"இது கூட்டு நரி தந்திரச் செயற்பாடு"
"சம்பந்தன் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுகின்றார்கள் என்றால் தமிழர்களின் குரலாக, அரசியல் அபிலாஷைகளின் இலக்கோடு பங்குபற்ற வேண்டும். அதற்கான கலந்துரையாடல்களை மக்கள் மத்தியில் நடத்த வேண்டும். ஆனால், அதற்கான திராணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை." என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினையைத் தன் காலத்தில் அதுவும் எதிர்வரும் 75 ஆவது சுதந்திர தினத்தோடு தீர்ப்பதற்கான திட்டத்தை அறிவிக்கப்போவதாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கையில் அண்மையில் சம்பந்தனைச் சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது கட்சி அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் எனக் கூறியிருக்கின்றார்.
இது தமிழர்களை ஏமாற்றுவதற்கான கூட்டு நரி தந்திரச் செயற்பாடு என்பதைத் தமிழர்கள் அறிவர்.
இதற்கு மத்தியில் "தோற்றாலும் வென்றாலும் நாங்கள் பேச்சுவார்த்தைகள் கலந்துகொள்வோம்" எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு நிற்பது நகைப்பை ஏற்படுத்துகின்றது.
இன்று இனப் பிரச்சினையைத் தீர்க்கப் போவதாகக் கூறும் ரணில் தலைமையிலான கட்சி அன்று சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாடாளுமன்றத்தில் முன்வைத்த தீர்வுத் திட்டத்தை நாடாளுமன்ற அமர்வின் போதே எரித்து நாடாளுமன்றத்தை அசிங்கப்படுத்தியது. இந்தக் கட்சியினரே யுத்த அழிவுக்கும் அடித்தளமிட்டார்கள்.
இனப் படுகொலையை நடத்தி யுத்த வெற்றியென மார்தட்டும் மகிந்த 13 பிளஸ் என உலகையே ஏமாற்றியதையும் நாம் அறிவோம்.
தொடர்ந்து நல்லாட்சி அரசு என மேடைக்கு வந்தவர்கள் நிலைமாறு கால நீதி என ஏமாற்றினர்.
அடுத்ததாகப் பதவிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச "நாட்டில் இனப் பிரச்சினை என்று ஒன்று இல்லை. இருப்பது பொருளாதார மற்றும் அபிவிருத்திப் பிரச்சினையே" என்றார்.
அதற்கெல்லாம் கைதட்டியவர்கள், கொடி தூக்கியவர்கள் தற்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என வந்து நிற்பது தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள அக்கறை அல்ல.
தங்களுடைய பதவியின் மீதும் தங்கள் எதிர்காலத்தின் மீதும் நாடு விழுந்திருக்கின்ற பொருளாதர வீழ்ச்சியிலிருந்தும் தப்பித்துக்கொள்வதற்கும் எடுக்கும் முயற்சியாகும். இவர்களோடு எந்த நம்பிக்கையில் தமிழ் தலைமைகள் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர் என்பதுவே தமிழர்களின் கேள்வி.
அத்தோடு எதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள்? தந்திர நரிகளோடு பேச்சுவார்த்தைக்குப் போய் இறுதியில் துண்டைக் காணோம், துணியை காணோம் என ஓடிவரும் நிலையே ஏற்படும்.
சம்பந்தன் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுகின்றார்கள் என்றால் தமிழர்களின் குரலாக, அரசியல் அபிலாஷைகளின் இலக்கோடு பங்குபற்ற வேண்டும். அதற்கான கலந்துரையாடல்களை மக்கள் மத்தியில் நடத்த வேண்டும்.
அதற்கான திராணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. இதுவரை காலமும் அவர்கள் அவ்வாறு செய்யவும் இல்லை. ரணிலின் அவசரத்துக்கு மத்தியில் இவர்கள் அதனைச் செய்யவும் முடியாது. செய்யப்போவதும் இல்லை."என்றுள்ளது.
அருட்தந்தை மா.சக்திவேல் அவர்களின் கருத்து வாசிக்கும் போது முக்கிய பொறுப்பான பதவி வகித்துக் கொண்டு ஏன் அவர் இவ்வாறு தெரிவிக்கின்றார் என்பது புரியவில்லை. தமிழ்மக்களின் பிரச்சினைகளைப் பொறுத்தவரை கடந்த கால அனுபவங்கள், அடைவுகளின் கசப்பான பக்கத்தை அழகாகக் கோடிட்டுக் காட்டுகின்றார். அதே நேரம் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முன்வரும் கட்சியினர் தமிழர்களின் குரலாக அரசியல் அபிலாஷைகளின் இலக்கோடு பங்குபற்ற வேண்டும் எனக்கூறுகின்றார். தமிழர்களின் மூத்த குரலான திரு சம்பந்தன் அவர்களும் அவர்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் துணைநின்று தோளோடு தோல் கொடுத்து தியாகத்துடன் செயல்படும் திரு சுமந்திரன் அவர்களின் கடந்தகால செயற்பாடுகளைப் பாரக்கும் போது அவர்கள் எவ்வளவோ தியாகங்களைச் செய்து தமிழர்களின் உரிமைகள் பற்றி அவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய நியாயமான கோரிக்கைகளைத் தவிர வேறு எந்தவொரு தனிப்பட்ட விடயங்களை அவர்கள் ஒருபோதும் முன்வைக்கவில்லை என்பது தான் எமது நிலைப்பாடாகும். நாம் தமிழர்கள் அல்ல. ஆனால் தமிழர்களும் ஏனைய மக்களைப் போன்று சுதந்திரமானவர்களாக முஸ்லிம்களோடு இணைந்து உறுதியான ஒரு தனியான சிறுபான்மையாக செயற்பட்டால் மாத்திரம் அவர்களின் இலக்குகளையும் அடையும் வாய்ப்புகள் அதிகம். அந்த நிலைப்பாட்டை தியாகத்துடன் எடுக்கும் தகுதியான முஸ்லிம் தலைவர்கள் இல்லை என்பதும் சுமந்திரன் போன்ற தமிழ் தலைவர்களுக்கு நன்றாகத் தெரியும். அருட்தந்தை நிதானமாக தமிழரசுக் கட்சியுடன் இணைந்து சென்றால் அவர்களுடைய இலக்ைக அடைவது சாத்தியமாகும். பிரிந்து சென்றால் பெரும்பான்மையின் இலக்குகளை அடைய அது பெரும்பான்மைக்குத் தான் நன்மையாக அமையும்.எனவே, முஸ்லிம் தலைவர்கள் எனத்தம்மை மார்தட்டிக் கொண்டிருப்பவர்களும் இந்த நிகழ்வுகளில் இருந்து பாடம் படித்து, தியாகத்துடன தமிழ்த்தலைவர்களுடன் இணைந்து சென்றால் அவரவர்களின் இலக்குகளை அடைய அது இலகுவாக அமையும்.
ReplyDelete