ஹிஸ்புல்லாஹ் அப்படிச் செய்யவில்லை - முழக்கம் மஜீத்
1989ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றியீட்டி தனது பாராளுமன்ற அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். கட்சியின் ஸ்தாபக தலைவர் MHM அஷ்ரஃப் அவர்களின் மறைவைத் தொடர்ந்து கட்சியில் உள்ள சிலர் பிரிந்து சென்று தங்கள் தங்களுக்கான அரசியல் கட்சியை ஆரம்பித்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டனர்.
எனினும் நண்பர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸை விட்டு விலகி நின்றபோதிலும் தனக்கென்று ஒரு அரசியல் கட்சியை தோற்றுவித்து முஸ்லிம் சமூகத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கவில்லை என்பது பாராட்டத்தக்க விடயமாகும்.
சிறுபான்மை சமூகம் பிளவுபட்டு நிற்கின்றபோது பேரினவாத சக்திகள் அவர்களது இலக்குகளை அடைந்து கொள்வது இலகுவாக இருந்தது.தலைவர் அஷ்ரஃப் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக ஒரு குரல் மாத்திரம் பேசுகின்ற போதுதான் அதற்குரியஅங்கீகாரத்தையும், பெருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்து வந்திருந்தார். அவரது நம்பிக்கைக்கு வலுவூட்டும் வகையில் மர்ஹும் MIM. முஹைதீன் அவர்கள் தான் தோற்றுவித்த கட்சியான முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியை கலைத்துவிட்டு முஸ்லிம் காங்கிரஸுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
முஸ்லிம் காங்கிரஸை விட்டு வேறு கட்சிகளை அமைத்துக் கொண்டவர்களால் தங்களது கட்சிகளின் பெயர்களில் இருந்த "முஸ்லிம்" என்ற வசனத்தை பேரினவாதிகளுக்கு பயந்து நீக்கிக் கொண்டதை தவிர முஸ்லிம் சமூகம் இழந்த உரிமை எதனையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை இன்னும் இன்னும் பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே முஸ்லிம் சமூகத்தின் பேரம் பேசும் சக்தியை வலுவடையச் செய்ய முடியும்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸில் இணைய விரும்பும் அனைவருக்கும் கட்சியின் கதவு எப்போதும் திறந்திருக்கும்.
ஏ.எல். அப்துல் மஜீத்
தவிசாளர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
Post a Comment