ஒரு பில்லியன் அமெரிக்க டொலரினை, பெற்றுக்கொடுக்குமா ஜம்இய்யத்துல் உலமா..?
(ஏ.ஆர்.பரீல்)
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை 100 வருட சேவையைக் கொண்டாடும் வேளையில் இன்னும் சில தினங்களில் எமது நாடு சுதந்திரத்தின் 75 ஆவது வருட நிறைவைக் கொண்டாடவுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் உலமாசபை ஒவ்வொரு வருடமும் திறைசேரிக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலரினை பெற்றுக்கொடுப்பதற்கு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். சுதந்திரத்தின் 100 வருட நிறைவில் 25 பில்லியன் டொலர்களை நாம் திறைசேரிக்கு வழங்க துஆ செய்கிறோம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை 100 வருட நிறைவு விழா கடந்த 19 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் இடம் பெற்றது. நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலே ரிஸ்வி முப்தி இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில், கடந்த காலங்களில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை ஹலால் சான்றிதழ் வழங்கிய சந்தர்ப்பங்களில் நாட்டுக்கு மில்லியன் கணக்கில் அந்நிய செலாவணியைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
பாராளுமன்றம் 2002 இல் கோரிக்கை விடுத்ததற்கிணங்கவே ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளை உலமா சபை முன்னெடுத்தது. அன்றி உலமாசபை தன்னிச்சையாக ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.
ஹலால் சான்றிதழ் மூலம் நாட்டுக்கு அந்நிய செலாவணி கிட்டியதே ஒழிய பாதிப்பு ஏற்படவில்லை என்றார்.
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை வருடாந்தம் ஒரு பில்லியன் டொலர் திறைசேரிக்கு பெற்றுக்கொடுக்கும் முன்மொழிவு தொடர்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தியிடம் வினவியபோது ‘எங்கள் பிரார்த்தனைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் வலுச்சேர்த்துள்ளார்.எமது சுதந்திரத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவில் உலமா சபையின் 25 பில்லியன் டொலர்களுடன் மேலும் 75 பில்லியன் டொலர்கள் எங்களுக்குகிட்டவேண்டும் என தானும் பிரார்த்தனை செய்வதாக ஜனாதிபதி தெரிவித்தார் என்று கூறினார்.- Vidivelli
Post a Comment