‘நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று, இரவுதான் நான் நிம்மதியாக தூங்கினேன்’ - நியூசிலாந்து பிரதமர்
இந்தநிலையில் ‘பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யபோவதாக தான் அறிவித்தது குறித்து தனக்கு துளியளவும் வருத்தம் இல்லை’ என ஜெசிந்தா ஆர்டன் பேசியிருப்பது அவரது ஆதரவாளர்களையும், விமர்சகர்களையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.
இன்று -20- காலை நியூசிலாந்து நேப்பியர் விமான நிலையத்திற்கு அருகே தொழிலாளர் கட்சியின் அரசியல் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஜெசிந்தா ஆர்டன், ‘நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று இரவுதான் நான் நிம்மதியாக தூங்கினேன்’ என்று கூறியுள்ளார்.
நியூசிலாந்தின் அடுத்த பிரதமருக்கான தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடக்கவிருக்கிறது. அந்த தேர்தலை எதிர்கொள்வது ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சிக்கு கடினமான ஒன்றாகவே அமையும் என கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் தற்போது ஜெசிந்தாவின் ராஜினாமாவுக்கு பிறகு தொழிலாளர் கட்சியில் அடுத்ததாக பிரதமர் பதவிக்கு யாரை தேர்ந்தெடுக்கலாம் என்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுகுறித்து ஜெசிந்தா ஆர்டன் பேசும்போது, ‘எனது கட்சியில் நான் யாருக்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கபோவதில்லை’’ என கூறியுள்ளார்.
கவலைக்கிடமான நிலையிலிருந்து வெளிவந்து இப்போதுதான் பெருமூச்சுவிட்டுருப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெசிந்தா ஆர்டனின் இந்த வார்த்தைகள் சர்வதேச அளவில் பல விவாதங்களை எழுப்பியிருக்கிறது.
ஜெசிந்தா ஆர்டனை போலவே பல முக்கிய பிரபலங்களும் தங்களது ராஜிநாமா குறித்த அறிவிப்புகளை சமீப ஆண்டுகளில் வெளியிட்டனர். விளையாட்டு வீரர்கள் நயோமி ஒசாகா, ஆஷ் பார்டி மற்றும் விராட் கோலி ஆகியோரும், ஜேம்ஸ் பேக்கர் போன்ற முதலாளிகளும் இந்த பட்டியலில் சேருவர்.
ஆனால் இவர்கள் அனைவரிடம் இருந்தும் ஜெசிந்தா வேறுபட்டு நிற்கிறார். ஒரு குழந்தையின் தாயாக இருந்துக்கொண்டு அவர் தன்னுடைய நாட்டையும் கவனித்து வந்தார். ஒரு பிரதமராக அவர் தனது அலுவலக பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது குழந்தை பிறந்தது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவுக்கு பிறகு உலகிலேயே பிரதமராக இருக்கும்போது குழந்தை பெற்றுக்கொண்ட இரண்டாவது பெண் தலைவர் இவர்தான்.
வீட்டையும் நாட்டையும் ஒருசேர கவனித்து கொள்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. பல வழிகளில் அவருக்கு சோதனைகள் ஏற்பட்டுள்ளது. தங்களது நாட்டை வழிநடத்தும்போது பல சவாலான சூழ்நிலைகளை அவர் எதிர்கொண்டார். கோவிட் பேரிடர் காலம், அதன்பின் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, உள்நாட்டில் நடைபெற்ற கலவரங்கள் மற்றும் எரிமலை வெடிப்பு போன்ற பல அசாதாரணமான சூழ்நிலைகளை அவர் நேர்த்தியாக கையாண்டு வந்தார். ஆனால் இப்போது அவர் எடுத்திருக்கும் முடிவு என்பது வியாழனன்று அவர் தனது உரையில் குறிப்பிட்டது போல வெகுநாட்கள் நிலையாக யோசித்து கவனமாக எடுத்த முடிவாக தெரிகிறது.
ஒரு பெண் தாய்மை அடைந்த பின்பு இந்த சமூகம் அவர் மேல் வைக்கும் எதிர்பார்ப்புகளும், அதேப்போல் ஒரு தாய் தன் மீது தானே ஏற்படுத்திக் கொள்ளும் பொறுப்புகளும் கடினமானவை.
அந்த வகையில் தனது பயணம் முழுவதும் தன்மீது வைக்கப்பட்ட பல பொதுவிமர்சனங்களோடு ஜெசிந்தா ஆர்டன் போராட வேண்டியிருந்தது. பதவியேற்ற சில காலத்திலேயே தனது கர்ப்பம் குறித்து அறிவித்தது, பேறுகாலத்திற்கு வெறும் 6 வாரங்கள் மட்டுமே விடுப்பு எடுத்துக்கொண்டது என அவரின் பல செயல்கள் விவாதத்திற்குள்ளானது. ஆனால் அந்த சமயங்களில் எல்லாம் அவர் திடமாகத்தான் செயல்பட்டு வந்தார்.
`எனது மகள் சிறு குழந்தையாக இருந்ததால் அவளுக்கான எல்லா தேவைகளையும் நிறைவு செய்ய வேண்டும் என்ற பதட்டம் இருந்துக்கொண்டுதான் இருந்தது. ஆனால் அப்போது எனக்கு தேவையான எல்லா ஆதரவுகளும் உடன் துணையிருந்ததால் என்னால் உறுதியாக இருக்க முடிந்தது. அதனை எளிதாக கையாள முடிந்தது` என அன்றைய காலகட்டத்தில் அவர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த நூற்றாண்டிற்கு ஏற்றவாறு நவீனத்துவம் வாய்ந்த ஒரு தாயாக ஜெசிந்தா ஆர்டன் இருந்தார். குழந்தை பராமரிப்பில் தான் எதிர்கொள்ளும் விஷயங்களில் இருந்து, தனது மகளின் பிறந்தநாள் கேக்கை வடிவமைப்பதற்கு தனக்கு நேரும் போராட்டம் வரை அனைத்தையும் அவர் தனது சமூக வலைதளத்தில் உற்சாகமாக பகிர்ந்து வந்தார்.
ஆனால் கடைசியில் அவரால் இதற்கு மேல் எதையும் சமாளிக்க முடியாமல் போனது.
`அரசியல்வாதிகளும் மனிதர்கள்தான். எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைக்கிறோம். ஆனால் இப்போது எனக்கான நேரம் வந்துவிட்டது. தலைமை பொறுப்பிற்கான ஆற்றல் இதற்குமேல் என்னிடம் இல்லை.இனியும் பதவியில் நீடித்தால் அது நியூசிலாந்திற்கு நான் செய்யும் நியாயமாக இருக்காது` என்று வியாழக்கிழமை தான் ஆற்றிய உரையில் உணர்ச்சிவசப்பட்டு கூறினார் ஜெசிந்தா ஆர்டன்.
தனது குடும்பத்தினர் நிறைய தியாகம் செய்துவிட்டனர் என்றும் எனவே இதற்கு பிறகாவது அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்பது குறித்தும் அவர் பேசினார். தனது மகள் பள்ளிக்கு செல்லும்போது அவருக்காக அங்கே தான் உடனிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் தனது இணையரிடம் இனியாவது நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்ததாகவும் ஜெசிந்தா ஆர்டன் குறிப்பிட்டார்.
ஜெசிந்தா ஆர்டனின் இந்த முடிவு பலருக்கு ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்தாலும் மற்றொரு தரப்பினர் அவரது நிலையை புரிந்துக்கொண்டனர். அவரின் இக்கட்டான நிலையை உணர்ந்து அனுதாபப்படுகின்றனர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் வாழ்த்துகளால் நிறைந்து வருகிறது.
ஜெசிந்தா ஆர்டனின் இந்த முடிவில் நிச்சயம் அரசியல் கணக்குக்கள் இல்லாமல் இல்லை. பெருந்தொற்றுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் அவரது அரசு பல பொருளாதார சவால்களை எதிர்க்கொண்டது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அதனால் மக்கள் மத்தியில் பொருளாதார ரீதியாக பல ஏற்றதாழ்வுகள் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து ஜெசிந்தா ஆர்டனின் கட்சியான தொழிலாளர் கட்சி தற்போது மக்கள் மத்தியில் தனக்கு இருந்த செல்வாக்கை தக்கவைத்து கொள்வதில் சற்று தடுமாறி வருகிறது.
எனவே ஜெசிந்தாவின் இந்த முடிவு தன்னோடு சேர்த்து தன்னுடைய கட்சியையும் காப்பாற்றிக்கொள்ளும் நகர்வாகவே பார்க்கப்படுகிறது. மற்றொருப்புறம் ஜெசிந்தா ஆர்டனின் இந்த முடிவை அவரது விமர்சகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஜெசிந்தா ஆர்டன் தனது பதவியிலிருந்து பிப்ரவரி 7 ஆம் தேதி விலகிக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையன்று தொழிலாளர் கட்சியினர் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கு தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் வாக்கெடுப்பு நடத்தவுள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு வாக்கை பெறுபவர்கள் நியூசிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவர்.
நியூசிலாந்தின் கல்வி மற்றும் காவல் துறையின் பொறுப்புகளை கவனித்துவரும் கிரிஸ் ஹிப்கின்ஸ் என்பவர் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 44 வயதான ஹிப்கின்ஸ் கோவிட் பெருந்தொற்று காலக்கட்டத்தில் நாட்டை நேர்த்தியாக கையாண்டார் என கூறப்படுகிறது. 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோவிட்-19 பெருந்தொற்றை சமாளிப்பதற்கு தனி அமைச்சராகவும் இவர் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருக்கு அடுத்ததாக நீதித்துறை அமைச்சராக இருக்கும் கிரி ஆலன் என்பவருக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மயோரி வம்சாவளியில் வந்த முதல் பெண் தலைவராக இருப்பார். அதேப்போல் ஓரின சேர்க்கையாளரான இவர் வெளிப்படையாக தலைவர் பொறுப்பேற்ற நியூசிலாந்தின் முதல் ஓரின சேர்க்கையாளர் என்ற சிறப்பையும் பெறுவார். இதுதவிர போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் மைக்கேல் வூட் என்பவருக்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஜெசிந்தா தனது முடிவால் கலவையான விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையிலும் பெண்களுக்காக ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறார்.
’தலைமை பொறுப்பில் இருக்கும் பெண்களுக்கும், எதிர்காலத்தில் தலைமை பதவிக்கு வரவேண்டுமென நினைக்கும் பெண் குழந்தைகளுக்கும் நான் ஒன்று சொல்லி கொள்கிறேன். உங்களுக்கென ஒரு குடும்பம் இருந்தாலும்; நீங்கள் நிச்சயமாக தலைமை பொறுப்பை வகிக்கலாம். அதனை நீங்கள் உங்களுடைய பாணியில் வெகுவாக கையாளலாம்’ என நம்பிக்கை தெரிவிக்கிறார் ஜெசிந்தா ஆர்டன். bbc
Post a Comment