Header Ads



முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கப்படாது என்ற வாக்குறுதியை ஜனாதிபதி ரணில் மீறக்கூடாது


(எம்.எம்.அஸ்லம்)


இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2002 காலப்பகுதியில் வழங்கியிருந்த வாக்குறுதியை மீறக்கூடாது என அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா வலியுறுத்தியுள்ளது.


இது குறித்து மேற்படி உலமா சபையின் சார்பில் அதன் தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா மெளலவி , ஏ.எல்.நாசிர் கனி மெளலவி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;


தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவி வகித்தபோது 2002ஆம் ஆண்டு இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அவர் தலைமையில் அரசு- புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அவ்வேளையில் 11.10.2002ஆம் திகதியன்று கிழக்கு மாகாண ஜம்இய்யதுல் உலமாப் பிரதிநிதிகள் அதன் தலைவர் மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா தலைமையில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இவ்விடயம் பற்றி பேசியிருந்தோம். அவ்வேளையில், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்போது முஸ்லிம்களுக்கு எவ்வித அநீதியும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாதென உறுதியளித்திருந்தார்.


அத்துடன் அரசியல தீர்வு தொடர்பாக தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் தீர்வுத் திட்டங்களின் ஆவணத்தில் முஸ்லிம்களுக்குரிய தீர்வுத் திட்டமும் உள்ளடக்கப்படுமென்றும் தெரிவித்திருந்தார். அந்த வாக்குறுதியை உரிய நேரத்தில் அவர் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கின்றோம்.


கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நிலையில், இம்மாகாணம் வேறு எந்த மாகாணத்தோடும் இணைக்கப்படுவதை முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற விடயத்தை இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.


இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்றுக் கொள்ளும் நாம், ஒரு சமூகத்தின் பிரச்சினையைத் தீர்க்கப்போய் அதனால் மற்றொரு சமூகத்துக்கு பிரச்சினை ஏற்பட இடமளிக்கக் கூடாது என்ற விடயத்தையும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம் என்று அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.