Header Ads



இப்ராஹிம் மௌலவி ஆஜராகவில்லை, நௌபர் மௌலவி பிணை விண்ணப்பத்திற்கு நாளை தீர்ப்பு


உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்துள்ள வழக்குகளில் இருந்து தம்மை விடுவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளை நிராகரித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்து, அந்த வழக்குகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனு மீதான தீர்ப்பை பெப்ரவரி 22 ஆம் திகதி அறிவிப்பதாக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் இன்று -04- அறிவித்தது.


இந்த மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதிகளான M.B.B.S.மொராயஸ், D.F.H.குணவர்தன ஆகியோர் இதனை அறிவித்துள்ளனர்.


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நட்டஈடு கோரி, தனிப்பட்ட ரீதியில் தமக்கு எதிராக அன்றி அரசாங்கத்தின் மீதே வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தனது மேன்முறையீட்டு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியமை உள்ளிட்ட மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 25 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணையை நாளை (05) வரை ஒத்திவைப்பதற்கு கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம்  தீர்மானித்துள்ளது.


இதற்கமைய, பிரதிவாதிகள் முன்வைத்த பிணை விண்ணப்பம் தொடர்பிலான தீர்ப்பு நாளை அறிவிக்கப்படவுள்ளது.


வழக்கின் 14 ஆவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள இப்ராஹிம் மௌலவி என்பவர் சிறைச்சாலைகள் அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதுடன், பிரதிவாதி சுகயீனமடைந்துள்ளதால், கண்டி சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.


அவரது உடல்நிலை தொடர்பிலான அறிக்கையொன்றை சிறைச்சாலைகள் வைத்திய அதிகாரியின் ஆலோசனையுடன் நாளை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் குழாம் இதன்போது சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.


இதேவேளை, மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும், வழக்கின் 13 ஆவது பிரிதிவாதி வழக்கு விசாரணையை எதிர்கொள்வதற்கு தகுந்த மனநிலையில் இருக்கின்றாரா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

No comments

Powered by Blogger.