மஜ்மா நகர் கொவிட் மையவாடி குறித்து, வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு
பத்து ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து இன மக்களின் 3634 உடல்கள் இங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டுள்ள மையவாடியை சிரமதானம் செய்யும் முதற்கட்ட வேலைகள் கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதன்படி, கல்குடா டைவர்ஸ் அமைப்பினர் 300 கப்ருகளையும், கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் 150 கப்ருகளையும், மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், கல்குடா தொண்டர் அணியின் ஏற்பாட்டில் 275 கப்ருகளும் சிரமதானம் செய்யப்பட்டன.
அதன் தொடரில், அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள பேருவளை, சீனக்கோட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் குடும்பத்தினர் முன்வந்து மையவாடி முழுவதையும் சீராக சிரமதானம் செய்வதற்கான செலவுகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அந்தவகையில் 25 வேலையாட்களுக்கு நாளாந்த கொடுப்பனவுகள் வழங்கி இச் சிரமதானத்தை அக் குடும்பத்தினர் மேற்கொண்டனர்.
25 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட சிரமதான வேலைத்திட்டம் ஒன்பது நாட்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை 2023.01.03 ஆம் திகதி நிறைவு பெற்றுள்ளது என தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
காடுகள், வயல் நிலங்களை அண்டிய பகுதியாக மையவாடி காணப்படுவதால் அங்கு காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருகின்றது. அதனால் மண்ணறைகளுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் காணப்பட்டது.
அதனைக் கருத்திற்கொண்டு தற்போது மையவாடியை சுற்றி யானை வேலி அமைக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் மையவாடியை சுற்றி சுற்று மதில் அமைக்கப்படவுள்ளது.
மையவாடியை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தில் அங்கு நிழல் தரும் மரங்கள் நடப்பட்டுள்ளன. தொடர்ந்தும் பல மரங்களை நட்டு அழகுபடுத்த தீர்மானித்துள்ளோம்.
மஜ்மா நகர் மையவாடி முழுவதும் அழகான முறையில் சிரமதானம் செய்யப்பட்டு நிறைவடைந்துள்ளது. தற்போது அங்கு சிரமதான நடவடிக்கைகள் செய்ய வேண்டிய தேவைப்பாடுகள் இல்லை.
எனவே எவரும் சிரமதானத்துக்காக வெளிப் பிரதேசங்களில் இருந்தும் உள்ளூர்களில் இருந்தும் வருவதையோ பணம் வழங்குவதையோ தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
மண்ணறைகளை தரிசித்து துஆக்களை செய்வதற்காக வேண்டி மாத்திரம் வழமைபோன்று அங்கு குடும்பத்தினர் சமுகமளிக்க முடியும்.
அத்துடன், சிரமதான பணிக்காக யாரும் யாருக்கும் ஏதேனும் கொடுப்பனவுகள், நிதியுதவிகள் செய்ய வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்பதையும் அறியத் தருகின்றேன் என்று ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர் மேலும் தெரிவித்தார்.
மஜ்மா நகர் மையாவாடியை சிரமதானம் செய்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய உள்ளூர், வெளியூர் உறவுகளுக்கும், பாரிய நிலப்பரப்பை சிரமதானம் செய்ய வேலையாட்களுக்கு நிதியுதவியை செய்த பேருவளை குடும்பத்துக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தவிசாளர் தெரிவித்தார்.- Vidivelli
எச்.எம்.எம்.பர்ஸான்
Post a Comment