கனடாவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு - தூதுவரை அழைத்து, எதிர்ப்பை வெளியிட்டது இலங்கை
இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் இரண்டு இராணுவ உறுப்பினர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கும் கனடாவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (11) காலை கனேடிய உயர்ஸ்தானிகரை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து உத்தியோகபூர்வமாக எதிர்ப்புத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச உட்பட நான்கு இலங்கையர்களுக்கு எதிராக தடைகளை விதிக்க தீர்மானித்துள்ளதாக கனேடிய அரசாங்கம் நேற்று (10) அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் கனேடிய அரசாங்கம் இந்த தடைகளை விதித்து வந்தது.
இவ்வாறான தடைகளை விதித்துள்ள நிலையில், இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட நால்வருக்கும் கனடாவில் குடியேற்றவோ அல்லது அகதிகள் பாதுகாப்போ கிடைக்காது என கனேடிய அரசாங்கம் நேற்று அறிவித்தது.
மேலும் அவர்களால் கனடா அல்லது அதன் குடிமக்களுடன் எந்த வியாபாரத்திலும் ஈடுபட முடியாது.
கனடாவில் அவர்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஏதும் இருந்தால் அவை தடை செய்யப்படும் என்றும் கனேடிய அரசாங்கம் வலியுறுத்துகிறது.
Post a Comment