Header Ads



கொழும்பில் சமையலறை திட்டம் ஆரம்பம்


வரலாற்றுச் சிறப்புமிக்க ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையை மையமாகக் கொண்ட சமூக சமையலறை திட்டம் நேற்று (01) ஆரம்பமானது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.


கொம்பனித்தெரு பொலிஸ் எல்லைக்குட்பட்ட ஹுனுபிட்டிய, கொம்பனித்தெரு, காலி முகத்திடல், இப்பன்வல, வேகந்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குள், உணவு கிடைப்பதில் சிரமம் உள்ள 2500 குடும்பங்களை இலக்காகக் கொண்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.


இந்த சமூக சமையலறைத் திட்டம் ஜனவரி 01 முதல் 40 நாட்களுக்கு தினந்தோறும் செயல்படுத்தப்படும். அந்த காலகட்டத்தில் இதன் மூலம் பயன்பெறும் குடும்பங்களில் உள்ள நபர்களை இலக்காகக் கொண்டு  சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், தொழில்சார் பயிற்சி வழங்குதல், சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் மூலம் இக்குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமையில், முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்கள், சர்வதேச லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப், உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கங்காராம விகாரையில் இந்த சமூக சமையலறைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

02.01.2023

No comments

Powered by Blogger.