ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் நடத்தையில் நாம் அதிருப்தியடைந்துள்ளோம் - மனோ
இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
“தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உங்கள் அறிவிக்கப்பட்ட செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும், எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் பேசுங்கள்” என நாம் திரும்ப, திரும்ப ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் கோரினோம். “எமது பிரச்சினைகள் பற்றி பேச உங்கள் தலைமையில் விசேட அதிகாரம் கொண்ட குழுவை நியமியுங்கள்” எனவும் கோரியுள்ளோம்.
ஆனால், பகிரங்க மேடைகளில் இருந்து கூறப்பட்ட சில கருத்துகளை தவிர, இது தொடர்பில் இதுவரை ஜனாதிபதி விக்கிரமசிங்க அதிகாரபூர்வமாக எதுவும் செய்யவில்லை. ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, பொறுப்பு கூறல் தொடர்புகளில் வடகிழக்கு கட்சிகளுடன் நடத்தப்படும் பேச்சுகளை நாம் முழு மனதுடன் வரவேற்கிறோம். ஆனால், மலையக தமிழரின் அரசியல் அபிலாஷைகள் இன்று “தோட்ட வரம்புகளுக்கு” வெளியே வளர்ந்து விட்டன என்பதை அனைத்து தரப்பினரும் அறிய வேண்டும். தேசிய இனப்பிரச்சினை என்பது இன்று வடக்கு கிழக்கை மட்டும் மையம் கொண்டதல்ல, அது தேசியமயமானது என்பதை அரசு புரிந்துக்கொள்ள வேண்டும்.
தமிழ் முற்போக்கு கூட்டணி, ஒரு எதிரணி கட்சியாக இருந்தாலும்கூட, “தேசிய இன பிரச்சினை தொடர்பில் பேச்சுகளை நடத்த ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இருக்கிறதா” என நாம் கேள்வி எழுப்பவில்லை. இந்நாட்டின் பிரதான பிரச்சினை தேசிய இன பிரச்சினை ஆகும். இந்நாட்டின் எந்தவொரு அரசு தலைவருக்கும் இதற்காக விசேட மக்களாணை அவசியமில்லை என்பது எமது நிலைப்பாடு. இந்த கருத்தை நாம் நமது வடகிழக்கு நட்பு கட்சிகளுடனும் பரிமாற்றி கொண்டுள்ளோம். ஆகவே, இன்று ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் இது தொடர்பான நடத்தையில் நாம் அதிருப்தியடைந்துள்ளோம்.
Post a Comment