முஸ்லிம்களுக்கான தீர்வு பொதியை, தயார் செய்வது யார்..?
நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு காணப்படும் என அண்மையில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் கட்சிகள் உள்ளடங்கலாக நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளையும் அழைத்து இது தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் கட்சிகளும் தமக்கிடையே பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. பல வருடங்களின் பின்னர் ஊடகங்களிலும் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது குறித்த கதையாடல்கள் முக்கியத்துவம் பெறத்துவங்கியுள்ளன.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாட்டில் நீடிக்கும் இந்த இனப்பிரச்சினை விவகாரத்தை பிச்சைக்காரனின் புண் போல ஆட்சிக்கு வரும் அரசியல் தரப்புகள் மீண்டும் மீண்டும் கிளறியே வந்துள்ளன. அந்தப் புண்ணுக்கு நிரந்தரமாக மருந்து செய்வதை விடுத்து, தேர்தல்களில் வாக்கு வேட்டையில் ஈடுபடவும் மக்களைத் தூண்டி உணர்ச்சி அரசியல் செய்யவுமே இதனைப் பயன்படுத்தி வந்துள்னள.
இந் நிலையில்தான், தான் இப் பிரச்சினையை 75 ஆவது சுதந்திர தினத்தின் பின்னரும் விட்டுவைக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருக்கிறார். இக் கால எல்லைக்கு இன்னும் மூன்று வாரங்களே எஞ்சியிருக்கின்ற நிலையில், அதனை எவ்வாறு சாத்தியமாக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.
இதனிடையே, இத் தீர்வு முயற்சிகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, வடக்கிலுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியவுடனேயே, பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர், நாட்டிலுள்ள முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அமைச்சர்கள் மற்றும் ஆளும், எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஈடுபடுத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுவரை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றே ஜனாதிபதி கூறி வந்த நிலையில், தற்போது முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்படும் என பிரத்தியேகமாகக் குறிப்பிட்டிருக்கின்றமை வரவேற்கத்தக்கதாகும். அந்த வகையில் ஜனாதிபதியின் இந்த வாக்குறுதியை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கான அழுத்தங்களை வழங்க வேண்டியது முஸ்லிம் அரசியல் தரப்புகளின் கடப்பாடாகும்.
அதற்கு முன்னராக, முஸ்லிம் மக்கள் கடந்த காலத்தில் எதிர்நோக்கிய, சமகாலத்தில் எதிர்நோக்குகின்ற, எதிர்காலத்தில் முகங்கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் தெளிவான ஆவணப்படுத்தல்கள் நம்மிடம் இருக்கின்றதா என்ற கேள்விக்கு விடை காணப்பட வேண்டும்.
பேச்சுவார்த்தைக்கு அழைத்து, முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்ன என்று கேட்ட பின்னர் அவற்றை ஆவணப்படுத்த சிரமப்படுவதை விட, இப்போதே முஸ்லிம் அரசியல், சிவில் மற்றும் மார்க்க தரப்புகள் ஒன்றிணைந்து இதற்கான ஆவணம் ஒன்றைத் தயாரித்து தயாராகவிருப்பதே புத்திசாலித்தனமானதாகும்.
வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் எதிர்நோக்கின்ற காணி மற்றும் மீள்குடியேற்ற பிரச்சினைகள், தொல்பொருளின் பெயரால் இடம்பெறும் ஆக்கிரமிப்புகள், யுத்த காலத்தில் இடம்பெற்ற கடத்தல்கள், காணாமல்போதல்கள், படுகொலைகள் என்பன முறையாக தொகுக்கப்பட வேண்டும். அதேபோன்று யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கிளம்பிய இனவாதத்தினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்டயீடு வழங்குதல், வன்முறைகளுக்குக் காரணமானவர்களைத் தண்டித்தல் போன்ற கோரிக்கைகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அநியாயமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நஷ்டயீடும் வழங்கப்பட வேண்டும், எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரசாரங்கள், வன்முறைகள் தோற்றம் பெறாதவாறு பாதுகாப்பதற்கான பொறிமுறை ஒன்றுக்கு அரசாங்கம் உத்தரவாதம் வழங்க வேண்டும், முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்காது அதனை நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் முஸ்லிம்களின் சம்மதத்துடன் திருத்தம் செய்ய வேண்டும். என்பன போன்ற கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
எனவேதான் முஸ்லிம் சிவில் மற்றும் அரசியல் தரப்புகள் தமது வேறுபாடுகளை மறந்து முஸ்லிம் சமூகத்தின் சார்பில் தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் முன்வைக்கக் கூடிய தீர்வுப் பொதி ஒன்றை தயாரிக்க முன்வர வேண்டும். குறிப்பாக அரபு நாடுகள் மூலமாக இதற்கான அழுத்தத்தை அரசுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli
Post a Comment