சவூதியை 'அற்புதமான நாடு' என்று அழைத்த, ரொனால்டோவுக்கு அம்னெஸ்டியின் அறிவுரை
37 வயதான ரொனால்டோ, 2025 ஆம் ஆண்டு வரை சௌதி அரேபியாவின் அல் நாசர் கிளப்பில் ஆடுவதற்கு ஆண்டுக்கு 177 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் மதிப்புள்ள உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார். இந்திய மதிப்பின்படி அவருக்கு ஆண்டுக்கு ரூ.1770 கோடிக்கும் (இந்திய மதிப்பு) அதிகமான பணம் கிடைக்கும்.
ரொனால்டோவின் ஒப்பந்தம் "அரசியலுக்காக விளையாட்டைப் பயன்படுத்தும் உத்தியின் (ஸ்போர்ட்ஸ் வாஷிங்)" ஒரு பகுதியாகும் என்று அம்னெஸ்டி கூறுகிறது.
செவ்வாயன்று அல் நாசரால் அறிமுகப்படுத்தப்பட்ட ரொனால்டோ சௌதி அரேபியாவை "அற்புதமான நாடு" என்று அழைத்தார்.
அம்னெஸ்டியின் அறிவுரை
"சௌதி அரேபியாவை விமர்சனம் செய்யாமல் பாராட்டுகளை மட்டும் வழங்குவதற்கு பதிலாக, ரொனால்டோ தனது கணிசமான பொது தளத்தை பயன்படுத்தி நாட்டின் மனித உரிமைகள் பிரச்னைகளை கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்" என்று அம்னெஸ்டியின் மத்திய கிழக்கு ஆய்வாளர் டானா அகமது கூறினார்.
"கொலை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக சௌதி அரேபியா தொடர்ந்து மரண தண்டனையை நிறைவேற்றுகிறது. கடந்த ஆண்டு ஒரே நாளில், 81 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பலருக்கு நியாயமான விசாரணை நடக்கவில்லை”.
"கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது புகழையும் பிரபலம் என்கிற அந்தஸ்தையும் சௌதியின் ‘விளையாட்டு உத்திக்கான’ கருவியாக மாற்ற அனுமதிக்கக் கூடாது. நாட்டில் உள்ள எண்ணற்ற மனித உரிமைப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவதற்கு அல் நாசரில் இருக்கும் நேரத்தை அவர் பயன்படுத்த வேண்டும்." என்று டானா அகமது கோரியிருக்கிறார்.
Post a Comment