பள்ளிவாசலுக்கு அருகில் மோட்டார் சைக்கிள், வெடிகுண்டு செயலிழப்பு அதிகாரிகளுடன் விரைந்த விசேட அதிரடிப்படை
- ரஞ்சித் ராஜபக்ஸ -
மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத போலி வாகன இலக்கத்துடனான மோட்டார் சைக்கிளொன்றை நிறுத்திவிட்டு மாயமான இருவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகில் குறித்த மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைத்துவிட்டு பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளமை CCTV காணொளிகளில் தெரியவந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் புத்தளம் பகுதியிலிருந்து பாடசாலையொன்று நிதி சேகரிப்புக்காக 21ஆம் திகதி ஹட்டனுக்கு வருகைத் தந்த பின்னர், பள்ளிவாசலுக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வாடகை அறையொன்றில் தங்கியிருந்துள்ளனர்.
பள்ளிவாசல் நிர்வாகத்தின் அனுமதியின்றி சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, கடந்த 24ஆம் திகதி வரை ஹட்டன் பகுதியில் தங்கியிருந்து நிதியுதவி பெற்று அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் செயலாளர் மொஹமட் ஃபௌமி தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசலுக்கு அருகில் உரிமையாளரற்ற மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டமை தொடர்பில் நிர்வாகத்தால் ஹட்டன் பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவின் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பரிசோதித்துள்ளனர்.
இதனைடுயடுத்து, மோட்டார் சைக்கிள் ஹட்டன் பொலிஸாரின் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் காணப்பட்ட இலக்கத் தகடு தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்கள அதிகாரிகளிடம் வினவியபோது, குறித்த மோட்டார் சைக்கிள் மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோட்டார் சைக்கிள் வேறு குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறியவும், மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேக நபர்களை கைது செய்யவும் ஹட்டன் பொலிஸார் ஊடாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment