Header Ads



டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக, அதிக ரன் சராசரி கொண்டுள்ள சர்ப்ராஸ் கான்தான்


முதல் தர கிரிக்கெட்டில் ஜாம்பவான் டான்  பிராட்மேனுக்கு அடுத்தபடியாக அதிக ரன் சராசரி வைத்திருந்தும்கூட சர்ஃப்ராஸ் கானுக்கு இந்திய அணியில் இன்னும் இடம் கிடைக்கவில்லை.

இதையடுத்து, கிரிக்கெட் ஆடும் திறனைப் பார்க்காமல் உடலமைப்பைப் பார்க்கும் இந்திய தேர்வுக் குழுவினர் பேஷன் ஷோவுக்கு செல்லலாம் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சாடியுள்ளார். 


கிரிக்கெட்டில் ஒருநாள், இருபது ஓவர் என்று பல தரப்பட்ட வடிவங்கள் இருந்தாலும் டெஸ்ட் போட்டிகள்தான் ஒரு வீரரின் முழு திறனையும் மதிப்பீடு செய்யக்கூடியது என்பது கிரிக்கெட் வல்லுநர்கள் அடிக்கடி முன்வைக்கும் கூற்று. இதனால் ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்குமே டெஸ்ட் போட்டியில் ஆடிவிட வேண்டும் என்பது கனவாகவே இருக்கும். 


இந்தியாவைப் பொருத்தவரை, அத்தகைய பெருமை வாய்ந்த டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம் பிடிக்க உள்ளூர் முதல் தர போட்டியான ரஞ்சி போட்டியில் வெளிப்படுத்தும் திறனே முக்கிய அளவுகோலாகப் பார்க்கப்படுகிறது.


அந்த ரஞ்சி தொடரில் கடந்த 3 தொடர்களாக ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மேனான சர்ஃப்ராஸ் கானுக்கு இந்திய அணியில் இன்னும் கிடைக்கவில்லை. 


மும்பை அணிக்காக ஆடும் அவர், கடந்த 3 ரஞ்சி தொடர்களில் 17 ஆட்டங்களில் 2,485 ரன்களை குவித்துள்ளார். 2019-20 ரஞ்சி தொடரில் 928 ரன்களை குவித்த அவரது ரன் சராசரி 154.7.


2021-22 ரஞ்சி தொடரில் 982 ரன்களை குவித்த சர்ஃப்ராஸ் கானின் ரன் சராசரி 122.8. நடப்பு ரஞ்சி தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சர்ஃப்ராஸ் கான் 107.8 ரன் சராசரியுடன் மொத்தம் 431 ரன்களை குவித்துள்ளார். 


கடந்த 2 ரஞ்சி தொடர்களைப் போல நடப்புத் தொடரிலும் அதிக ரன்களைக் குவித்த பேட்ஸ்மேன் சர்ஃப்ராஸ் கான்தான். கடந்த 23 இன்னிங்ஸ்களில் 10 சதங்களை அவர் விளாசியுள்ளார். 


ரஞ்சியில் மொத்தம் 25 போட்டிகளில் 2,485 ரன்களைக் குவித்துள்ள சர்ஃப்ராஸ் கானின் ரன் சராசரி 82.83. உலகளாவிய அளவில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக அதிக ரன் சராசரி கொண்டிருப்பவர் சர்ஃப்ராஸ் கான்தான். பிராட்மேனின் ரன் சராசரி 95.14.


அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டதுமே, சர்ஃப்ராஸ் கான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரஞ்சி சாதனைகளை எடுத்துரைக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்தார்.


சர்பராஸ் கான் அத்துடன் நிற்கவில்லை. தனது ஏமாற்றத்தை களத்திலேயே வெளிப்படுத்தவும் செய்தார். 


டெல்லி அணிக்கு எதிராக அங்கே நடந்த ரஞ்சி ஆட்டத்தில், அருண் ஜெட்லி மைதானத்தில் கடினமான ஆடுகளத்தில் 65 ரன்களுக்காகவே 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த மும்பை அணிக்கு ஆபாத்பாந்தவனாக வந்து கரை சேர்த்தவர் சர்ஃப்ராஸ் கான் தான்.


ஐந்தாவது விக்கெட்டிற்கு களம் கண்ட அவர், அதிரடியாக சதம் கண்டு மும்பை அணியைத் தலை நிமிரச் செய்தார். அவரது சதத்தில் 14 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும். 


சதம் அடித்ததை கொண்டாடுகையில் சர்ஃப்ராஸ் கான் காட்டிய ஆக்ரோஷம், இந்திய தேர்வுக்குழுவினரை நோக்கியதாகவே அமைந்தது என்று கிரிக்கெட் நிபுணர்களும், ரசிகர்களும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தனர். 


தொடர்ந்து 3 ரஞ்சி தொடர்களில் அதிக ரன் குவித்தவர்; அடுத்தடுத்து 2 ரஞ்சி தொடர்களில் 900 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமைகளைக் கொண்டிருந்தும்கூட சர்ஃப்ராஸ் கானுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது பலரது புருவங்களை உயரச் செய்துள்ளது. 


சர்ஃப்ராஸ் கான் சற்று குண்டாக இருப்பதே இந்திய அணியில் தேர்வு செய்யப்படாததற்கான காரணமாகப் பலராலும் கூறப்படுகிறது. இதனால், இந்திய தேர்வுக் குழுவுக்கு அவரது உடல் தகுதி குறித்த சந்தேகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவரோ ரஞ்சி களத்தில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சதம் மேல் சதம் அடித்து அசத்துகிறார். 


களத்தில் சர்ஃப்ராஸ் கானின் செயல்பாடுகளையே அவரது உடல் தகுதிக்குச் சான்றாக முன்னாள் வீரர்கள் குறிப்பிடுகின்றனர். சதம் அடித்த பிறகு ஒருமுறைகூட அவர் தனது அணிக்கு ஃபீல்டிங் செய்ய வராமல் இருந்ததே இல்லை. களத்தில் முழுமையாக நின்று சிறப்பாக ஃபீல்டிங் செய்து வருகிறார் என்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். 


இதையடுத்து, ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவை நோக்கி நேரடியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். குறிப்பாக, இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பார்டர் - கவாஸ்கர் கோப்பையின் பெயரிலேயே உள்ள முன்னாள் இந்திய நட்சத்திர வீரரான சுனில் கவாஸ்கரும் சர்ஃப்ராஸ் கானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். 


"இந்திய கிரிக்கெட் அணி தேர்வில், வீரர்களின் கிரிக்கெட் ஆடும் திறனையும் அதற்கான உடல் தகுதியையும் மட்டுமே அளவுகோலாகக் கொள்ள வேண்டும். வீரர்களின் உருவம், உடலமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அணியை தேர்வு செய்யக்கூடாது," என்பது அவரது கருத்து. 


"மாறாக, ஸ்லிம்மான வீரர்கள் மட்டுமே அணிக்குத் தேவை என்றால் தேர்வுக்குழு நேராக ஃபேஷன் ஷோவுக்குச் செல்லலாம். அங்கே நல்ல மாடல்களை தேர்வு செய்து அவர்கள் கையில் பேட், பந்தைக் கொடுத்து  இந்திய அணியில் இடம் பெறச் செய்யலாம்," என்று கவாஸ்கர் காட்டமாகக் கூறியுள்ளார். 


சர்ஃப்ராஸ் கானை இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்குமாறு தேர்வுக்குழுவுக்கு அழுத்தங்கள் அதிகரிக்கும் நிலையில், அதற்கான காலமும் கனிந்து வருவதாகவே தோன்றுகிறது. விக்கெட் கீப்பரும், மத்திய வரிசை பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் சாலை விபத்தில் சிக்கி ஓய்வு எடுக்கும் வேளையில், மற்றொரு மத்திய வரிசை பேட்ஸ்மேனான ஸ்ரேயாசும் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். 


இதனால், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மத்திய வரிசை பேட்ஸ்மேனுக்கான இடம் ஒன்று காலியாக உள்ளது. அந்த இடத்திற்கு சர்ஃப்ராஸ் கான் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆகவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி இரு போட்டிகளில் சர்ஃப்ராஸ் கான் களம் காண அதிக வாய்ப்புள்ளது. 


3 ஐப.எல். தொடர்களில் தொடர்ச்சியாகச் சிறப்பாக ஆடியும் இந்திய அணியில் இடம் கிடைக்காத சூர்யகுமார், சற்று தாமதமாக வந்தாலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அழுத்தமாகத் தடம் பதித்துள்ளார்.


அவரைப் போலவே, ரஞ்சி கிரிக்கெட்டில் 3 தொடர்களில் அசத்தியுள்ள மற்றொரு மும்பை வீரரான சர்ஃப்ராஸ் கானும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து சர்வதேச கிரிக்கெட்லும் அசத்துவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

No comments

Powered by Blogger.