கொக்கை கழன்றதனால் ஏற்பட்ட விபரீதம்
(நானுஓயா நிருபர்)
நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் கிரிமிட்டி பிரதேசத்தில் உழவு இயந்திர கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து நேற்று(05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
நானுஓயா கொல்சி தோட்டத்தில் இருந்து மட்டுக்கலை தோட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு கொழுந்து ஏற்றிச் சென்றவர்களே உழவு இயந்திரத்தின் கொக்கை கழன்று அதன் பெட்டி தலைகீழாக வீழ்ந்ததாகவும் இதனைத் தொடர்ந்து அதில் பயணித்த நால்வரும் அதிலிருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் , இதில் படுகாயம் அடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வைத்தியசாலையில் தகவல்கள் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment