Header Ads



வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களே, டொலர்களில் வீடுகளை வாங்க விரும்புகிறீர்களா..?


வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான நடுத்தர வர்க்க வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயற்திட்டத்தின் ஊக்குவிப்பு சர்வதேச மட்டத்தில் ஆரம்பமாகிறது. இலங்கையர்கள் அதிகம் வாழும் நாடுகளில் நடைபெறும் சுதந்திர விழாக்கள் மற்றும் மாநாடுகளுக்கு இந்த ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு. பிரசன்ன ரணதுங்க கூறினார்.


முதற்கட்டமாக, சுதந்திர தினத்துடன் இணைந்து டுபாயில் நடைபெறும் இலங்கை சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் சுதந்திர தினத்துடன் இணைந்து, துபாய் இலங்கை சுதந்திர  தினக்  கொண்டாட்டம் பெப்ரவரி 11 ஆம் திகதி துபாயில் உள்ள சப்ரீலில் நடைபெறவுள்ளதுடன், துபாய் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் 20,000க்கும் மேற்பட்ட இலங்கைத் தொழிலாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நாட்டின் டொலர் நெருக்கடிக்கு தீர்வாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால்  நிர்மாணிக்கப்பட்ட நடுத்தர வருமான வீடுகளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும்  வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்கள் கொள்வனவு செய்வதற்கு  விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி,  முதலாவது வீடு வீடு கடந்த செப்டம்பர் மாதம் விற்கப்பட்டது. துபாயில் வசிக்கும்  இலங்கையர் ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்டது.


இந்த வேலைத்திட்டத்தின் கீழ், இந்த வருடம் முதலாவது வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், கனடாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அவர் அதை 40,700 அமெரிக்க டொலருக்கு வாங்கினார், அதாவது நாட்டின் நாணயத்தில் சுமார் 15 மில்லியன் ரூபாய்.


தற்போது 11 வீடுகள் டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த வீடுகள்  பன்னிபிட்டிய, வீரமாவத்தையில்  வியத்புர வீடமைப்புத் தொகுதியில் அமைந்துள்ளது. தற்போது இந்த  அடுக்குமாடி குடியிருப்பில் 2 படுக்கையறைகள்   கொண்ட வீடுகள் முற்றாக விற்றுவிட்டதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.


துபாய், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஓமான் கத்தார் மற்றும் பிஜி தீவுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இந்த வீடுகளை வாங்கியுள்ளனர். வீடுகளுக்குரிய பணத்தை மொத்தமாக செலுத்துவதால்  10 சதவீதம் விலைக்கழிவும்  கிடைக்கும். மேலும் 5 வீடுகளை வாங்க வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதிகார சபை கூறியது.


நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டத்தின் கீழ் நடுத்தர வருமான வீடுகளை டொலருக்கு விற்பனை செய்யும் திட்டத்தின் கீழ் இதுவரை 5 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது. அதன்படி ஈட்டியுள்ள தொகை 502,170.93 டொலர்களாகும். இது இலங்கை நாணயத்தில் 181.2 மில்லியன் ரூபாவாகும். கடந்த ஆண்டு டொலர்களில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டு எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 5 இலட்சம் டொலர்கள் ஆகும்.  கடந்த ஆண்டு முடிவதற்குள் அந்த இலக்கை அடைந்து வெற்றி பெற்றதாக அந்த அதிகாரசபை  தெரிவித்துள்ளது.


நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான நடுத்தர வருமான  வீடுகளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் இவ்வருடம் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுவதே தமது இலக்கு எனவும் அந்த அதிகார சபை மேலும் தெரிவித்தது.


நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டு வந்த   கொழும்பு ஹார்பர் வியூ ரெசிடன்சீஸ் வீடமைப்புத் திட்டத்தின்  நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதால் அந்த  வீட்டுத் திட்டமும் டொலர்களுக்கு வீடுகளை விற்கும் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் என்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை கூறியது. இங்கு 400 வீடுகள் உள்ளன. மற்றும் ஒவ்வொரு வீட்டின் அளவும் 500 சதுர அடி ஆகும்.  அந்த வீட்டை வாங்குவதற்கு டொலர்களில்  செலுத்த செலுத்த வேண்டிய தொகை  40,000 டொலர்களாகும்.


வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு இந்த வீடுகளை கொள்வனவு செய்ய முடியுமாக இலங்கை மத்திய வங்கியின் முன்மொழிவுக்கு ஏற்ப திறக்கப்படுகின்ற விஷேட கணக்கு ஒன்றாகிய உள்நோக்கிய முதலீட்டு கணக்குகளை (INWARD INVESTMENT ACCOUNT) திறப்பதன் ஊடாக செயற்படுத்தலாம். நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.uda.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் மேலதிக தகவல்கள் மற்றும் தேவையான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் 077-7794016 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.