Header Ads



இரக்க குணம் உடைய ஜெசிந்தா - நியூசிலாந்து பள்ளிவாசல் சூட்டுச் சம்பவ சூழல்களை திறம்பட கையாண்டார்


 குறைந்த வயதில் தலைமை பொறுப்பை அடைந்த பெண் தலைவர் என்று அழைக்கப்படும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக போவதாக அறிவித்துள்ளார். தலைமைப் பொறுப்புக்கான ஆற்றல் இதற்குமேல் தன்னிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


பணியில் இருந்த ஆறு சவாலான ஆண்டுகள் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை விவரிக்கும்போது ஜெசிந்தா சற்று தடுமாறினார். 


தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பிப்ரவரி  7ஆம் தேதிக்கு முன்பாக அவர் விலகவுள்ளார். அவருக்கான மாற்றுத் தலைவரை தேர்ந்தெடுக்க வரும்நாட்களில் வாக்கெடுப்பு நடைபெறும். 


நியூசிலாந்தில் அக்டோபர் 14ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.


42 வயதான ஜெசிந்தா ஆர்டெர்ன், கோடை விடுமுறையின் போது தனது எதிர்காலம் குறித்து யோசிக்க நேரம் எடுத்து கொண்டதாக தெரிவித்தார். "அந்த காலகட்டத்தில் அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வேன் என்று நம்பினேன், ஆனால், துரதிர்ஷ்டவசமாக, நான் அதை செய்யவில்லை. எனவே, நான் பதவியில் மேலும் தொடர்ந்தால் அது நியூசிலாந்துக்கு செய்யும் அவமதிப்பு" என்று செய்தியாளர்களிடம் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்தார். 


ஜெசிந்தா ஆர்டெர்ன் 2017 ஆம் ஆண்டில் 37 வயதில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது  உயரிய பதவியை பெற்ற உலகின் இளைய பெண்  தலைவர் என்று அறியப்பட்டார். 


ஒரு வருடம் கழித்து, அவர் குழந்தை பெற்றுகொண்டபோது, பதவியில் இருக்கும்போது குழந்தை பெற்றுகொண்ட இரண்டாவது பெண் தலைவர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். மேலும், அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில் தனது குழந்தையுடன் அவர் பங்கேற்றார்.


கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் அதன் பின்னான மந்தநிலை, கிறிஸ்ட்சர்ச் மசூதி துப்பாக்கிச் சூடு மற்றும் ஒயிட் ஐலேண்ட் எரிமலை வெடிப்பு என கடுமையான சூழல்களுக்கு மத்தியில் ஜெசிந்தா நியூசிலாந்தை வழிநடத்தினார். 


“அமைதியான சூழலுக்கு மத்தியில் உங்கள் நாட்டை வழிநடத்துவது என்று ஒன்று உண்டு. மற்றொன்று கடுமையான சூழலுக்கு மத்தியில் வழிநடத்துவது ” என்று அவர் கூறினார். 


இந்த நிகழ்வுகள் தனது பதவிக் காலத்தில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் தெரிவித்தார். 


ஜெசிந்தா ஆர்டெர்ன் தொழிலாளர் கட்சியை 2020 இல் மகத்தான தேர்தல் வெற்றிக்கு வழிநடத்தினார், ஆனால் அவரது உள்நாட்டுப் புகழ் சமீபத்திய மாதங்களில் பெருவாரியாக குறைந்துள்ளது என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.


எவ்வாறாயினும், தொழிலாளர் கட்சி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற நம்பிக்கையில் தான் பதவி விலகவில்லை என்றும் அது வெற்றிபெரும் என்றே தான் நினைப்பதாகவும் ஜெசிந்தா குறிப்பிட்டார். 


“இந்த சவாலை தாங்க நமக்கு புதிய தோள்கள் தேவை” என அவர் தெரிவித்தார். 


 துணைத் தலைவர் கிராண்ட் ராபர்ட்சன், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தலைமைத்துவத்திற்கான வாக்கெடுப்பில் போட்டியிடப் போவதில்லை என்று கூறினார். ஒரு வேட்பாளரால்  மூன்றில் இரண்டு பங்கு ஆதரவைப் பெற முடியாவிட்டால், வாக்குகள் தொழிலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களுக்குச் செல்லும்.


ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், புத்திசாலித்தனம், வலிமை மற்றும் இரக்க குணம் உடைய தலைவர் ஆர்டெர்ன் என்று பாராடியுள்ளார். 


"ஜெசிந்தா நியூசிலாந்திற்காக தீவிரமாக குரல் கொடுப்பவராகவும், பலருக்கு உத்வேகமாகவும், எனக்கு சிறந்த நண்பராகவும் இருந்து வருகிறார்" என்று அவர் ட்விட்டரில்  குறிப்பிட்டுள்ளார். 


ஜெசிந்தா ஆர்டெர்ன் காலநிலை மாற்றம், சமூக வீட்டுவசதி மற்றும் குழந்தைகளின் வறுமையைக் குறைத்தல் தொடர்பாக  தனது அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை, தான் பெருமைப்படக்கூடிய சாதனைகளாக பட்டியலிட்டார். 


எனினும், நியூசிலாந்து மக்கள் தன்னை "எப்போதும் அன்பாக இருக்க முயற்சிக்கும் ஒருவராக" நினைவில் கொள்வார்கள் என்று நம்புவதாக அவர் கூறினார்.


“நீங்கள் கனிவாகவும், ஆனால் வலிமையாகவும், பச்சாதாபமாகவும், ஆனால் தீர்க்கமாகவும், நம்பிக்கையுடனும், ஆனால் கவனம் செலுத்தக்கூடியவராகவும் இருக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் நியூசிலாந்தை விட்டுச் செல்கிறேன் என்று நம்புகிறேன். மேலும், எப்போது செல்ல வேண்டும் என்பதை அறிந்தவர், தனக்கான தலைவராக இருக்க முடியும்” என்றும் ஜெசிந்தா தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.