கார் சீட் பெல்ட் அணியாத பிரிட்டன் பிரதமர், மக்களை முட்டாள்களாக எடுத்துக் கொள்வதாக குற்றச்சாட்டு
42 வயதான அவருக்கு நிலையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக லன்காஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது.
“இதுவொரு தவறு என்பதை முழுமையாக ரிஷி சுனக் ஏற்றுக் கொண்டதாகவும், அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்றும் பிரதமர் இல்லம் தெரிவித்துள்ளது. மேலும் அபராதத்தையும் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளது.
சீட் பெல்ட் இருக்கும்போது, அதை அணியத் தவறுவோருக்கு 100 யூரோ அபராதம் விதிக்கப்படும்.
அது நீதிமன்றத்திற்குச் சென்றால், 500 பவுண்டுகளாக அதிகரிக்கலாம்.
வடக்கு பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அந்த வீடியோ படமாக்கப்பட்டது. அப்போது பிரதமர் லன்காஷயரில் இருந்தார்.
இந்தக் காணொளி, அரசாங்கத்தின் சமீபத்திய மேம்படுத்துதல் செலவினம் குறித்து விளம்பரப்படுத்துவதற்காக, ரிஷி சுனக்கின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
அவர் பிரதமராக இருக்கும்போது நிலையான அபராத அறிவிப்பைப் பெறுவது இது இரண்டாவது முறை.
2020ஆம் ஆண்டு ஜூனில் டவுனிங் ஸ்ட்ரீட்டில் அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்தநாள் கூட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம், கோவிட் ஊடரங்கு விதிகளை மீறியதற்காக போரிஸ் ஜான்சன், அவருடைய மனைவி கேரி ஜான்சன் ஆகியோருடன் சேர்த்து ரிஷி சுனக்கிற்கும், கடந்த ஏப்ரல் மாதத்தில் அபராதம் விதிக்கப்பட்டது.
நிலையான அபராத அறிவிப்புகள் சட்டத்தை மீறியதற்காக விதிக்கப்படுகிறது. மேலும், அபராதம் 28 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும் அல்லது அதை எதிர்க்கலாம்.
அபராதம் விதிக்கப்பட்டதை யாரேனும் எதிர்க்க முடிவு செய்தால், போலீசார் வழக்கை மறுபரிசீலனை செய்து, அபராதத்தைத் திரும்பப் பெறுவதா அல்லது நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதா என்பதை முடிவு செய்வார்கள்.
தொழிலாளர் கட்சியின் துனைத் தலைவர் ஏஞ்சலா ரெய்னர் ஒரு ட்வீட்டில் ரிஷி சுனக் தான் இதற்கு “முழுமையாகப் பொறுப்பு” எனக் கூறினார்.
லேபர் கட்சியின் செய்தித் தொடர்பாளர், “துரதிர்ஷ்டவசமாக ரிஷி சுனக்கின் காணொளி, அவருக்கே எதிராக மாறி அவரை நகைப்புக்குரியவராக மாற்றியுள்ளது,” எனக் கூறினார்.
தாராளவாத ஜனநாயக கட்சியினர், போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்ட இரண்டாவது பிரதமரான அவர், “போரிஸ் ஜான்சனை போலவே விதிகளைப் புறக்கணித்துள்ளார்,” என்று கூறினர்.
லிப் டெம் துணைத் தலைவர் டெய்சி கூப்பர், “பார்ட்டிகேட் முதல் சீட் பெல்ட் கேட் வரை, இந்த கன்சர்வேடிவ் அரசியல்வாதிகள் பிரிட்டிஷ் மக்களை முட்டாள்களாக எடுத்துக் கொள்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு விதி, மற்றவர்களுக்கு மற்றொரு விதி என்பதைப் போல அவர்கள் தொடர்ந்து நடந்துகொண்டாலும், இந்த அபராதம் பழைமைவாதிகள் இறுதியில் அதற்கான எதிர்வினையைப் பெறுவார்கள் என்பதை நினைவூட்டுகிறது,” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், பிளாக்பூல் சவுத் பகுதியின் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்காட் பென்டன் ரிஷி சுனக்கை ஆதரித்து, “அனைவரும் தவறு செய்வதுண்டு,” என்று கூறியுள்ளார்.
“நம் சமூகங்களில் நடக்கும் கடுமையான குற்றங்களைக் கையாள்வதில்” போலீசார் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறிய பென்டன், “இதை இங்கே விகிதாச்சாரத்தில் வைத்துக்கொள்வோம். ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான பிரிட்டன் மக்கள் இதேபோன்ற நிலையான அபராத அறிவிப்புகளைப் பெறுகிறார்கள்,” எனத் தெரிவித்தார்.
கார், வேன், மற்றும் பிற சரக்கு வாகனங்களில் சீட் பெல்ட் பொருத்தப்பட்டிருக்கும் பட்சத்தில், 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயணிகள் சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்ய வேண்டும். 14 வயதுக்குட்பட்ட பயணிகள் சீட் பெல்ட் அணிந்திருப்பதை உறுதி செய்யவேண்டியது ஓட்டுநர்களின் பொறுப்பு.
அதைச் செய்யாமல் இருக்க ஏதும் மருத்துவ காரணங்கள் இருந்தால், அதற்குரிய மருத்துவ சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அதோடு, காவல்துறை, தீயணைப்பு அல்லது பிற மீட்பு சேவைக்காகப் பயன்படுத்தப்படும் வாகனத்தில் இருப்பது போன்ற சூழல்களுக்கு இதில் விதிவிலக்குகள் உண்டு.
இவன் பிரதமராக இருக்க தகுதியே இல்லாத முட்டாள். இவன் அடுத்தமுறை வெற்றி பெறுவதே கடினம் தான்
ReplyDelete