கோட்டாபயவின் இல்லம் அருகே, அசம்பாவிதம் தடுக்கப்பட்டது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான, ஜெஸ்வெல் பிளேஸ் சந்தியில் தமது கைத்துப்பாக்கியால் சக பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரிஹானபொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் அதிகாரி, பழைய கொட்டாவ வீதியில் உள்ள ஜெஸ்வெல் சந்தியில், மற்றுமொரு கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜென்ட் ஆகியோருடன் வீதியோரத்தில் கடமையில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரான உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருந்தபோது உறங்கிவிட்டதாகவும், பொலிஸ் சார்ஜன்ட் அவருக்கு கடமையில் அக்கறையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தியதாகவும் இதனால் கோபமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர், சார்ஜென்ட்டை நோக்கி தமது ரீ-56 ரக துப்பாக்கியில் குறிவைத்ததாகக் கூறப்படுகிறது.
எனினும் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழும் முன், அருகிலிருந்து மற்றுமொரு அதிகாரியால் துப்பாக்கி பறிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார். TL
Post a Comment