இலங்கையின் கடன் விவகாரத்தில் அமெரிக்கா - சீனா மோதல்
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் சீனா சீர்குலைக்கிறது என்று அமெரிக்க தூதுவர் கூறியிருப்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இவ்வாறான விரிவுரைகளுக்கு செல்லும் முன்னர், அமெரிக்கா தம்மைத்தாமே சில கேள்விகள் கேட்டுக்கொள்ள வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை முடிவுகளில் வீட்டோ அதிகாரத்தை கொண்டிக்கும் நாடு எது? இலங்கையின் மொத்தக்கடன்களில் 40 வீதமான அதிக வட்டிவீதங்களுடன் கடனளிப்பவர்கள் எங்குள்ளவர்கள்? அமெரிக்க நீதிமன்றில் இலங்கையின் இயல்புநிலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது யார் என்ற கேள்விகளை அமெரிக்க தூதுவர் தம்மை தாமே கேட்டுக்கொள்ளவேண்டும் என்று சீனத் தூதரகம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கை மக்களுக்கு ஏற்கனவே 10000 மெட்ரிக் தொன் அரிசி, 9000 லீற்றர் டீசல், 5 பில்லியன் பெறுமதியான மருந்துகள் மற்றும் 3 மில்லியன் பெறுமதியான பாடசாலை சீருடைப் பொருட்களை சீனா அர்ப்பணிப்பாக வழங்கியுள்ளது. எனினும், இலங்கை மக்களுக்காக அமெரிக்கா எப்படி நடந்துகொண்டது? என்பதையும், அமெரிக்க உதவியின் அரசியல் முன்நிபந்தனைகள் என்ன என்றும் இலங்கை மக்கள் கேள்வி எழுப்பலாம் என்றும் சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. எனவே, சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முரண்பாடுகளை விதைப்பதற்குப் பதிலாக, இலங்கைக்காக, சர்வதேச நாணய நிதியத்தில் அமெரிக்கா ஏன் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் சீனத் தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது.
Post a Comment