Header Ads



தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள விடயங்கள்


மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும்.


அதன்பொருட்டு, மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.


தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதாகக் கூறினாலும், தேர்தலை தடுக்கும் உத்தரவினை கோரி ஓய்வு பெற்ற கேர்ணல் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளார்.


இந்நிலையில்,  தற்போது தேர்தலை நடத்துவதால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியும் அரசாங்கத்தின் சில தரப்பினரும் கூறுகின்றனர்.


 இதனிடையே, உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகளை செல்லுபடியற்றதாக்குமாறு Writ கட்டளையினைக் கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் W.M.R.விஜேசுந்தர உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்திருந்தார்.


தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், நிதி அமைச்சின் செயலாளர், பிரதமர், அமைச்சரவையின் செயலாளர்,  சட்டமா அதிபர் உள்ளிட்டோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.


அரசியல் அமைப்பின் 140 ஆவது சரத்திற்கு அமைய, அவர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.


தேர்தல்கள் ஆணைக்குழு கூறுவதை போன்று, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஆகக்குறைந்தது 10 பில்லியன் ரூபா செலவாகும்.


நாட்டின் வருமானம் வெகுவாக குறைவடைந்துள்ள சந்தர்ப்பத்தில், உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதன் மூலம் நாட்டிற்கு அல்லது மக்களுக்கு கிடைக்கும் நன்மை என்னவென இந்த மனுவின் ஊடாக அவர் கேட்டுள்ளார்


உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களான 8 ,711 பேர் நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமையாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், தேர்தல்கள் முறைமையில் திருத்தம் அல்லது அரசியல் கட்சிகளின் நிதி நிர்வாகம் தொடர்பில் சட்டங்கள் வகுக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில், தேர்தல் ஒன்றை நடத்துவதினால் ஏற்படும் நன்மை என்னவெனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


கடன்களை பெற முடியாத சந்தர்ப்பத்தில், தேர்தலுக்கு செலவு செய்வதற்காக பணம் அச்சிடப்பட்டால் ஏற்படும் பண வீக்கம், பொருளாதார பாதிப்புகளால் மீண்டும் எரிபொருள், எரிவாயு இல்லாமல் போகும் எனவும் மின்சாரத்தை அதிக நேரம் துண்டிக்க வேண்டி ஏற்படும் எனவும் இதனால் மக்களின் அன்றாட வாழ்வில் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அதனால் தான் முன்வைத்துள்ள ஆவணங்களை பரிசீலித்து தனது மனுவை விசாரணக்கு எடுத்து தீர்ப்பு வழங்கும் வரை, தேர்தலுக்கான செயற்பாடுகளை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவினை பிறப்பிக்குமாறு ஓய்வுபெற்ற கேர்ணல் W.M.R. விஜயசுந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.

 

No comments

Powered by Blogger.