மின்சாரத்தை வெட்டினால், சட்ட நடவடிக்கை - மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிப்பு
தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்ற நிலையிலேயே ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டனர்.
உயர் தர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இரவு வேளையில் முன்னெடுக்கப்படுகின்ற மின்வெட்டு தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடப்படுவதாகவும், இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் மின்சார சபை தெரிவித்தது.
இதனிடையே, ஜனவரி மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதை தாம் அனுமதிக்கவில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கிய கட்டளைக்கு அமைய, குறித்த காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை மேற்கொள்ளுமாறு, மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, வழங்கப்பட்ட கட்டளைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் 21 ஆவது சரத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும் என மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment