Header Ads



பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவதில் பாதுகாப்பு, துறையினருக்கு உறுதுணையாக முஸ்லிம்கள் - றிஸ்வி முப்தி


கொழும்பு பண்டாரநாயக்க சர்வசேத மாநாட்டு மண்படத்தில்   இன்று (19) நடைபெற்ற  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின்  100வது ஆண்டு நிறைவு விழாவில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஜ. எம் றிஸ்வி கருத்து தெரிவிக்கையில்….


எமது நாடான இலங்கையானது பல்லினங்கள், பல சமயங்களைக் கொண்ட ஒரு நாடாகும். நாட்டின் முன்னேற்றமும், அபிவிருத்தியும், எமது அனைத்து சமூகங்களுக்கும் இடையிலான இணக்கமான உறவிலேயே தங்கியுள்ளது. எமது நாடு பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையிலான ஆரோக்கியமான உறவுகள் மூலம் வளம் பெற்றுள்ளதை வரலாறு சான்று பகர்கின்றது.


பிரிவினைவாத மோதல்களைக் குறைக்கும் வகையில் செயல்பட்ட தூரதரிசனம் மிக்கவர்களிடம் காணப்பட்ட அன்பு, அரவணைப்பு, பாசம் மற்றும் மரியாதை என்ற பண்புகளே வெற்றிகரமான தேசங்களின் அடிக்கற்களாக இருந்துள்ளன.


சாதி, இன, மத பேதமின்றி ஒவ்வொருவருக்குமிடையில் உறவுகளை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவது இந்நாட்டின் ஒவ்வொரு தேசப்பற்றுள்ள குடிமகனினதும் கடமையாகும். 


சகவாழ்வு, அனைவருக்கும் கல்வி, தேசிய பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகிய விடயங்கள்  தொடர்பிலும்   ஜம்இய்யாதுல் உலமா  பங்களிப்புக்களை  செய்து வருகிறது.


கடந்த தசாப்தங்களில் அனைத்து இனங்களுக்கும் மத்தியில் சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கு இந்நாட்டு முஸ்லிம்கள் அதீத முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளனர். இவ்விடயமானது மறைந்த வரலாற்று ஆசிரியரான கலாநிதி லோர்ணா தேவராஜா  எழுதிய “The Muslims of Sri Lanka – One Thousand Years of Ethnic Harmony” என்ற நூலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


சமய உரிமைகள் தொடர்பாக வரலாற்றிலேயே முதலாவதாக எழுதப்பட்ட யாப்பாக கருதப்படுவது எமது நபி (ஸல்) அவர்களினால் புனித மதீனா நகரில் அறிமுகப்படுத்தப்பட்ட மதீனா சாசனமாகும். இதுவே அரசுடனும், ஏனையே சமய தலைவர்களுடனும் இணைந்து சமய நெறியை நெறிப்படுத்துவது.  இதுவே, நெகிழ்வுத்தன்மை, சகிப்புத்தன்மை, சகவாழ்வு ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதன் முதன்மையான முக்கியத்துவத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கும் உணர்த்தியது.


எம்மைச் சூழ உள்ள சமகால சவால்களுக்கு மத்தியில், சமூகங்களுக்கு இடையிலான உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பான முயற்சிகளுக்கான தேவைகள் இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. அதன்படி, எமது நாட்டின் அர்ப்பணம் மிக்க தலைவர்களோடு தோளோடு தோள் நின்று உழைப்பது மிகவும் முன்னுரிமை மிக்கதாகும்.


மனிதவர்க்கத்தின் வெற்றியும் , சுபீட்சமும் நற்பண்புகளை பலப்படுத்தல், மனிதநேயம் மற்றும் சகோதரத்துவத்தை நிலைநிறுத்தல் ஆகியவற்றில் வெகுவாக தங்கியுள்ளது.


 இஸ்லாம் கல்வியை ஊக்கப்படுத்துவதோடு, எமது தயவின் கீழ் இருப்போருக்கு கற்பதற்கான ஏற்பாட்டை ப் பொறுப்புடையதாகவும் ஆக்குகின்றது.


 “அனைவருக்கும் கல்வி” என்ற கருப்பொருளில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவானது வறிய மாணவர்களுக்கான கல்வி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.


அதாவது ஓர் ஆத்மாவை காப்பாற்றுவது முழு மனித சமுதாயத்தையும் காப்பாற்றுவதற்கு சமனானதாகும் என்ற  தெய்வீகச் செய்தி குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அண்மைக் காலங்களில் பல சமூக, சமய நிறுவனங்கள், அரசியல் இயக்கங்கள் ஆகியன தீவிரப்போக்கு,  தீவிரவாதம் மற்றும் இன்னோரன்ன வன்முறையான செயற்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தன.


தனிப்பட்டவர்கள் சமயம், சமூக அநீதி, பொருளாதார கஷ்டங்கள், இனம் மற்றும் ஏனையவற்றை காரணங்காட்டி அங்கீகரிக்க முடியாத நடத்தைகளுக்கு  நியாயம் கற்பித்துள்ளனர்.


அந்த வகையில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவானது எமது குடிமக்களை இதுபோன்ற மன, உளரீதியான, உணர்ச்சி மிக்க , ஆன்மீக குறைபாடுகளில் இருந்தும் விடுவிப்பதற்கு உதவுவதை கடமையாகக் கொண்டுள்ளது.


ஆறு தசாப்தங்களாக படை வீரர்கள் எமது தாய் நாட்டின் இறைமையை பாதுகாப்பதில் தம்மை அர்ப்பணித்துள்ளனர். அனைத்து தேசப்பற்றுள்ள குடிமக்களும் இந்த தேசிய காரணிக்காக இன, மத வேறுபாடு இன்றி எல்லா வகைகளிலும் பங்களிப்பு செய்துள்ளனர்.


2006 ஆம் ஆண்டு மூதூரில், யுத்த சூழலில் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவதில் பாதுகாப்பு துறையினருக்கு உறுதுணையாக முஸ்லிம்கள் முக்கிய பங்காற்றியமை மறுக்க முடியாத உண்மையாகும்.


மேலும் ISIS  போன்ற தீவிரவாதத்துக்கு எதிராக கூட்டு அறிக்கை ஒன்றை 2015 இல் வெளியிட்ட உலகளாவிய நிறுவனங்களுள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முன்னணி வகிக்கின்றது.


 சமூக ஒற்றுமையை பேணும், முன்மாதிரியான சமுதாயம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கும், அச்சமுதாயமானது அறிஞர்களின் வழிகாட்டல்களின் கீழ் சமய விவகாரங்களை மிதமாக கையாள்வதற்கும், அதேவேளை மாற்றுக் கருத்துக்களை மதித்து, ஏனைய சமூகங்களுடனான அமைதியான சகவாழ்வை பேணியும், அதன் மூலம் நாட்டுக்கு பற்றுள்ள முறையில் பங்களிப்பு செய்யும் நோக்கிலும், இலங்கை முஸ்லிம்களுக்காக இஸ்லாமிய விடயங்கள் தொடர்பில் விளக்கங்கள் மற்றும் வழிகாட்டல்கள் அமைந்த ‘மன்ஹஜ்’ ஒன்றைப் பிரகடனம் செய்தது.


நிலையான அபிவிருத்தி தொடர்பாக, இஸ்லாம் மனித சமுதாயத்துக்கு ஆதரவாக இருப்பதை ஆர்வமூட்டுகின்றது. ‘அனைத்து படைப்புக்களும் ஒரே குடும்பமே’ என்ற சித்தாந்தத்தை அது பிரகடனப்படுத்துகின்றது. படைப்புக்களுக்கு இரக்கம் காட்டுவதினால் வல்லவனின் தெய்வீக அருளை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் மனித சமூகத்துக்கு பயனளிப்பவரே எம்மில் சிறந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அனர்த்த சூழ்நிலைகளான சுனாமி அனர்த்தம் முதல் அண்மைய வெள்ள அனர்த்தம் வரையிலும், 2006 மூதூர் யுத்த சூழல் முதல் துரதிர்ஷ்டவசமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வரைக்கும் நாம் மனித நேய உதவிகளை முன்னெடுத்தோம்.

No comments

Powered by Blogger.