முஸ்லிம் சமூகம் இப்போதேனும் கண் விழிக்க வேண்டும்
கொடூர சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட பின்னர், பொலித்தீன் பைகளில் இட்டு, புதைத்து, கொங்றீட் இட்டிருந்த நிலையில், பொலிசார் ஜனாஸாக்களை மீட்டிருந்தனர். இது குறித்த விசாரணைகளில், ஐஸ் போதைப் பொருளுடன் தொடர்புபட்ட பிரச்சினை இந்த இரட்டை கொலைகளின் பின்னணியில் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆம், மொஹம்மட் இக்பால் மொஹம்மட் அசார் 26 வயது இளைஞன். மொஹம்மட் அன்வர் மொஹம்மட் அர்பான் 28 வயதான இளைஞன். இவ்விருவரும் மாவனெல்லை – கிரிங்கதெனிய மற்றும் கெரமினியாவத்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இந்த இரு இளைஞர்களும் கடந்த 2022 நவம்பர் மாதம் 19 முதல் 25 ஆம் திகதிக்குள் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்களால் மாவனெல்லை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணவில்லை என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் மாவனெல்லை பொலிசார் முன்னெடுத்த விசாரணைகளில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் மாதங்கள் கடந்தன.
இந் நிலையில் தான் இவ்விசாரணைகள் கேகாலை வலய குற்ற விசாரணைப் பிரிவினருக்கு மாற்றப்பட்டது.
கேகாலை வலய குற்ற விசாரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரதீப் வீரசேகரவின் ஆலோசனைக்கு அமைய, அதன் பொறுப்பதிகாரி பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் அப்சரா அபேகுணவர்தன தலைமையிலான குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது, குறித்த விசாரணைக் குழுவில் உள்ளடங்கும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது ரம்புக்கனை – ஹுரீமலுவ பகுதியில் போதைப் பொருள் வர்த்தகர் எனக் கூறப்படும் ஹுரீமலுவ பர்ஹான் என்பவரது வீட்டில் இரு இளைஞர்கள் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டதாக தகவலளித்த நபர் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அவ்விரு இளைஞர்களும் வீட்டின் பின்னால் புதைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள தகவலாளி, தானும் சித்திரவதையை அனுபவித்து, மரணத்தின் பிடியிலிருந்து தப்பி வந்ததாக தெரிவித்துள்ளார்.
‘என்னை அவர்கள் மிகக் கொடூரமாக தாக்கினார்கள். அவ்வாறு நான் தாக்கப்படும் போது இரு இளைஞர்கள் அந்த வீட்டின் அறையொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஆயுதங்களால் வெட்டப்பட்டனர். வெட்டுக் காயங்களில் மிளகாய் பொடி தூவப்பட்டது. பின்னர் செனிடைசர் கொண்டு அவர்கள் கழுவப்பட்டார்கள்…. அந்த இரு இளைஞர்களும் அனுபவித்த நரக வேதனையை நான் என் கண்களால் கண்டேன்.’ என அவர் தகவல் அளித்திருந்தார்.
இது குறித்து பொலிஸ் கான்ஸ்டபிள் தனது பொறுப்பதிகாரியான அப்சரா அபேகுணவர்தன மற்றும் மேலதிகாரி உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரதீப் வீரசேகரவுக்கு அறிவித்த நிலையில், அவர்களது ஆலோசனைக்கு அமைய மேலதிக விசாரணைகள் நடாத்தப்பட்டன.
கொலையை கண்கண்ட சாட்சியாளரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, அது தொடர்பில் கேகாலை நீதிவான் வாசனா நவரட்ணவுக்கு அறிக்கை இடப்பட்டது. நீதிவானின் உத்தரவின் பேரில், கடந்த 12 ஆம் திகதி கேகாலை சட்ட வைத்திய அதிகாரியின் பங்கேற்புடன் ஹுரீமலுவ பர்ஹானின் வீட்டில் பொலிசார் தேடுதல் நடாத்தி, வீட்டின் பின்னால் கொங்றீட் இட்டு கோழிக் கூண்டு அமைக்கப்பட்டிருந்த இடத்தில் சாட்சியாளரின் அடையாளப்படுத்தலுடன் அகழ்வுகளை முன்னெடுத்தனர்.
இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் போதும் ஹுரீமலுவ பர்ஹான் மற்றும் மேலும் 3 பேர் இந்த குற்றத்துடன் தொடர்புபட்டுள்ளதை பொலிசார் அடையாளம் கண்டிருந்த போதும், அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கவில்லை. அவர்கள் தலைமறைவாக இருந்தமையே அதற்குக் காரணமாகும்.
பொலிஸ் விசாரணைகளின் படி, இந்த இரு இளைஞர்களும் சுமார் மூன்று நாட்களாக கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதில் 26 வயதான மொஹம்மட் இக்பால் மொஹம்மட் அசார் முதலில் உயிரிழந்துள்ளதுடன் அவரது ஜனாஸா முதலில் புதைக்கப்பட்டுள்ளது. முதலில் அகழ்வின் போது மீட்கப்பட்டதும் அவரது ஜனாஸாவே. பின்னர் மறு நாள் 28 வயதான மொஹம்மட் அன்வர் மொஹம்மட் அர்பான் உயிரிழந்துள்ளார். அவரையும் அதே இடத்துக்கு பக்கத்திலேயே சந்தேக நபர்கள் புதைத்துள்ளனர்.
இந் நிலையிலேயே தற்போது இரு சடலங்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை நடவடிக்கைக்காக கடந்த 12 ஆம் திகதி கேகாலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் விசாரணைகளின் பிரகாரம், ஜனாஸாவாக மீட்கப்பட்ட இரு இளைஞர்களும் போதைப் பொருள் பயன்பாட்டாளர்கள் என தெரியவந்துள்ளது. கடந்த 2022 நவம்பர் மாதம் நாடெங்கும் போதைப் பொருளுக்கு தட்டுப்பாடு நிலவியது. இந்த கால கட்டத்தில் தான் இவ்விரு இளைஞர்களும், ஹுரீமலுவ பர்ஹான் எனும் போதைப் பொருள் வர்த்தகர் என அறியப்படும் நபரிடம் ஐஸ் போதைப் பொருள் கொள்வனவு செய்ய சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான 28 வயதான மொஹம்மட் அன்வர் மொஹம்மட் அர்பான் என்பவரின் சகோதரருக்கும், ஹுரீமலுவ பர்ஹான் எனும் போதைப் பொருள் வர்த்தகருக்கும் இடையே, போதைப் பொருள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் காணப்பட்ட பிரச்சினை இக்கொலையை தூண்டியுள்ளதாக பொலிசார் நம்புகின்றனர்.
அதாவது மொஹம்மட் அன்வர் மொஹம்மட் அர்பானின் சகோதரர், ஹுரிமலுவ பர்ஹானிடம் ஐஸ் போதைப் பொருளினை பெற்றுக்கொண்டு பணம் கொடுக்காதிருந்த சம்பவம் ஒன்றினை மையப்படுத்தி, இவ் இரு இளைஞர்களும் ஐஸ் போதைப் பொருள் கொள்வனவு செய்ய சென்ற போது ஹுரீமலுவ பர்ஹானுடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதுவே இறுதியில் அவ்விருவரின் உயிரையும் பறித்துள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
அது மட்டுமன்றி, ஐஸ் போதைப் பொருள் கொள்வனவு செய்ய சென்றதாக கூறப்படும் அவ்விரு இளைஞர்களும், போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் அளிப்பவர்கள் என பர்ஹான் சந்தேகித்துள்ளதாகவும் அதனாலேயே அவர் அவ்விரு இளைஞர்களையும் மிகக் கொடூரமாக சித்திரவதை செய்துள்ளாதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
இவ்வாறான நிலையிலேயே குறித்த இரு இளைஞர்களினதும் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டன. கொலை செய்யப்பட்ட அவ்விரு இளைஞர்களின் ஜனாஸாக்களை சுற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொலித்தீன் ஹுரீமலுவ பர்ஹானின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டன.
இந் நிலையில் சந்தேக நபர்களை பொலிசார் தேடி வரும் நிலையில், இரு சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனெல்லை மற்றும் கெலி ஓய பகுதிகளில் வைத்து அவ்விருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரின் வீட்டிலிருந்து கொல்லப்பட்ட இளைஞர் ஒருவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது. எனினும் ஹுரிமலுவ பர்ஹான் உள்ளிட்ட மேலும் இருவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
இந் நிலையில் அவ்விருவரும் கேகாலை நீதிவான் வாசனா நவரத்ன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் இம்மாதம் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஹுரீமலுவ பர்ஹானை தேடி விசாரணைகள் தொடர்கின்றன.
அண்மைக்காலமாக பதிவாகும் குற்றச் செயல்களை எடுத்து நோக்கும் போது, போதைப் பொருள் குறிப்பாக ஐஸ் போதைப் பொருள் மற்றும் அதன் அடிப்படையில் புரியப்பட்ட பாரிய குற்றங்கள் முஸ்லிம் சமூகத்தில் அதிகரித்துச் செல்வதை காண முடிகின்றது. கடந்த 15 ஆம் திகதி கொலன்னாவை பகுதியில், 62 வயது மூதாட்டி ஒருவர், அவரது வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பெண் மற்றும் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளமையும் அதன் பின்னணியிலும் ஐஸ் போதைப் பொருள் மோகமே இருப்பதையும் அறிய முடிகின்றது.
இதனைவிட ஐஸ் போதைப் பொருளுடன் கடந்த ஒரு மாதத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில், குறிப்பிடத்தக்க அளவானவர்கள் முஸ்லிம்கள் என்பதும் கசப்பான உண்மையாகும்.
போதைப் பொருள் ஒரு புறமிருக்க, மாத்தறை பகுதியில் சொத்துக்காக தனது தாயை மகன் கொலை செய்த சம்பவமும் பதிவானது. இவை விரல் விட்டுச் சொல்லத்தக்க முஸ்லிம் சமூகத்துக்குள் பதிவான அண்மைய பாரிய குற்றச் செயல்களாகும்.
இவ்வாறான பாரிய குற்றச் செயல்களை வெறுமனே பொலிஸ் நடவடிக்கைகள் ஊடாக மட்டும் தடுத்துவிட முடியாது. குற்றங்களை இன மத அடிப்படையில் பார்ப்பது பொருத்தமற்றதாக இருப்பினும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இன, மத சமூக கட்டமைப்புக்களை காத்திரமாக பயன்படுத்த முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. அவ்வாறான நிலையில், முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் அதிகரித்துள்ள பாரிய குற்றங்களை கட்டுப்படுத்த காத்திரமான சமூக கட்டமைப்பின் அவசியம் மிக ஆழமாக உணரப்பட்டுள்ளது. இதற்காக முஸ்லிம் ஆன்மிக தலைமைகள், அரசியல் தலைமைகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதுடன் எமது பள்ளிவாசல்கள், பாடசாலைகள், சமூக அமைப்புக்களையும் பயன்படுத்த வேண்டும்.
மூலைக்கு மூலை போதைப் பொருள் வர்த்தகம் பரவியுள்ள சூழலில் அதனை மையப்படுத்திய குற்றங்களும் அதிகரிக்கும் நிலையில், நாளைய நாள் பாதுகாப்பானதாக அமைய வேண்டுமானால் முஸ்லிம் சமூகம் இப்போதேனும் கண் விழித்து சமூக மட்ட காத்திரமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
Vidivelli - எம்.எப்.எம்.பஸீர் -
Post a Comment