'நாக்-அவுட்' ஆன ரொனால்டோ அணி - கோல் அடிக்கவே திணறல்
செளதி அரேபிய கால்பந்து கிளப் அல் நாசருடன் ரொனால்டோவின் ஒப்பந்தம், ஆண்டுக்கு 20 கோடி யூரோ மதிப்புடையது. கால்பந்து வரலாற்றில் மிக அதிக ஊதியம் பெறும் வீரராக இந்த ஒப்பந்தம் அவரை மாற்றியது.
கால்பந்து வரலாற்றில் பெரும் ஊதியத்துடன் சௌதி அரேபியாவை சேர்ந்த அல்-நாசர் கிளப்பில் இணைந்துள்ள, கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் கிளப்பில் இருந்து விலகிய 2வது ஆட்டத்திலேயே கோல் அடிக்கத் தடுமாறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
5 முறை பேலோன் டோர் விருதை வென்றவரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தனது திறமையை வெளிப்படுத்த ஓரிரு வாய்ப்புகள் கிடைத்தன. எனினும், அல் இத்திஹாத் அணியின் தடுப்பாட்டத்தால் அவர் தடுக்கப்பட்டார்.
ஆட்டம் தொடங்கிய 15வது நிமிடத்திலேயே அல் இத்திஹாத் அணியின் ரோமரின்ஹோ கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். இதேபோல் ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் அல் இத்திஹாத் அணி 2வது கோலை பதிவு செய்தது.
இம்முறை அந்த அணியின் அப்தர்ரஸாக் ஹமத் அல்லாஹ் கோல் அடித்தார். அல் நாசர் அணி தனது கோல் கணக்கைத் தொடங்க பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டாலும் பலன் கிடைக்காமலேயே இருந்தது. ஆண்டர்சன் தலிஸ்கா அல் நாசர் அணிக்காக 67வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.
இருப்பினும், இது வெற்றிக்குப் போதுமானதாக இல்லை. ஆட்டத்தின் 90வது நிமிடத்திலேயே அல் இத்திஹாத் அணியின் முகனாத் அல் ஷான்கிதி கோல் அடித்து 3-1 என முன்னிலை பெற வைத்தார்.
இந்தத் தோல்வி மூலம் சௌதி சூப்பர் கப் தொடரில் இருந்து அல் நாசர் அணி வெளியேறியுள்ளது. ஜனவரி 29ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் அல் இத்திஹாத் மற்றும் அல் ஃபை அணிகள் சந்திக்கின்றன.
இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் அல் நாசர் - எட்டிஃபாக் அணிகள் மோதின. அதில், 1-0 என்ற கணக்கில் அல் நாசர் அணி வெற்றி பெற்றபோது, ரொனால்டோ கோல் எதையும் பதிவு செய்யவில்லை.
அல் இத்திஹாத் அணியுடனான ஆட்டத்திலும் அவர் கோல் அடிக்காத நிலையில், அவர் கோல் அடிக்கத் தடுமாறி வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
அடுத்ததாக பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறும் சௌதி ப்ரோ லீக் தொடரின் ஆட்டத்தில் அல் ஃபத் அணியை அல் நாசர் அணி எதிர்கொள்கிறது. BBC
Post a Comment