ஆத்திரத்தினால் பொங்கிய அலி சப்ரி, ராஜினாமா செய்யுமாறு கிரியெல்ல பிடிவாதம்
இவர்கள் தொடர்ந்தும் அரசாங்க்ததில் தொங்கிக்கொண்டிருப்பதற்கு வெட்கம் இல்லையா என கேள்வி கேட்ட லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. அமைச்சர் அலிசப்ரியை பார்த்து நீங்கள் சட்டத்தரணியா எனவும் சபையில் கேட்டதால், அமைச்சர் அலிசப்ரிக்கும் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி க்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சியின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கையில்,
கோத்தாபய ராஜபக்ஷ் அரசாங்கம் அரசியலமைப்பின் 21ஆம் திருத்தத்தை யாருடனும் கலந்துரையாடாமல் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொண்டனர்.
அரசாங்கத்துக்கு இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்ற தைரியத்திலேயே 21ஆம் திருத்தத்தை கொண்டுவந்தார்கள்.
கோத்தாபய ராஜபக்ஷ்வின் வழக்கு விசாரணைகளை மேற்கொண்டுவந்த சட்டத்தரணிகள் குழுவொன்றே 21ஆம் திருத்தத்தை மேற்கொண்டனர். அதனையே அமைச்சர் அலிசப்ரி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தார்.
இந்த திருத்தத்துக்கு நாங்கள் 25திருத்தங்களை சமர்ப்பித்திருந்தோம். ஒன்றையேனும் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது இணைந்து செயற்பட முன்வருவேண்டும் என அமைச்சர் அலிசப்ரி தெரிவிக்கின்றார். இவ்வாறு தெரிவிக்க இவர்களுக்கு வெட்கம் இல்லையா? இவர் ஒரு சட்டத்தரணியா என கேட்டார்.
இதன்போது சபையில் இருந்த அமைச்சர் அலிசப்ரி எழுந்து, நான் சட்டத்தரணி என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் சார்பாகவும் நீதிமன்றம் சென்றிருக்கிறேன்.
ஆனால் நீங்கள் ஒரு நாளாவது நீதிமன்றத்துக்கு சென்று வழக்குகளில் ஈடுபட்டிருக்கின்றீர்களா? அதனால் என்னை விமர்சிக்க உங்களுக்கு தகுதி இல்லை என்றார்.
தொடர்ந்து லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கையில், பாராளுமன்ற குழுக்களுக்கு சமர்ப்பிக்காமலே 21ஆம் திருத்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்துக்கொண்டனர்.
21ஆம் திருத்தம் சரி என்றால் ஏன் 3வருடங்களில் மாற்றினீர்கள்.21மூலம் அரச நிர்வாகம், அர நிறுனங்களை ஜனாதிபதிக்கு கீழ் கொண்டுவந்து செயற்பட்டனர். அதனால் ஒட்டுமொத்த அரச நிர்வாகத்தையும் செயலிழக்கச்செய்து, நாட்டை வங்குராேத்து அடையச்செய்தனர்.
இதன்போது மீண்டும் குறுக்கிட்ட அமைச்சர் அலிசப்ரி, 21ஆம் திருத்தம் முறையாகவே பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தோம். பொய் கருத்துக்களை தெரிவிக்கவேண்டாம் என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய லக்ஷ்மன் கிரியெல்ல, தேர்தல் நடத்த பணம் இல்லை என அரச சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்திருக்கின்றனர். நாட்டை வங்குராேத்து அடையச்செய்து இன்னும் அரசாங்கத்தில் இருப்பதற்கு வெட்கம் இல்லையா? அட்டைபோன்று அரசாங்கத்தில் தொங்கிக்கொண்டிருக்காமல் இராஜினாமா செய்யுங்கள்.
அத்துடன் தேர்தல் ஒன்றுக்கு அறிவிப்பு செய்துள்ள நிலையில் இந்த சட்டமூலத்தை கொண்டுவந்திருப்பது தேர்தலை பிற்போடுவதற்காகும். தேர்தலை பிற்போட்டால் நீதிமன்றம் செல்வோம். அதேநேரம் தேர்தலை பிற்போடுவதன் மூலம் நாட்டில் பாரிய பிளவு ஏற்படும் என்பதை அரசாங்கத்துக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கின்றேன் என்றார்.
(வீரகேசரி)
எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
Post a Comment