முஸ்லிம் திணைக்கள பதில் பணிப்பாளராக சதுரி பிண்டோ நியமனம்
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை வருடகாலமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய இப்ராஹிம் அன்ஸார் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்தே இப்புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த இரு அதிகாரிகள் இத்திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர்களாக நீண்ட காலமாக தொடர்ந்தும் கடமையில் இருக்கும் போதே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு முஸ்லிம் அல்லாத ஒருவர் குறிப்பாக பெண் ஒருவர் முதன் முதலில் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் புதிதாக நியமனம் பெற்றுள்ள பதில் பணிப்பாளர் இன்றுவரை (04.01.2023) கடமையை பொறுப்பேற்கவில்லை என திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு ஒரு புதிய பணிப்பாளர் விரைவில் நியமிக்கப்படுவார் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க விடிவெள்ளிக்குத் தெரிவித்தார். இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கான நேர்முகப்பரீட்சை நேற்று புதன்கிழமை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli
(ஏ.ஆர்.ஏ.பரீல், றிப்தி அலி)
Post a Comment