனால்டோவுக்கு அல்-நாசர் அணி ஊதியத்தை வாரிக் கொடுக்க முன்வந்திருப்பதை செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் சீர்திருத்தக் கொள்கைகளுடன் சில நிபுணர்கள் இணைத்துப் பார்க்கின்றனர்.
அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளின் நிழலில் இருந்து விடுபட்டு செளதி அரேபியாவை ஓர் உலக சக்தியாக உருவெடுக்கச் செய்ய வேண்டும் என்பதே பட்டத்து இளவரசரின் நோக்கம்.
உலக கோப்பையில் செளதி அரேபியா அணி தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த அர்ஜெண்டினாவை தோற்கடித்து ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
நவம்பர் 22ஆம் தேதியன்று போட்டியைக் காண வசதியாக, அந்த நேரத்தில் சவுதி அரேபியாவில் அமைச்சகங்கள், அரசுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
அர்ஜென்டீனாவை சவுதி அரேபியா வென்ற உற்சாக மிகுதியில், அடுத்த நாளை தேசிய விடுமுறை தினமாக மன்னர் சல்மான் அறிவித்தார்.
இந்த வெற்றியை சவுதி அரேபியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த அரபு உலகமும் கொண்டாடி மகிழ்ந்தது. சமூக வலைதளங்களில் அரபு நாடுகளைச் சேர்ந்த மக்கள் செளதியின் வெற்றியை தங்களது வெற்றியாகவே கருதி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
இந்த வெற்றி ஒன்றும் தற்செயலானது அல்ல. இந்த தருணத்திற்காக செளதி அரேபிய அணி 3 ஆண்டுகளாக கடுமையாக தயாராகி வந்ததாக அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சரும், இளவரசருமான அப்துல் அஜிஸ் பின் துர்கி அல் ஃபெய்சல் தெரிவித்தார். கால்பந்துக்கு செளதி விளையாட்டு அமைச்சகம் தரும் ஊக்கம், அதன் பாதை மற்றும் நோக்கங்களை தெளிவாக உணர்த்துகிறது.
கத்தாரில் உலகக்கோப்பை நடந்தேறிய போது, உலக கால்பந்து கூட்டமைப்பு (FIFA) தலைவர் இன்ஃபான்டினோவுடன் செளதி பட்டத்து இளவரசர் பின் சல்மான் ஒன்றாக பலமுறை தென்பட்டார். 2016-ல் வெளியிடப்பட்ட அவரது தொலைநோக்குத் திட்டம் 2030-ல் விளையாட்டுத் துறைக்கு பிரதான இடம் தரப்பட்டுள்ளது.
அதன் பிறகு, செளதி அரேபியாவின் விளையாட்டு உலகில் மிகப்பெரிய மாற்றங்களைக் காண முடிந்தது.
2030-ம் ஆண்டிற்குள் விளையாட்டில் மக்களின் பங்களிப்பை 40 சதவீதமாக உயர்த்துவது, சர்வதேச அரங்கில் சவுதி விளையாட்டு வீரர்களின் செயல்பாட்டை மேம்படுத்துவது, விளையாட்டு சார்ந்த பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவது ஆகிய 3 முக்கிய நோக்கங்களை இந்த தொலைநோக்குத் திட்டம் கொண்டுள்ளது.
பட்டத்து இளவரசர் பின் சல்மான் பேசிய வீடியோ ஒன்றை கால்பந்து பத்திரிகையாளரான யூரி லெவி பகிர்ந்திருக்கிறார்.
அந்த வீடியோவில், ரொனால்டோவின் செளதி அரேபிய வருகை மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறி என்று பட்டத்து இளவரசர் கூறியிருக்கிறார். அரபு பிராந்தியம் புதிய ஐரோப்பாவாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அடுத்த 5 ஆண்டுகளில் செளதி அரேபியா முற்றிலும் வேறானதாக காட்சியளிக்கும், பஹ்ரைன், குவைத் மட்டுமின்றி, எங்களுடன் முரண்படும் கத்தாரும் கூட முற்றிலுமாக மாறிவிடும். ஏனெனில் அவை திடமான பொருளாதார வலிமையை கொண்டுள்ளன," என்று அந்த வீடியோவில் பின் சல்மான் கூறுகிறார்.
"ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், லெபனான், ஜோர்டான், எகிப்து, இராக் ஆகியவையும் விதிவிலக்கு அல்ல. அடுத்த 5 ஆண்டுகளில் நாங்கள் வெற்றிகரமாக சாதித்துக் காட்டினால் பல நாடுகள் எங்களின் அடிச்சுவட்டை பின்தொடர்வார்கள்" என்கிறார் அவர்.
"அரபு பிராந்தியத்தில் அடுத்த 30 ஆண்டுகளில் புதிய மறுமலர்ச்சி ஏற்படும். இது செளதியின் போராட்டம். இது என்னுடைய போராட்டம், உலகை அரபு பிராந்தியம் வழிநடத்துவதை காணும் முன்பாக நான் சாக மாட்டேன். இந்த நோக்கம் 100 சதவீதம் நிறைவேறும்," என்கிறார் அவர் உறுதியுடன்.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் பயின்ற, சர்வதேச அரசியல் விவகாரங்கள் குறித்து தொடர்ச்சியாக கருத்துகளை பகிர்ந்து வரும் கோகுல் சேஹ்னியும் சவுதி பட்டத்து இளவரசரின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மதத்தை முன்னிறுத்துவது தவிர்த்து, செளதி அரேபியா நல்ல வலிமையான, நடைமுறை சாத்தியமுள்ள சக்தியாக திகழ்ந்தாலும், இன்னும் மேலேழ விரும்புகிறது.
ரொனால்டோவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானதும், "வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் எங்கள் அணியை மட்டுமின்றி, எங்கள் கால்பந்து லீக், எங்கள் தேசம் மற்றும் எதிர்கால சந்ததியினரையும் சிறப்பான வெற்றியை நோக்கிச் செலுத்தப் போகிறது. அவர்களின் சிறந்த திறனை வெளிப்படுத்த ஊக்கம் தரப் போகிறது" என்று அல்நாசர் அணி ட்வீட் செய்துள்ளது.
அல்-நாசர் அணியுடனான ஒப்பந்தம் கால்பந்து வரலாற்றில் அதிக ஊதியம் பெற்ற வீரராக ரொனால்டோவை உயர்த்தியுள்ளது.
அதேநேரத்தில், அவரது நட்சத்திர அந்தஸ்து மூலம் செளதி அரேபியாவும் பயனடைந்துள்ளது.
2030-ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்தை நடத்த உரிமை கோரி செளதி அரேபியா செய்துள்ள முன்மொழிவுக்கு ரொனால்டோவின் வருகை வலு சேர்த்திருப்பதாக அரபு பிராந்தியத்தின் பொருளாதார இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ரொனால்டோவின் வருகையால் ஒட்டுமொத்த ஊடகத்தின் கவனமும் செளதி அரேபியாவை நோக்கி திரும்பியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது-
2030 உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்த எகிப்து, கிரீஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து சவுதி அரேபியா உரிமை கோரும் என்ற செளதி சுற்றுலா துறை அமைச்சர் அஹ்மது அல் காதிப்பின் கூற்றை அந்த இணையதளம் மேற்கோள்காட்டியுள்ளது.
வருடாந்திர பார்முலா ஒன் கார் பந்தயம், ஆசிய குளிர்கால விளையாட்டு ஆகிய சர்வதேச போட்டிகளை சவுதி அரேபியா ஏற்கனவே நடத்தியுள்ளது.
செளதி அரேபியாவில் ரொனால்டோ இணைந்துள்ள அல்-நாசர் அணி 1955-ஆம் ஆண்டு ரியாத் நகரில் உருவாக்கப்பட்டது.
செஞ்சுரி ப்ரஃபஷனல் லீக் (SPL) என்ற சவுதி கால்பந்து லீக்கில் விளையாடும் 18 அணிகளில் இதுவும் ஒன்று.
அந்த லீக்கில் அதிக கோல்களை (189) அடித்தவரான மஜிப் அப்துல்லா, இந்த அணியைச் சேர்ந்தவர்தான். விளையாடிய ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு கோல் வீதம் அவர் அடித்துள்ளார். .
செளதி கால்பந்து லீக்கில் அல்-ஹிலாலுக்குப் பிறகு அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றது அல்-நாசர் அணிதான். அல்-நாசர் அணி 9 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அந்த அணி கடைசியாக 2018-19 சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது.
Gol.com தளத்தின் கூற்றுப்படி, 1960-ம் ஆண்டில் அல்-நாசர் அணியின் நிர்வாகத்தை அப்போதைய செளதி இளவரசர் அப்துல் ரஹ்மான பின் சவுத் அல் சவுத் எடுத்துக் கொண்டார். செளதி லீக்கில் அதனை சிறந்த அணியாக மாற்றியதில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு.
2004-ம் ஆண்டில் அப்துல் ரஹ்மான பின் சவுத் அல் சவுத் இறந்த பிறகும், அல்-நாசர் அணிக்கு செளதி அரச குடும்பத்தின் நிதியுதவி தொடர்வதாகவும், அதன் மூலமே நட்சத்திர வீரர்களை அந்த அணியால் வாங்க முடிவதாகவும் நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டு, மற்றொரு சவுதி அணியான அல் ஹிலால், ரொனால்டோவுக்கு சுமார் 3,050 கோடி அளித்து தங்கள் அணியில் சேருமாறு கோரியது. ஆனால் அப்போது மான்செஸ்டர் யுனைட்டட் அணியில் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறி அந்த அழைப்பை அவர் நிராகரித்தார்.
மான்செஸ்டர் யுனைட்டட் அணி பயிற்சியாளர் எரிக் டென் மீதான அதிருப்தியை கடந்த நவம்பரில் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக அவர் பகிர்ந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, அணி நிர்வாகத்துடனான உறவு மோசமடைந்ததால் மான்செஸ்டர் யுனைட்டட் அணியில் இருந்து ரொனால்டோ விடுவிக்கப்பட்டார்.
Post a Comment