Header Ads



கட்சிகளிடையே மும்முரமாக பேச்சு, கூட்டணி அமைப்பது தொடர்பில் இழுபறி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்த கட்சிகள் மற்றும் குழுக்களுடன் நாளை மறுதினம் (09) முதல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.


தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.


அத்துடன், நேர்முக பரீட்சைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்த சில தரப்பினர் உள்ளிட்ட மேலும் சில கட்சிகளும், தமது கட்சியும் ஒரு நிலைபாட்டிற்கு வந்துள்ளதாகவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.


இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட குழுவினர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளனர்.


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ அல்லது வேறு எந்தக் கட்சியின் சின்னத்திலோ தமது அணி களமிறங்காது என கட்சியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பதவி நீக்கப்பட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான 9 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.


தமது அடையாளத்தை பாதுகாக்கும் வகையில், தமது அணி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் களமிறங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட தரப்பினர் கூறியுள்ளனர்.


அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்து நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 09 பேரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வகித்த பதவிகளிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டனர்.

 

இதனிடையே, உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இடதுசாரிக் கூட்டணியாக போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.


கூட்டணி அமைப்பது தொடர்பிலான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக  கட்சியின் பிரதி செயலாளர் சரத் ஏக்கநாயக்க கூறினார். 


இதுவரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 6-க்கும் அதிகமான கட்சிகளுடன், மொத்தமாக 20 கட்சிகள் தம்முடன் கைக்கோர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இதேவேளை, எதிர்வரும் தேர்தலில், முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் 

போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுடனான சந்திப்பு முள்ளியவளை பகுதியில் நடைபெற்றது.


இந்த சந்திப்பில் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண மற்றும் ஜக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பிரிவு ஊடக பேச்சாளர் உமாச்சந்திரா பிரகாஷ் மற்றும் வவுனியா முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.